“நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது”

“நல்ல காலம் பொறக்குது, 

 நல்ல காலம் பொறக்குது”



மோடி ஆட்சியில் …யாருக்கு நல்ல காலம் ! யாருக்கு கேடுகாலம்!!

“நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது” என்று உடுக்கையடித்தார், மோடி. தனது இந்துத்துவ – பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு வளர்ச்சி, முன்னேற்றம் பேசினார். நாட்டு மக்களும் அதை நம்பி பெருவாரியாக வாக்களித்து அவரைப் பிரதமர் ஆக்கினார்கள்.
அதன் பிறகு, “நல்ல காலம் பொறந்து விட்டது, நல்ல காலம் பொறந்து விட்டது” என்ற குரல்கள் தொடங்கி, இப்போது அவை ஓங்கி ஒலிக்கின்றன. வாக்களித்த மக்களிடமிருந்து அல்ல. இந்துத்துவ – பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து. “இந்தியாவை இந்து நாடாக மாற்றியே தீருவோம்; இந்து ராஜ்ஜியம் அமைத்தே தீருவோம்; இராமர் கோவில் கட்டுவோம், கோட்சேவுக்குக் கோவில் கட்டுவோம், சிலை வைப்போம்; கிறித்துவர்களையும் இசுலாமியர்களையும் தாய் மதத்துக்குத் திரும்பச் செய்வோம்; அவர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவோம்; அவர்களின் அடையாளங்களை அழிப்போம்; சமஸ்கிருதத்தைத் திணிப்போம்; இந்துப் பெண்கள் 4 குழந்தைகள், இல்லை, இல்லை 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்; காதலர் தினங்களில் கட்டாயத் தாலி கட்டவைப்போம்…” என்று பெருங்கூச்சல்போட்டு, அவர்களுக்கு நல்ல காலம் பொறந்து விட்டதைக் கொண்டாடுகிறார்கள்.

குஜராத் போலி என்கவுண்டர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத மிருகம் டி.ஜி. வன்சாரா மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டதும், சிறைச்சாலை முன்பாக தாரை – தப்பட்டை முழங்க சங்க பரிவாரங்கள் அளித்த வரவேற்பு.
டி.ஜி. வன்சாரா
இதற்கெல்லாம் மோடி என்ன பதில் சொல்லுகிறார் என்று கேட்டு எதிர்க் கட்சிகள் இறைஞ்சுகின்றன. “இவை கண்டு மோடி மவுனம் காக்கக் கூடாது, இந்துத்துவ வாதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், கண்டிக்க வேண்டும்” என்று ஊடகங்கள் கெஞ்சுகின்றன. அதற்கு ஆதரவாக ஒபாமாவை ‘அழைக்கிறார்கள்’. இவற்றுக்கெல்லாம் மவுனசாட்சியாக இருக்கும் மோடி சத்தம் போடாமல் வேறு சில வேலைகளைச் செய்கிறார். ‘நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது’ என்று யாருக்குச் சொன்னார் என்பதைச் செயலில் காட்டுகிறார்.

நரோடா பாட்டியா வழக்கில் 26 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இப்போது மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குஜராத்தின் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானி.
மாயா கோத்னானி2002 கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு இசுலாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட மதவெறிப் படுகொலைகளை நிகழ்த்திய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மோடியின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்நானியைப் பிணையில் விடுதலை செய்துவிட்டார். மோடி – அமித் ஷா கும்பலின் உத்திரவின் பேரில் இஷ்ரத் ஜஹான் என்ற கல்லூரி மாணவியையும் மேலும் மூன்று இசுலாமியர்களையும் பிடித்துப் போலி என்கவுண்டர்களை நடத்தியதற்காகவும், சொராபுதீனையும் அவரது மனைவி கவுசர் பீயையும் கொன்று விட்டு அதற்குச் சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதியையும் போலி என்கவுண்டர் செய்ததற்காகவும் சி.பி.ஐ.யின் விசாரணைக் கைதியாக இருந்த குஜராத் கிரிமினல் போலீசு அதிகாரிகளை விடுதலை செய்து, பதவியமர்த்தியுள்ளது; கூடவே சிலருக்குப் பதவி உயர்வும் சலுகைகளும் வழங்கியுள்ளது. இந்தப் போலி என்கவுண்டர் வழக்குகளை விசாரித்து வரும் மும்பை சி.பி.ஐ. நீதிமன்றம், மும்பையை விட்டு வெளியே போகக்கூடாது எனத் தடுத்து வைத்திருக்கும் கிரிமினல் போலீசு அதிகாரி ராஜ்குமார் பாண்டியனுக்காக மும்பையிலேயே பதவியொன்றை உருவாக்கியது. இந்த வழக்குகளை விசாரித்து வரும் போலீசு அதிகாரிகளுக்கு மேலான சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இன்னொரு கிரிமினல் போலீசு அதிகாரி பி.பி. பாண்டேவை நியமித்துள்ளது. கிராமப்புற சுகாதார செயல் அதிகாரியாக இன்னொரு கிரிமினல் போலீசு அதிகாரி விபுல் அகர்வாலை நியமித்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்துவிட்டது.
இவர்களில், குஜராத் போலி என்கவுண்டர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட மனித மிருகம் டி.ஜி. வன்சாரா, மோடியின் விசுவாச வேட்டை நாயாக விளங்கியவர். தாரை – தப்பட்டை முழங்க, சங்கப் பரிவாரங்கள் திரண்டு சிறை முன்பு வரவேற்கப்பட்ட டி.ஜி. வன்சாரா பத்திரிக்கையாளரிடம் பெருமைபொங்கக் கூவினார்: “(குஜராத்) என்கவுண்டர் போலீசுக்காரர்களுக்கு நல்ல காலம் மீண்டும் வந்துவிட்டது!” தொடர்ந்து தமது எல்லாக் கிரிமினல் குற்றங்களையும் தேச நலனுக்காகச் செய்தவைகளென நியாயப்படுத்தினார். என்கவுண்டர்கள் எல்லாம் உண்மையானவை, தன் மீதான வழக்குகளும், விசாரணைகளும்தான் போலியானவை; அந்தப் பயங்கரவாதிகளைக் கொல்லாமலிருந்தால் இன்னொரு காஷ்மீர் உருவாகியிருக்கும்” என்று மோடியின் குரலை எதிரொலித்தார்.
கிரிமினல் போலீசு அதிகாரிகள்
பிணையில் விடுவிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டுள்ள குஜராத்தின் கிரிமினல் போலீசு அதிகாரிகளான பி.பி. பாண்டே, ராஜ்குமார் பாண்டியன் மற்றும் விபுல் அகர்வால்; மோடி-அமித் ஷா கும்பலின் உத்தரவின் பேரில் குஜராத்தில் பல என்கவுண்டர்களை நடத்திய அரசு பயங்கரவாதிகள்.
ஆனால், இதே வன்சாரா தான் 2013 மார்ச்சில் குஜராத் அரசுக்குப் பதவி விலகல் கடிதம் ஒன்றை எழுதி, அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், “மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கத்தில் போலீசு அமைச்சராக இருந்த அமித் ஷாவின் உத்திரவின் பேரில், அதன் விசுவாச படையினராகத்தான் எல்லா என்கவுண்டர்களையும் செய்தோம். அவரது நிர்வாகக் குளறுபடிகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 போலீசு அதிகாரிகளையும் குஜராத் அரசாங்கம் காப்பாற்றும் என்று நம்பியிருந்தோம். இப்போதைய போக்கில் சாவின் பிடியில்தான் நாங்கள் தள்ளப்படுவோம். எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நான்கு போலி என்கவுண்டர் கொலைகளும் குஜராத் அரசாங்கத்தின் கொள்கைப்படி மேலிடத்தில் இருந்து நேரடி உத்திரவு, வழிகாட்டுதல், கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டவைதாம். அதனால் காந்தி நகருக்குப் பதிலாக இந்த அரசாங்கம் நவமும்பையில் உள்ள தளோஜா மத்திய சிறையிலோ, அகமதாபாத்திலுள்ள சபர்மதி மத்திய சிறையிலோ இருக்க வேண்டும்” என்று ஆத்திரத்தைக் கொட்டினார்.
இந்திய ‘தேசத்தை’ பாதுகாப்பதற்காக, தான் போராடி வருவதாகவும் அதனால் தனது உயிருக்கு இசுலாமியப் பயங்கரவாதிகளால் ஆபத்துக்கள் சூழ்ந்திருப்பதாகவும் தொடர்ந்து நாடகமாடி போலி என்கவுண்டர் செய்வித்த மோடி-அமித் ஷா கும்பல், மத்தியிலும் ஆட்சியைப் பிடிக்க எத்தனித்துத் கொண்டிருந்த வேளையில் எட்டாண்டுகளாகச் சிறைப்பட்டிருக்கும் தம்மைக் கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் வெடித்த வன்சாரா வெளிப்படுத்திய உண்மைகள், இவை. இப்போதும் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை.

குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த இந்துவெறி பாசிசப் படுகொலை வழக்கைத் தொடர்ந்து நடத்திய ‘குற்றத்துக்காக’ மோடி அரசால் பொய் வழக்கு சோடிக்கப்பட்டு கிரிமினல் குற்றவாளியாக்கப்பட்டுள்ள தீஸ்தா சேதல்வாத்
தீஸ்தா சேதல்வாத்மிகச் சரியாகச் சொல்லுவதானால், இப்போது தனது எதிராளிகளைச் சிறையில் தள்ளி வதைக்க எத்தனிக்கும் அதேவேளையில், மோடி அவரது அரசியல் குற்றக் கூட்டாளிகளின் உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில்களில் சிக்கிக் கொண்டுள்ளார். வளர்ச்சி – முன்னேற்றம் என்ற முக்காடு போட்டு இந்துத்துவாவை ஒளித்து வைத்துக்கொண்டு, தனது ஆட்சி அதிகாரத்துக்குப் பாதிப்பு வராமல் காத்துக்கொள்ளும் மோடியின் தந்திரத்துக்கு இடையூறாக, அவர் ஆட்சியைக் கைப்பற்றவும் அதைத் தக்கவைத்துக் கொள்ளவும் முட்டுக்கொடுத்த ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவா கும்பலின் உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில். இசுலாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காக்கும் நாயகனாக மோடியைச் சுற்றி ஒளிவட்டம் போடுவதற்காக போலி என்கவுண்டர்களை அரங்கேற்றிய போலீசு கிரிமினல்கள் அந்த ஊழியத்துக்கான விலையைக் கேட்டு செய்வது, இன்னொரு உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில்.
2002 கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து தான் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அமைத்த பார்ப்பன சிறப்பு விசாரணைக் குழுவைச் சரிகட்டி மோடி தப்பித்துக் கொண்டார். ஆனால், மேற்கண்ட உருட்டல், மிரட்டல், பிளாக்மெயில்களுக்குப் பணிந்து மோடி-அமித் ஷா கும்பல் செய்யும் ஏற்பாடாகத்தான் இந்த ‘நல்லகாலம் பிறந்துள்ளது’.
குஜராத்தில் போலி என்கவுண்டர்களைத் திட்டமிட்டு நிகழ்த்திய கிரிமினல் பயங்கரவாதப் போலீசு – இந்துத்துவா பாசிசக் கூட்டுக் கொலைகாரர்களுக்குத்தான் நல்லகாலம் பிறந்து விட்டது. அதனால்தான் மோடி – அமித் ஷா குற்றக்கும்பல் ஆட்சிக்கு வந்ததும் எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஒவ்வொருவராக வெளிவருவதும் சலுகைகளோடு அதிகாரத்தில் அமர்த்தப்படுவதும் அரங்கேறுகிறது. 2002 குஜராத் படுகொலைகளை நிகழ்த்திய அந்த கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு மிகச்சிறிய அளவுக்குக்கூட எதிர்ப்புக் காட்டி அம்பலப்படுத்தும் நேர்மையான சில போலீசு அதிகாரிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் கெட்ட காலம் தொடங்கிவிட்டது.
"கிரீன் பீஸ்" நிறுவனத்தின் பிரச்சாரகர் பிரியா பிள்ளை.
ம.பி.யில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கார்ப்பரேன் மின் நிறுவனங்களை எதிர்த்த ‘குற்றத்துக்காக’, மோடி அரசால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள “கிரீன் பீஸ்” நிறுவனத்தின் பிரச்சாரகர் பிரியா பிள்ளை.
மோடி – அமித் ஷா கும்பல் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே சிறீகுமார், ராகுல் சர்மா, சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தியும், பொய் வழக்குகள் போட்டும் பழிவாங்கும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 2002 குஜராத் படுகொலைகளின்போது குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் அப்பாவி இசுலாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இசான் ஜாஃப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திய வழக்கை விடாமல் நடத்தியவர், அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் பொறுப்பாளரான தீஸ்தா செதல்வாட். அவரும் அவரது கணவர் ஜாவத் ஆனந்தும் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதாகக் கூறி நன்கொடை வசூலித்து, கையாடல் செய்துவிட்டதாக பொய்வழக்குப் போட்டுள்ளது, மோடி- அமித் ஷா கும்பல். அதைக் கிரிமினல் குற்றச்சாட்டாக்கி அவ்விருவரையும் கைது செய்து சிறையிலடைக்கவும் எத்தனிக்கிறது.
முந்தைய காங்கிரசு ஆட்சியில் சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் 155 தொழிற்சாலைத் திட்டங்களுக்கு மோடி- அமித் ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததும் அவசர அவசரமாக அனுமதி வழங்கியது. அத்திட்டங்களுக்கு எதிர்ப்புக் காட்டிவந்த “கிரீன் பீஸ்” என்ற சர்வதேசச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொண்டு நிறுவனத்தின் மீது அக்கும்பல் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலுள்ள மஹான் நிலக்கரி சுரங்கத்தில் இண்டால்கோ மற்றும், எஸ்ஸார் ஆகிய இரண்டு கார்ப்பரேட் தரகு மின்உற்பத்தி நிறுவனங்கள் பழங்குடி மக்களின் வனவுரிமைகளை மீறி அவர்களை வெளியேற்றுகின்றன. அதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்ற இலண்டனுக்குப் புறப்பட்ட “கிரீன்பீஸ்” நிறுவனத்தின் மூத்த பிரச்சாரகர் பிரியா பிள்ளையைத் தேடப்படும் நபராக அறிவித்துத் தடுத்துவைத்துள்ளது, மோடி- அமித் ஷா கும்பல்.
இதிலிருந்து தெரிகிறதா அண்டப் புளுகன் மோடி, “நல்ல காலம் பொறக்குது!” என்று சொன்னது, யாருக்கென்று!
-ஆர்.கே. வினவு

மறுக்கப்படும் நீதி - ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பும்

மறுக்கப்படும் நீதி - ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பும்
த்திரப் பிரதேச மாநிலம், ஹாஷிம்புராவில் 1987-ம் ஆண்டு முசுலீம் மக்கள் 42 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 16 பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து சனிக்கிழமை 21-03-2015 அன்று உத்திரவிட்டது. உத்திரப்பிரதேச மாநில ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த போலீஸ் கயவாளிகள்தான் மேற்கண்ட படுகொலையைச் செய்த குற்றவாளிகள்.
மீரட் கலவரம்
1987 மீரட் கலவரத்தின் போது உத்தர பிரதேச சிறப்பு ஆயுதப் படையினர். (படம் : நன்றி frontline)
இந்த படுகொலை வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
இந்தியாவின் படுகொலைகளில் முக்கியமான ஒன்றான ஹாஷிம்புரா படுகொலை 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்தது. உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தின் போது உ.பி மாநில சிறப்பு ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் ஹாஷிம்புரா பகுதியைச்சேர்ந்த முசுலீம் இளைஞர்கள் 65 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களை காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகருக்கு அருகில் சுட்டுக் கொன்ற போலீஸ் கயவர்கள், உடல்களை அருகாமையில் உள்ள கால்வாய்களில் வீசிச் சென்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இன்று செய்யும் படுகொலைகளுக்கு இந்திய துணை இராணுவப் படைகளும் இந்துமதவெறியர்களும் இப்படித்தான் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். கால்வாயில் வீசிச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு பிணங்கள் மிதந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இக்குற்றம் எப்படி நடந்தது, யார் யாரை கொன்றார்கள் அனைத்திற்கும் ஆதாரங்கள் இருந்தும் மனு தர்மம் வழுவாத நாட்டில் இந்து மதவெறிப் படுகொலையாளர்களை அதிலும் அவர்கள் போலீசு எனும் போது கைது செய்வது குறிப்பாக தண்டிப்பது சாத்தியமா என்ன?
இக்கொலையினைச் செய்த உ.பி மாநில ஆயுதப்படை பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களையும், பொதுவில் மனித உரிமையை நசுக்குவதற்கும் புகழ் பெற்றது. இவர்கள் செய்த குற்றங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பா.ஜ.க ஆட்சியில் அமராத காலத்திலேயே வட இந்தியா இப்படித்தான் இந்துமதவெறியின் செல்வாக்கில் இருந்தது. போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம், அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாகியே இருந்தது.
ஹாஷிம்புரா படுகொலைகள்
படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் கண்டறியப்பட்ட கால்வாய். (படம் : நன்றி frontline)
13 வருடங்களுக்குப் பிறகு 2000-ம் ஆண்டு மே மாதத்தில்தான் குற்றவாளிகளில் 16 பேர் சரணடைந்து சில நாட்களில் பிணையில் வெளிவந்தனர். இதற்கு முன்பே மூன்று போலிசார் இயற்கையாக மரணமடைந்து விட்டனர். காசியாபாத்தில் நடைபெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் 2002-ம் ஆண்டு, தில்லி விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்து மதவெறிக்கு ஒத்தூதுவதில் காசியபாத்திலிருந்து தில்லி மட்டும் வேறுபடுமா என்ன?
படுகொலை நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2007, மே, 24-ம் தேதி கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினர் லக்னோ சென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 615 மனுக்களை தாக்கல் செய்து காவல் துறை அதிகாரியிடம் வழக்கு குறித்த நிலையைக் கேட்டனர். அப்போதுதான் கொலைக்குற்றவாளிகள் அனைவரும் பணியில் இருப்பதும், அவர்களது பணிக்கால இரகசிய அறிக்கையில் இக்கொலை குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்தது.
இக்குற்றவாளிகளால் சுடப்பட்டு காயமடைந்து பிழைத்துக் கொண்ட ஐந்து பேர் வழக்கின் நேரடி சாட்சிகளாக 2007-ல் சேர்க்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. வட இந்தியாவில் இந்து முசுலீம் கலவரம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்தான். அதில் இந்துக்கள் சிறு எண்ணிக்கையிலும், முசுலீம்கள் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்படுவதும் உண்மை என்றாலும் அரசு, இராணுவம் என்று வரும் தாக்குதலில் முசுலீம்கள் மட்டும்தான் கொல்லப்படுவார்கள். அந்த வகையில் இது ‘இந்து நாடாகவே’ இருக்கிறது.
விபூதி நாராயணராய்
“உ.பி. போலிஸ் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்” – காவல்துறை அதிகாரி விபூதி நாராயணராய்
பிளாட்டூன் கமாண்டர் சுரீந்தர் பால் தலைமையில் ஆயுதப்படை போலிசார் ஹாஷிம்புரா சென்று மக்களை சுற்றி வளைத்து அதில் வயதானவர்கள், குழந்தைகளை விலக்கி 65 பேர்களை மட்டும் லாரியில் அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளிகளும், நெசவாளர்களும் ஆவர். முராத் நகரின் கங்கை கால்வாயில் அவர்களை நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக தலையில் சுட்டு தண்ணீரில் தள்ளி ரசிப்பதற்கு ஒரு பெரிய இந்து ஞான மரபின் பயிற்சி வேண்டும். அப்படி சுடும் போது சாலையில் பிற வண்டிகள் வந்த நிலையில் போலீசுக் குற்றவாளிகள் அப்படியே மிச்சம் இருந்தவர்களுடன் லாரியில் ஓடி விட்டனர். இப்படித்தான் ஐந்து பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் முராத் நகர் காவல் நிலையியத்தில் புகார் பதிவு செய்தார்.
பிறகு லாரியில் இருக்கும் மக்களை ஹிண்டான் ஆற்று கால்வாய் அருகே சுட்டுக் கொன்று வீசினர். அதிலும் இருவர் சுடப்பட்டு உயிர் பிழைத்து அருகாமை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதே உ. பி மாநிலத்தின் அருகாமை பீகாரில் உள்ள பாகல்பூரில்தான் போலீசு கயவாளிகள் 1980-ம் ஆண்டில் 31 விசாரணை கைதிகளின் கண்ணில் ஆசிட் ஊற்றி பார்வையை பறித்தனர். அந்த வகையில் இவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளை விஞ்சுகிறார்கள்.
ஹஷிம்புரா படுகொலை குறித்து பி.யூ.சி.எல் அமைப்பு 87-ம் ஆண்டிலேயே ஒரு குழு அமைத்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. இந்தியாவின் உண்மை முகத்தை அறிய வரும்புவோர் அதைப் படித்து பாருங்கள். 19 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் அரசின் அனைத்து உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்று பி.யு.சி.எல் மற்றுமொரு அறிக்கையையும் வெளியிட்டது.
படுகொலை நடந்த காலத்தில் அங்கே பணிபுரிந்த காவல் துறை அதிகாரி விபூதி நாராயண் ராய், இதை உ.பி. போலிஸ் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என்று குறிப்பிடுகிறார். காசியாபாத்திலிருந்து தில்லிக்கு வழக்கு மாற்றப்பட்டாலும் உத்திர பிரதேச அரசு எந்த ஆர்வத்தையும் இவ்வழக்கில் காட்டவில்லை என்று 2005-ல் வெளிவந்த ஃபிரண்ட்லைன் ஏடு குறிப்பிடுகிறது.
ஹாஷிம்புரா கொலைகள்
கொல்லப்பட்டவர்களின் படங்களுடன் நீதிக்குக் காத்திருக்கும் உறவினர்கள். (படம் : நன்றி thehindu.com)
இப்படி இருக்கும் போது குற்றம் நடந்து 27 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வரும்போதே அது எப்படி இருக்கும்? தற்போது தில்லி கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் ஜிண்டால் அளித்த தீர்ப்பின் படி, குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லையாம். குற்றவாளிகள் சரியாக அடையாளம் காட்டப்படவில்லையாம். ஆக சந்தேகத்தில் பலனை அளித்து கொலையாளிகளை அவர் விடுதலை செய்து விட்டாராம்.
மனுவின் நீதியை மரபாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பினை கேள்விப்பட்ட மாத்திரத்தில் ஹஷிம்புராவின் முசுலீம் மக்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்? இனி இந்தியாவில் மதச்சிறுபான்மை மக்கள் வாழ முடியுமா, இங்கே அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்விகள் நிச்சயம் எழுந்திருக்கும்.
“இந்தப் படுகொலை நடக்கும் போது பிறந்தவன் நான். தீர்ப்பைக் கேட்டதும்தான் புரிகிறது, என்னுடைய பக்கத்து வீட்டு மாமா போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்படவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று. இதுதான் அரசியல் சாசனம் நமக்கு அளித்திருக்கும் நீதி உத்திரவாதமா?” என்கிறார் இருபதுகளின் முடிவில் இருக்கும் மெகர்பான் எனும் இளைஞர்.
ஒரு இந்தி நாளிதழை வைத்திருக்கும் அப்துல் ஹபீஸ், ஐம்பது வயதுகளின் இறுதியில் இருப்பவர், “இங்கே முசுலீம்களுக்கு எந்த எதிர்காலமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுக்கு இங்கே நீதி இல்லை. 28 வருடங்களுக்கு பிறகு எனக்கு புரிந்தது இதுதான்” என்று கூறுகிறார். அவருடைய உறவினர் ஜமில் அகமது, படுகொலை நடந்த நாளில் போலிசால் அடித்துக் கொல்லப்பட்டார்.
“இப்போது எங்களிடம் என்ன கேட்கிறார்கள்? நாங்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தோமென்றும், அதிலும் கார்வாப்சி செய்து இந்துவாக மாற வேண்டும் என்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு எங்களது மக்கள் 42 பேர் கொல்லப்படவில்லை என்று எங்களிடம் கூறுகிறது” என்று பொருமுகிறார் அந்த முதியவர்.
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இனி சட்டப்படியே ஹாஷிம்புரா படுகொலையில் குற்றவாளிகள் தவறு செய்யவில்லை என்று இந்துமதவெறியர்களும், அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். ஏற்கனவே மும்பை படுகொலையில் சிவசேனாவும் தாக்கரேக்களும் குற்றம் சாட்டப்படாமேலேயே விலக்களிக்கப்பட்டனர். மோடியும் அவரது கேடிகளும் கூட அவ்வாறு காப்பாற்றப்பட்டனர். தற்போது ஹாஷிம்புராவின் போலிசுக் குற்றவாளிகள்.
இதுதான் நிலைமை என்றால் ஹாஷிம்புராவில் உறவினர்களை பறிகொடுத்த முசுலீம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்று என்ன செய்வான்? அவனுக்கென்று இங்கே நீதி இல்லை, அரசு இல்லை, ஆதரிப்போர் யாருமில்லை எனும் போது அவன் குண்டை எடுக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
நன்றி - வினவு
இந்தியா இனி இப்படியே இருக்காது என்பதற்கு ஹாஷிம்புரா ஒரு வலுவான அறிகுறி. இல்லை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இங்கே உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பாசிச வெறியர்களுக்கு பாடை கட்ட வேண்டும்.

குஜராத் கலவரம் மோடிகேடி அரசாங்கம் தலைமை ஏற்று நடத்தியது


குஜராத்  கலவரம் மோடிகேடி அரசாங்கம் தலைமை ஏற்று நடத்தியது 

இன்னுமா இந்த சமுதாயம் துங்கிகொண்டு இருக்கு 


முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...