

இஸ்லாம் "நோன்பு" என்பதனை ஒரு மாத ரமலான் மாதத்தில் கடமையாக்கி அதில் தர்மத்தினையும் முக்கியப் படுத்தி உள்ளது, இது வறுமையினை அகற்ற வருமானத்தில் வருடத்திற்கு இரண்டரை சதவீதம் ஜகாத் என்ற பெயரில் கட்டாயக் கடமையாக்கி இருக்கின்றது. (அரசு வருமான வரி போடுவது போல் தோன்றினாலும் ஜகாத்தில் வேறு சில சிறப்புகளும் உண்டு.)
உண்ணாமல் பருகாமல் இருப்பதற்கு மட்டும் நோன்பு என்று கூற முடியாது. . மாறாக இறைவனுக்காக நாம் ஆற்றவேண்டிய பல்வேறு தியாகங்களையும் உள்ளடக்கும்.நோன்பின் நோக்கம் மனிதனை உறுதி மிக்கவனாக, இறையச்சமுடையவனாக மாற்றுவதுதான்."…..நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபயபக்தி உடையவர்கள் ஆகலாம்" (அல்குர்ஆன் 2:183)
மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு.
"பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது"