|
திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த இடத்தை மீண்டும் ஒரு முஸ்லீம் இனத்தவருக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இவர் திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இன்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மரியம் பிச்சை திருச்சியிலிருந்து சென்னை சென்றார்.
அப்போது சமயபுரம் அருகே உள்ள பாடாலூர் என்ற இடத்தில் நடைபெற்ற விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இழப்பை கேட்டு அதிமுகவினர் மட்டும் இன்றி பொது மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தனி ஹெலிகாப்படரில் திருச்சி செல்கிறார்.
இந்த நிலையில் இறந்து போன அமைச்சர் மரியம் பிச்சைக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் அவர்களில் ஒருவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளித்து வெற்றி பெற்றால் அமைச்சர் ஆக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இல்லையெனில் அந்த தொகுதியில் அதிமுகவில் உள்ள ஒரு முஸ்லீம் பிரமுகருக்கு சீட் வழங்கி வெற்றி பெற வைத்து அமைச்சர் பதவி வழங்கலாம் என பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
இருப்பினும் மரியம் பிச்சையின் இடத்தில் முஸ்லீம் ஒருவரையே அமைச்சராக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.