அடிக்க தெரியும்... இல்லன்னா குடிக்கத் தெரியும் ?

இந்த தேர்தலில் தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக நடிகர் வடிவேலு செயல்பட்டு வருகிறார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க., ஆட்சியையும், முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அவருக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறும் தி.மு.க., முக்கிய புள்ளிகள், வடிவேலுவை இறக்கி விட்டுள்ளனர். அவரும் விஜயகாந்தை ஒருமையில் திட்டிப் பேசி, தனிநபர் விமர்சனத்தை செய்து வருகிறார்.

பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே, விஜயகாந்தை ஒருமையில் வடிவேலு விமர்சனம் செய்ததை, அனைவரும் கைதட்டி ரசிக்கின்றனர். பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் வடிவேலு, "நான் பாட்டுக்கு செவனேன்னு நடிச்சுட்டு இருந்தேன்... என்னைய அந்தாளு அடிச்சான்யா... அந்தாளுக்கு ஒண்ணு அடிக்க தெரியும்... இல்ல குடிக்கத் தெரியும்... அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவன் அவன்...' என, விஜயகாந்தை விமர்சனம் செய்கிறார்.
விஜயகாந்தை இந்தளவிற்கு தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யும் வடிவேலு, ஒரு வார்த்தை கூட அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை விமர்சிப்பது இல்லை. அவரை விமர்சனம் செய்தால், என்னவாகும் என்பதை வடிவேலு நன்கு அறிந்து வைத்திருக்கிறார். விஜயகாந்திற்கு எதிரான வடிவேலுவின் ஒருமை விமர்சனம் திரையுலகினர் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் நடிகர் பாக்யராஜ் நேரடியாகவே இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரை உலகில் உள்ள மற்றவர்களும் வடிவேலுக்கு ஏன் இந்த வேலை என நெருக்கமானவர்களிடம் கூறி வருகின்றனர். வடிவேலுவின் மீது மதிப்பு வைத்து இருந்த பொதுமக்களும், இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், வடிவேலுவின் தொடர் விமர்சனத்திற்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இதுவரை நேரடியாக ஒரு வார்த்தை கூட பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து அவருக்கு நெருக்கமான திரையுலகினர் சிலரிடம் கேட்ட போது, "விஜயகாந்தை எதிர்த்து பேசி வந்த நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர்கள் பலர், அவரை புரிந்து கொண்டு விமர்சனம் செய்வதை நிறுத்தி விட்டனர். தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யும் வடிவேலுவும் தானே திருந்துவார் என விஜயகாந்த் கூறி வருகிறார்' என்றனர். இதற்கான விடை, தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...