பூஜை நடத்த ரூ.1 கோடி கேட்பார்: ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் ராம்தேவிடம் ஆசி பெற முடியும்



பூஜை நடத்த ரூ.1 கோடி கேட்பார்:

 

 ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான்

 

 ராம்தேவிடம் ஆசி பெற முடியும்;

 

 கொல்கத்தா தொழில் அதிபர் கடும் தாக்கு 
யோகா குரு ராம்தேவ் பண ஆசை பிடித்தவர். தொட்டதுக்கு எல்லாம் காசு கேட்பார் என்று கொல்கத்தா தொழில் அதிபர் பியூஸ்பாண்டே கூறினார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாபா ராம்தேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ராம்தேவுக்காக பல லட்சம் ரூபாயை செலவு செய்தார். ராம்தேவ் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவதாக கூறி தொழில் அதிபர் பியூஸ் பாண்டே பதஞ்சலி பீட யோகா அமைப்பில் இருந்து விலகினார்.
 
அவர் ராம்தேவ் நடத்தி வரும் உண்ணாவிரதம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மக்கள் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பது போல பாபா ராம் தேவ் நல்லவர் அல்ல. அவர் நாடெங்கும் பணம் வசூலித்து தான் ஆசிரமம் கட்டி உள்ளார். பல வழிகளில் அவர் ஏராளமான பணம் சம்பாதித்து வைத்துள்ளார். கோடி, கோடியாக சம்பா தித்துள்ள பணத்தை அவர் தன் சொந்த தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஏழை-எளிய மக்களுக்கு அவர் எதுவுமே செய்தது இல்லை. அப்படிப்பட்டவர் ஊழல், கறுப்பு பணம் என் றெல்லாம் பேசுவது விந்தையாக உள்ளது. ராம்தேவ் விஷயத்தில் பணம் கொடுத்தால் தான் எதுவும் நடக்கும். தொட்டதுக்கெல்லாம் அவர் பணம் கேட்பார். அவரை பார்க்க கூட காசு கொடுக்க வேண்டும்.
 
நீங்கள் அவரை வீட்டுக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினால், அவரிடம் முதலிலேயே ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கொடுக்க வேண்டும். அவரிடம் ஆசி பெற வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். அவர் கையால் பிரசாதம் பெற ரூ.50 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி, அதில் ராம்தேவ் கலந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு 1 கோடி ரூபாய் செலவாகும். அவரது ஆசிரமத்தில் உறுப்பினராக வேண்டுமானால் ரூ.11 லட்சம் அன்பளிப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுத்தால் தான் உங்களிடம் அவர் பேசுவார்.
 
லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்தால் தான் சிரித்து பேசுவார். நீங்கள் பணம் கொடுப்பதை என்று நிறுத்துகிறீர்களோ, அன்று முதல் அவர் உங்களிடம் பேச மாட்டார். இப்படிப்பட்ட பண ஆசை பிடித்தவர் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.
 
இவ்வாறு தொழில் அதிபர் பியூஸ் பாண்டே கூறினார்.
 
ராம்தேவ் ஆசிரமத்தில் முக்கிய நபராக திகழ்ந்த மற்றொரு கோடீசுவர தொழில் அதிபர் ஹரிராம் கர்க் என்பவரும் பியூஸ் பாண்டே போல பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட உண்ணாவிரதத்துக்கு லட்சம், லட்சமாக பணம் வசூலிக்கப்பட்டதையும் ராம்தேவ் எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
 
ராம்தேவுக்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கி உள்ளதால் அவரது உண்ணாவிரதம் பிசுபிசுத்து வருகிறது. 7-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அவர் நேற்று முதல் பழச்சாறு, மற்றும் தேன் குடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராம்தேவ் இருப்பது உண்ணாவிரதம் அல்ல என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஹரித்துவார் ஆசிரமத்தில் திரண்ட கூட்டமும் கொஞ்சம், கொஞ்சமாக கலையத்தொடங்கி உள்ளது. இதனால் ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை இன்று (வெள்ளி) முடித்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
மதக்குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ராம் தேவை சந்தித்து பேச உள்ளார். அப்போது அவர் ராம்தேவ் உண்ணா விரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...