செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு உத்தரவிட்டார்

அந்த வரிசையில், அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஒருவர், ஜெயலலிதாவை கடவுளாக நினைப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதில்லை என்றும், சபதம் ஏற்று, செருப்பு அணியாமல் இருந்து வருகிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள அந்த தீவிர தொண்டர் பற்றிய ருசிகர தகவல்: அ.தி.மு.க., மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த உதயகுமார், சாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவரை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார்.
முதல்வர் மீதுள்ள மரியாதை மற்றும் அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு, அமைச்சர் உதயகுமார் வந்து சென்றார்.
இது பற்றி அமைச்சர் உதயகுமார் கூறும் போது, "கோவிலுக்குள் செல்லும் போது, செருப்பை கழற்றி வைத்து விட்டுச் செல்கிறோம். முதல்வர், "அம்மா' இருக்கும் இடம் தான் எனக்கு கோவில். அவர் இருக்கும் இடத்திற்கு செருப்பு அணியாமல் சென்று வருகிறேன்' என்றார்.
இத்தகவல், முதல்வரின் கவனத்திற்கு சென்றது.
நேற்று கோட்டைக்கு வந்த முதல்வரின், "கான்வாய்' புறப்பட்ட போது, அமைச்சர் உதயகுமார் ஓடிச் சென்று முதல்வரை வணங்கினார். அவரை அழைத்த முதல்வர், "இனிமேல் செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது' என, அவருக்கு உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை உடனடியாக, பின்பற்றுவதாக கூறிய அமைச்சர், செருப்பு அணிய துவங்கினார்.