காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லையை
எகிப்து அரசு இன்று முழுமையாகத் திறந்தது.
உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில்
இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில்
இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.


2007ஆம் ஆண்டு காஸா பகுதியின் ஆட்சி நிர்வாகம் தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல்
இந்தத் தடையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின்
வேண்டுகோளைத் தொடர்ந்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு
விரட்டப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்து அதிபராக இருந்த போது, காஸாவில்
இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லைக் கதவை முழுமையாக அடைத்தது.

ஹோஸ்னி முபாரக் ஆட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டவுடன் எகிப்தின் ஆட்சிப்
பொறுப்பில் இருக்கும் இராணுவம், பாலஸ்தீனக் குழுக்களிடையே சமாதான
முயற்சிகளில் ஈடுபட்டு ஹமாஸ் மற்றும் பதாஹ் ஆகிய இரு முக்கியக்
குழுக்களிடையே சமாதான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

இந்நிலையில் ரஃபா எல்லை நிரந்தரமாகத் திறந்துவிட்டிருப்பது பாலஸ்தீன
மக்களிடையே மட்டுமின்றி எகிப்து மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப்
பெற்றுள்ளது.

காஸாவில் இருந்து பெண்கள், 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமியர்
மற்றும் 40 வயதைத் தாண்டிய முதிய ஆண்கள் எகிப்துக்கு இனி எவ்வித விசாவும்
இன்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 மற்றும் 40 வயதுக்கு
இடைப்பட்ட ஆண்கள் எல்லையைக் கடப்பதாக இருந்தால் அவர்கள் எகிப்து விசா பெற
வேண்டும்.

பாலஸ்தீனத்திற்காக எகிப்து தூதரகம் காஸா பகுதியில் இல்லை. ரமல்லா என்ற
மேற்குக் கரைப் பகுதியில்தான் தூதரகம் உள்ளது. காஸாவின் மற்றொரு பகுதியை
இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் காஸாவில் உள்ளோர் ரமல்லா
செல்ல இயலாது. எனவே, காஸா பகுதியில் விரைவில் எகிப்து தூதகரத்தின்
முகமையாளர் நியமிக்கப்படுவார் என ஹமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரஃபா எல்லை திறக்கப்பட்டதும் காஸாவில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்
வேன்களில் நோயாளிகள் சிகிச்சைக்காக எகிப்து சென்றனர். மேலும் ஒரு மினி
பஸ் மூலம் சில பாலஸ்தீனர்கள் எகிப்து சென்றனர்.

காஸாவின் கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினரும் நிலப்பரப்பில் இஸ்ரேலிய
இராணுவத்தினரும் கண்காணித்துக் கொண்டிருக்க, காஸாவில் இருந்து ஒருவர் கூட
வெளியே செல்ல முடியாத நிலையில் இஸ்ரேல் விதித்த தடையால், 15 இலட்சம்
மக்கள் தொகை கொண்ட காஸாவைச் சேர்ந்த மக்களில் 85 சதவீதம் பேர் உணவுக்காக
உதவிகளை நம்பியே இருந்தனர்.

14 சதவீதம் குழந்தைகள் போதிய ஊட்டச் சத்தின்மையால் பல்வேறு
குறைபாடுகளுக்கு ஆளாகி இருந்தனர்.

முழுமையான மின்வெட்டு அமலில் இருந்தது. 98 சதவீதம் பேர் இதனால்
பாதிக்கப்பட்டனர். எரிபொருள் வழங்கல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

உயிர்வாழ இன்றியமையாத 100க்கும் மேற்பட்ட மருந்துகள் காஸாவில் இல்லை.

2008 - 2009ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான், தரை மற்றும்
கப்பல் தாக்குதல்களில் காஸாவில் இருந்த ஒரு சில மருத்துவமனைகளும்
அழிக்கப்பட்டன.

உலகின் மிகப் பெரும் சிறையில் அடைக்கப்பட்டு சற்றே ஆசுவாசம் பெற்றுள்ள
காஸா மக்களின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுவோம்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...