சட்டசபை தேர்தல்: கட்சிகள் வென்ற இடங்கள், பெற்ற வாக்கு சதவீதம்


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு அணியாகவும், திமுக கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, சமக, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் மற்றும் மூவேந்தர் முன்னணி கழகம் இருந்தது.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.

பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

அதிமுக கூட்டணி வென்ற இடங்கள், வாக்கு சதவீதம்:

அதிமுக மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 160 இடங்களில் போட்டியிட்டது. இதில் 146 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதற்கு கிடைத்த வாக்குகள் 1 கோடியே 43 லட்சத்து 81 ஆயிரத்து 820. தமிழகத்தில் அதிமுகவுக்கு 39.08 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாக்குகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சமகவின் 2 வேட்பாளர்கள், கொங்கு இளைஞர் பேரவை மற்றும் இந்திய குடியரசுக் கட்சியின் தலா ஒரு வேட்பாளர்களின் வாக்குகளும் அடக்கம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிட்ட 12 இடங்களில் 10ல் வென்றுள்ளது. இதற்கு 8 லட்சத்து 88 ஆயிரத்து 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 2.41 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதற்கு கிடைத்த வாக்கு சதவீதம் 1.97 அதாவது 7 லட்சத்து 27 ஆயிரத்து 394 வாக்குகள் கிடைத்துள்ளது.

மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு 0.50 சதவீதம் அதாவது 1 லட்சத்து 81 ஆயிரத்து 180 வாக்குகள் பெற்று 2 இடங்களில் வென்றுள்ளது.

திமுக கூட்டணி:

திமுக 119 தொகுதிகளில் களமிறங்கி வெறும் 23 இடங்களில் வென்றுள்ளது. திமுகவுக்கு 22.38 சதவீதம் அதாவது 82 லட்சத்து 34 ஆயிரத்து 300 வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 3 வேட்பாளர்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் தலா 1 வேட்பாளர்களின் வாக்குகளும் அடக்கம்.

காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றுள்ளது.

பாமக தான் போட்டியிட்ட 30 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதற்கு 5.23 சதவீதம் அதாவது 19 லட்சத்து 27 ஆயிரத்து 260 வாக்குகள் கிடைத்துள்ளன.

விடுதலை சிறுத்தைகள் களமிறங்கிய 10 இடங்களில் படுதோல்வி அடைந்துள்ளது. அதற்கு 1.50 சதவீதம் அதாவது 5 லட்சத்து 55 ஆயிரத்து 965 வாக்குகள் கிடைத்துள்ளது.

கொமுக போட்டியிட்ட 7 இடங்களிலும் மண்ணைக் கவ்வியுள்ளது. அதற்கு 1 சதவீதம் அதாவது 3 லட்சத்து 70 ஆயிரத்து 44 வாக்குகள் கிடைத்துள்ளது.

பிற கட்சிகள்:

பாஜக 202 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதற்கு 2.24 சதவீதம் அதாவது 8 லட்சத்து 23 ஆயிரத்து 489 வாக்குகள் கிடைத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் களமிறங்கி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு 0.54 சதவீதம் அதவாது 1 லட்சத்து 97 ஆயிரத்து 71 வாக்குகள் கிடைத்துள்ளது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...