நெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது,
முதியோர்களை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துகளை எழுதிவாங்கிவிட்டு விரட்டி அடிப்பது, அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாடு முழுவதும் 80 மில்லியன் முதியோர்கள் இருந்தனர். 2025-ம் ஆண்டில் 160 மில்லியன், 2040-ம் ஆண்டில் 324 மில்லியன் முதியோர்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி்ல் முதியோர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும் நகரங்களில் சென்னையும், போபாலும் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
பராமரிப்பு இல்லாத முதியோர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் தொலைபேசி எண் 1253 செயல்படுகிறது.
இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் எங்கள் நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவர். அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.