சித்தூர்: கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி புட்டபர்த்தி சத்ய சாய்பாபா காலமானார். முன்னதாக சாய்பாபா தனது பிரசங்கத்தில் மறுஜென்மம் மூலமாக பிரேமசாய் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தில் பிறப்பேன் என கூறினார். இதனால் அவரது பக்தர்கள் மீண்டும் சத்ய சாய்பாபா அவதாரம் எடுப்பார் என நம்பி வந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர், 15 நாட்களுக்கு முன்பு தன்னை சத்ய சாய்பாபாவின் அவதாரம் என்றும், நான்தான் பிரேமசாய் என தன்னைத்தானே
பிரகடனப்படுத்தி வந்தார். இந்த தகவல் காட்டுதீ போல் பரவியது. இதையடுத்து அவரை காண பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு நடத்தி, சத்ய சாய்பாபா போன்று திடீரென கையில் விபூதி வரவழைக்கிறார். பாபாவின் அருளால் தான் என்னால், இதுபோன்று நடப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். மேலும் ஆஞ்சநேயர் டாலர், கற்கண்டு, 1 ரூபாய் நாணயம் போன்றவற்றையும் மாய சக்தியால் வரவழைத்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தன்னை சத்ய சாய்பாபா என்று கூறும் ரமேஷ், 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர், ரமேஷை அடித்து விரட்டி உள்ளனர். வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ரமேஷ் திடீரென ஞானோதயம் பெற்றுள்ளதாகவும், பாபாவின் வாரிசு எனவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது