ஹரித்துவார்: ‘நான் நக்சலைட்களை உருவாக்கவில்லை. நான் அமைப்பது தற்காப்புக்கான தேசிய படை’ என்று ராம்தேவ் நேற்று புது விளக்கம் அளித்தார். கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் யோகா குரு ராம்தேவ், கடந்த 4ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். நள்ளிரவில் அங்கு குவிந்த போலீசார், அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை விரட்டி அடித்தனர். ராம்தேவை சுற்றி வளைத்து பிடித்து டேராடூனுக்கு அனுப்பினர். பின்னர், ஹரித்துவாரில் உள்ள தனது யோகா ஆசிரமத்துக்கு வந்த ராம்தேவ், அங்கு உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
அங்கு தனது ஆதரவாளர்களிடம் நேற்று முன் தினம் அவர் பேசுகையில், ‘ராம்லீலா மைதானத்தில் நாம் தாக்கப்பட்டது போல் இனி நடக்கக் கூடாது. இனிமேல் நம்மை தற்காத்து கொள்ள 11,000 பேர் கொண்ட படையை உருவாக்குவேன். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிப்பேன்’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘ராம்தேவ் அப்படி செய்தால் அதை சட்டப்படி கையாள்வோம்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், ராம்தேவ் நேற்று 6வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஆதரவாளர்களிடம் அவர் பேசியதாவது:
நான் நக்சலைட்களையோ, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளையோ உருவாக்கவில்லை. நான் அமைப்பது தேசியப் படை. நான் சொன்னதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சியை அளிக்கப் போவதாக சொன்னேன். பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் சக்தி பெற்றால், யாரும் அவர்களை நெருங்க மாட்டார்கள். ஆண்களுக்கு சக்தி இருந்தால், ராம்லீலா மைதானத்தில் நடந்தது போன்ற தாக்குதல் நடக்காது. இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
உடல் எடை குறைந்தது
ராம்தேவின் உடல்நிலை நேற்று மேலும் பாதிப்படைந்தது. அவரை பரிசோதித்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் யோகேஷ் சந்திர சர்மா கூறுகையில், ‘ராம்தேவ் உடல்நிலை மோசமாகி வருகிறது. அவரது எடை 60 கிலோவில் இருந்து 58.5 கிலோவாக குறைந்துள்ளது. ரத்த அழுத்தம், நாடிதுடிப்பு ஆகியவையும் நார்மலாக இல்லை.’ என்றார். இதற்கிடையே எலு மிச்சை ஜூஸ், தேன் எடுத்துக் கொள்வதாக தன்னை சந்தித்த அதிகாரிகளிடம் ராம்தேவ் தெரிவித்துள்ளார்