ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்கு தேவையான எரிபொருளை இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்தது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2,700 கோடி பாக்கி ஏர் இந்தியா கொடுக்க வேண்டியதுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை குறைந்த விலைக்கு கொடுப்பதால் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பாக்கி வைத்துள்ள ரூ. 2,700 கோடி நிலுவை தொகையை கொடுத்தால்தான் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை தர முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் திட்டவட்டமாக அறிவித்தன.
ஏர் இந்தியா நிறுவனம் பல தடவை கேட்டுக் கொண்ட பிறகும் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பணம் கொடுத்து எரிபொருள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று உறுதிபட கூறி விட்டது. தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் அனைத்திற்கும் ரொக்கமாக பணம் கொடுத்து எரிபொருள் வாங்க இயலாததால் பல சேவையை ரத்து செய்யும் நிலைக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
நேற்று பெரும்பாலான விமானங்கள் லண்டன், டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா சேவைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மதியம் டெல்லி செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. முன் பதிவு செய்திருந்த பயணிகள் நேற்று மாலை டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
தினமும் கொழும்புக்கு இயக்கப்பட்டு வரும் விமான சேவை இனி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். மேலும் சென்னை - மும்பை இடையே தினமும் மாலை 5.45 மணிக்கு இயக்கப்பட்டு வந்த அந்த சேவை இனி செவ்வாய், சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.