புதுடெல்லி: பள்ளி செல்லும் குழந்தைகளை பார்த்தாலே பரிதாபம்தான் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்களது புத்தக பையின் சுமைதான். இன்றைய கல்வி முறை அவர்களை மூட்டை சுமக்கும் இளம் தொழிலாளர்களாகவே மாற்றியுள்ளது. சுமையை குறைக்க நிபுணர்கள் பல ஆலோசனைகளை கூறியுள்ள நிலையில், புது திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்தது
. தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்பிக்கும் தேசிய திட்டம் என்று இதற்கு பெயர். கடந்த 2009ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக அர்ஜுன் சிங் இருந்தபோது இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
இதன்படி, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன முறையில் கல்வி கற்க நடவடிக்கை எடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம். தொலைக்காட்சி, வானொலி, இணைய வழி கல்வி என்று இதன் பல்வேறு பரிணாமங்கள். அதே நேரத்தில், எல்லா மாணவர்களுக்கும் மினி கம்ப்யூட்டர் வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மலிவு விலையில் கம்ப்யூட்டர் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜஸ்தான் ஐஐடி இதை தயாரித்துள்ளது. முதல் கட்டமாக இப்போது 10 ஆயிரம் மினி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்குள் அதை 1 லட்சமாக உயர்த்தியதும் ஒரு மாநிலத்துக்கு 3,000 கம்ப்யூட்டர்கள் வீதம் வழங்கப்படும்.
அதை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் பணியை மாநில அரசுகள் செய்யும். மாணவர்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்துவார்கள். அந்த மாணவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் மினி கம்ப்யூட்டரின் செயல்பாடு மேம்படுத்தப்படும். சில ஆண்டுகளில் 20 கோடி மாணவர்களுக்கு மினி கம்ப்யூட்டர்கள் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 50 சதவீத மானியம் உட்பட மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப் படும்போது புத்தக பைகளில் பாடபுத்தகங்கள் இருக்காது. அதற்கு பதில் மினி கம்ப்யூட்டர் இருக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, ஏழை வீட்டு குழந்தைகளும் கம்ப்யூட்டரில் கல்வி கற்கும் நிலை உருவாகும்.
50 சதவீத மானியம்
மாதிரி மினி கம்ப்யூட்டர் கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டபோது அதன் விலை ரூ.1,500ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக விலை சற்றே அதிகரித்துள்ளது. இந்த மினி கம்ப்யூட்டரின் விலை ரூ.2,200ஆக இருக்கும். இவை 50 சதவீத மானிய விலையில் அதாவது ரூ.1,100க்கு மாணவர்களுக்கு விற்கப்படும். விலையில் பாதியை மத்திய அரசு மானியமாக ஏற்கும்.
சூரிய சக்தி ரீசார்ஜ்
மாணவர்களுக்கான மினி கம்ப்யூட்டர்கள் இன்று மார்க்கெட்டில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் டேப்லட் (Tablet) வகை கம்ப்யூட்டர்களை போன்ற வடிவத்தில் இருக்கும். இதில் 7 அங்குல தொடுதிரை உள்ளது. கீ போர்டு கிடையாது. யு.எஸ்.பி போர்ட்கள் இரண்டு இருக்கும். அதில் எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க் இணைத்து பயன்படுத்தலாம். 32ஜிபி நினைவகம், ஹெட்போன் உண்டு. எம்பி4 வீடியோ படங்களை பார்க்கலாம், இன்டர்நெட் வசதியும் உள்ளது. யுடியூப் இணையதளத்தில் உள்ள வீடியோ காட்சிகளை பார்க்கலாம். வீடியோ கான்பரன்சிங் செய்யலாம். வீட்டு மின் இணைப்பு தவிர சூரிய சக்தி மின்சாரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.