சூரியன் இன்று மறைந்தால் நாளை உதிக்கும்: கருணாநிதி

""சூரியன் இன்றைக்கு மறைந்தால், நாளைக்கு உதிக்கும். இது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., அமைப்புச் செயலர் கல்யாணசுந்தரம் இல்லத் திருமணத்தில் கருணாநிதி பேசியது:முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைவின் போது, தி.மு.க., மீது வீண்பழி சுமத்தி மாற்றுக் கட்சியினர் செய்த பிரசாரத்தால்
, மக்கள் ஆதரவை பெருவாரியாக இழந்தோம். துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றிபெற்றேன். பின், படிப்படியாக பல வெற்றிகளைப் பெற்றோம்.இரு தினங்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா, சூரியன் மறைந்தது மறைந்தது தான். அஸ்தமனமானது, அஸ்தமனமானது தான். இனி உதிக்காது என்று சொல்லியிருக்கிறார். இன்றைக்கு சூரியன் மறைந்தால், நாளைக்கு உதிக்கும். இது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால், நாட்டை ஆளுபவர்களுக்குத் தெரியாதது ஆச்சரியமே.

பகலும், இரவும் மாறி,மாறி வருவதைப் போல, வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வருவது இயல்பே. தி.மு.க., நீதிக் கட்சியாக இருந்தபோது பெரும் தோல்விகளை சந்தித்தது. தி.மு.க., போட்டியிட்ட முதல் தேர்தலில், 15 இடங்களில் வென்றது. அதன்பின், 50 தொகுதிகளில் வெற்றி என, படிப்படியாக வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது. எனவே, தி.மு.க.,வை சுலபத்தில் யாரும் புறந்தள்ளி விட முடியாது.தி.மு.க., ஒரு இயக்கமோ, கட்சியோ அல்ல. அது இன உணர்வின் அடையாளம். இன உணர்வை அழித்துவிட்டு, தி.மு.க.,வை தோற்கடிப்போம் என்று சொன்னால், அது இயலாத காரியம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...