சபாநாயகர் வேட்பாளராக ஜெயக்குமார் அறிவிப்பு-துணை சபாநாயகராகிறார் ப.தனபால்

D Jayakumar and P Dhanapalசென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் எம்.எல்.ஏ.வான ப.தனபாலை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதாவே இன்று வெளியிட்டார். சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கடந்த அதிமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தற்போதைய அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை. இதனால் லேசான சலசலப்பு கூட எழுந்தது. ஆனால் சக்தி வாய்ந்த சபாநாயகர் பொறுப்பை அவருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். மே 27ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதேபோல ராசிபுரம் தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியை தோற்கடித்தவர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சபாநாயகர் பதவிக்கு பழ. கருப்பையா நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வழக்கறிஞரான ஜெயக்குமாரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று முதல்வர் ஜெயலலிதா கருதியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...