அகழ்வாராய்ச்சியாளர்கள்கெய்ரோ: எகிப்து மற்றும் ப்ரெஞ்சு நாடுகளை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான பிரமாண்டமான கல் கதவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லுக்சார் பகுதியில் உள்ள கர்னாக் கோயில் அருகில் இக்கதவு புதையுண்டிருந்தது. இந்தக் கதவு நுமிபிய மன்னர்கள் வம்சத்தை சேர்ந்த ஷபாகா மன்னர் காலத்தில் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பத்திரமாக தோண்டி எடுக்கப்பட்ட கல் கதவு, சேதம் ஏதுமின்றி நல்ல நிலையில் உள்ளது. இது, மன்னரின் பொக்கிஷ அறை கதவாக இருக்கலாம் என்ற கணிப்பு உள்ளது. கிமு 750 - 656க்கு இடைப்பட்ட சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான புதைபொருள், சிந்தாமல் சிதையாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர் ஆய்வுக் குழுவினர். பிரமாண்டமான கல் கதவு, அடுத்த பரம்பரை அல்லது எதிரிகளிடம் இருந்து எப்படி சேதப்படாமல் தப்பியது என்ற ஆச்சரியமும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உள்ளது.
இந்த அரிய கல்கதவு குறித்து ஆய்வாளர்கள் கூறியது: மிக பிரமாண்டமானது மட்டுமின்றி, புராதனமானதுமான இந்தக் கல் கதவு, முழு அளவில் சேதம் ஏதுமின்றி தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2,700 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான சான்றும் உள்ளது. மன்னர் காலத்தில் பயன்படுத்திய இது, பெரும் பொக்கிஷங்கள் இருந்த அறையின் கதவாக இருந்திருக்க வேண்டும்.
இதில் மிக அழகான கைவேலைப்பாடுகள், ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வேலைப்பாடுகளை பார்க்கும்போது இது கோயிலின் கதவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. முழு ஆய்வுக்கு பிறகு இதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.