உலகத்தில் உள்ள அநியாயங்களை பார்த்து வெறுப்படையும் மனிதன் மனசாந்திக்காகவும், ஒழுக்கமான  வாழ்க்கை முறைக்காகவும் கடைசி புகலிடமாக ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கிறான்.   நியாய சபையின் முன் நீதி கேட்க சென்றவனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு  சாட்டையால் அடிப்பது போல் பல நேரங்களில் அமைதிக்காக சரணடையும் ஆன்மிக  புகலிடம்  கொலைக்களமாக  மட்டுமல்ல அருவறுப்பான உளுத்த மேடையாகவும் இருப்பதை பார்த்து வெறுத்து  போய் எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை கொள்ள ஆரம்பிக்கிறான்.
    கடவுள் இல்லை, கடவுளை வணங்காதே  என்று சொல்லுபவனும், நம்புபவனும் குற்றவாளி அல்ல பாவப்பட்டவனும் அல்ல.   கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு அவரை மாயவாத கவர்ச்சி பொருளாக  பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவன் அயோக்கியன் மட்டுமல்ல  வாழ தகுதியற்றவனாகவும் இருக்கிறான்.   ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும்  அராஜகம் அட்டுழியம் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் இரும்பாக்கி  ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு சீர்கேட்டை ஏற்படுத்தி விடும்.
    மதவாதிகளின் அதிகார வேட்கைக்காக லட்சக்கணக்கான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.   உலக சரித்திரத்தின் மீது படிந்துள்ள ரத்தக்கறை  பாதிக்கும் மேல் மதங்களால் உண்டானவையாகும்.  அணுகுண்டு போட்டதினால்  செத்தவனை விட மதகுண்டுகளால் செத்தவர்கள் தான் அதிகம் என்று சொல்வார்கள்  உலகத்தில் நடந்துள்ள பல சிலுவை போர்கள் இந்த கருத்தை மெய்பிப்பதாகவே  இருப்பதை காணும் போது மனவேதனை ஏற்படுகிறது.
    மதவாதிகள் ஒரு காலத்தில் அரசாங்கங்களை மிரட்டியோ   பயன்படுத்தியோ மக்களை நோகடித்தார்கள் இன்று அரசாங்கங்கள் அவர்களுக்கு  பணியவில்லை என்பதினால் அல்லது தாங்கள் அடிக்கும் கொள்ளையில் மதவாதிகளுக்கு  ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று அரசாங்கமும் அரசியல் வாதிகளும்  விழிப்படைந்து விட்டதினால் பயங்கரவாத அமைப்புகளை தங்களது புகலிடமாக கொண்டு  மக்களின் உயிரையும், பொருளையும் சூறையாடி வருகிறார்கள்.
      உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் வளர்த்து  விட்டது என்னவோ உண்மை தான்.  இரண்டு வல்லரசுகளுக்கிடையில் நடந்த பனிப்போர்  முடிவடைந்தவுடன் பயங்கரவாதம் அடங்கி போய் இருக்க வேண்டும். மாறாக அதன்  பின்னரே பயங்கரவாதம் புதிய பரிணாமம் அடைந்துள்ளது என்றால் அதற்கு ஊட்டச்சத்து கொடுத்து வருவது மதவாதிகள் என்பது தான் உண்மையாகும்.  இஸ்லாமிய மதத்தின் புனித நூலான குரான் ஐ துருவி துருவி ஆராய்ந்தாலும் அதில் தீவிரவாத கருத்து இருப்பதை காண  முடியவில்லை.  ஆனால் அதன் பெயரால் அப்பாவி இளைஞர்கள் பலிகடா ஆக்கப்பட்டு வருவது மிக பெரும் கொடுமை.
     மதவாதிகள் மதத்திற்கு  வெளியில் செய்யும் கொடுமைகள் ஒருவகை என்றால் தங்களது துறைக்குள் செய்கின்ற  கொடுமை மிக கேவலமானது.  தங்களது அறிவு திறனையும் வாத திறமையையும்  பயன்படுத்தி அவர்கள் செய்யும் மோசடிகள் சகிக்க முடியாததாக இருக்கிறது.
    திருச்சியில் பிரேமானாந்தா என்ற  சாமியார் வாய்க்குள் இருந்து லிங்கம் எடுத்தார்.  வெறுங்கையில் குங்குமத்தை  வரவழைத்தார்.  அதை பார்த்து ஏராளமான ஆண்களும்,  பெண்களும் குவிந்தார்கள்,   மறைமுகமாக தனது மேஜிக் ரகசியத்தை பாதுகாக்க தெரிந்த சாமியாருக்கு அந்தரங்க  லீலைகளை மறைக்க தெரியாததனால் மாட்டிக் கொண்டார் தண்டனை பெற்றார்.  அதனால்  மேஜிக் செய்யும் சாமியார்களை நம்பாதீர்கள்.  அவர்கள் எல்லாம் நிஜமான  போலிகள், அறிவு பூர்வமாக தத்துவ கருத்துக்களை பேசுபவர்களே உண்மை  சாமியார்கள் என்று ஒருவாதம் பெரியதாக விளம்பரப்படுத்தப்பட்டது.  மக்களும்  அதை நம்பி நித்தியானந்தா போன்ற சொற்பொழிவாளர்களை  பின்பற்ற தொடங்கினர்.
    நித்தியானந்தாவை நம்பியது  காவடி எடுக்கும் தீ மிதிக்கும், அலகு குத்தும், மண்சோறு சாப்பிடும் சாதரண  பக்தர்கள் அல்ல,  டாக்கடர்கள் இன்ஜீனியர்கள், வழக்கறிஞர்கள்,  பேராசிரியர்கள் மென்பொருள் பொறியாளர்கள், போன்ற உயர்தர ஆசாமிகள் தான்.   தத்துவம் பேசுபவர்கள் எல்லோரும் தத்துவஞானிகளாக தான் இருக்க வேண்டும் என்று  நினைத்த பாவப்பட்ட ஹை டெக் ஆசாமிகள் இன்று ஏமாந்து போன தங்களது முகத்தை  வெளியில் காட்ட முடியாமல் முக்காடு போட்டு நடக்கிறார்கள்.
    இந்த உலகம் மிகவும்  விசித்திரமானது ஐம்பது பேர் கோவிந்தா போட்டு கொண்டு திருமலை படியேறினால்  அதில் யாராவது ஒரு அரை பைத்தியம் வெங்கடாஜலபாதி ஒழிக என்று மாற்று கோஷம்  போட்டால் அவனை புத்திசாலி என்று தலை மேல் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவார்கள்.
    கடவுள் சொன்ன பகவத்  கீதையிலிருந்து வள்ளுவர் தந்த திருக்குறள் வரை துன்பங்களுக்கு எல்லாம்  காரணம் ஆசை தான் என்று காலகாலமாக சொல்லி வருவதையும் அனுபவ வாழ்க்கையில்  நாம் கண்டு வருவதையும், முட்டாள்தனமானது என்று தற்கால ஞானி ஒருவர் பக்க  பக்கமாக எழுதி வருகிறார்.  அதையும் நம்பும் ஒரு கூட்டத்தார் அவர் பின்னால்   கூடியுள்ளனர்.
     தாயுமானவர் மிக அழகாக சொல்லுகிறார்.  உலகம் முடிவதையும் கட்டி ஆளும்  ஒருவன் தனக்கு இருக்கும்  நிலப்பகுதி மட்டும் ஆட்சி செய்ய போதாது கடலும்  வேண்டும் என்ற ஆசைப்படுகிறான்.  காணும் இடமெல்லாம் கட்டி தங்கத்தை குவித்து  வைத்திருப்பவன் தகரத்தை கூட தங்கமாக்க வேண்டுமென்று  ஆசைப்படுகிறான்.  எண்பது வயது வரை சுகமாக வாழும் ஒருவன்  இன்னும் எண்பது ஆண்டுகள் வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் இப்படி ஆசை  நெருப்பு வளர வளர அமைதியான வாழ்க்கையை பொசுக்கி கொண்டு அவதிபடுகிறான்.   அவதி மறைந்து அமைதி வேண்டுமென்றால் ஆசையை விட்டுவிடு என்று தாயுமானவர்  சொல்வதை ஜக்கி வாசு தேவ் கிண்டல் அடிக்கிறார்.
    ஆசையை துறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்பதை போன்ற முட்டாள்தனமான தத்துவம் எதுவுமில்லை,  ஆசைபடுங்கள் சிறியதாக அல்ல மிகப்பெரியதாக  ஆசைப்படுங்கள்.  அந்த தைரியம் கூட இல்லாமல் அற்பமாக ஆசையை சுருக்கி  கொண்டிர்களேயானால் வாழ்க்கையில் வேறு எதை பெரியதாக சாதித்து விடப்  போகிறீர்கள்-என்பது தான் ஜக்கியின் கிண்டல் மொழி.  இவரது பார்வையில் ஆசையை  துறக்க சொன்ன புத்தனும் பற்றுகளை விட சொன்ன வள்ளுவனும் கண்ணனும்  முட்டாள்கள்,
    கடவுளே இல்லையென்று  சொல்பவர்கள் கூட ஆன்மிகம் என்பது அபின் போன்ற போதைபொருள்.  என்ற  வாதிடுபவர்கள் கூட மனிதர்களின் அதிகப்படியான ஆசை தான் அழிவுகளுக்கு  காரணமாயிக்கிறது.  என்பதை ஒத்து கொள்வார்கள். ஆனால் ஆன்மிக ஞானி என்ற  பக்தர்களால் நம்பப்படும் இவர் அனைத்திற்கும் ஆசைப்படு என்ற சொல்வதை மக்கள்  கூட்டம் ஏன் ஏற்று கொள்கிறது.  என்பதை சிந்திக்க வேண்டும்.
      நமது நாட்டில் வறுமை எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறதோ அதைவிட அதிகமாக  இருபது சகவிகித மக்களின் பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது.  அதாவது வீக்கம்  கண்டு இருக்கிறது.  ஆயிரம்ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்ய  லாயக்கற்றுவனுக்கு கூட ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம்  வழங்கப்படுகிறது.  வருவாயின் தாராதரம் என்னவென்று தெரியாமல் நாலனா பொருளை  கூட நாற்பது ரூபாய் கொடுத்த வாங்கி விடுவார்கள்.  பணத்தால் எல்லாவற்றையும்  சாதிக்கலாம் என்ற மனோபாவம் வளர வளர அன்பான உறவுகள் எல்லாம் வெகுதூரமாக  விலகி விடுகின்றன.  தனது மனதிற்குள் கொந்தளிக்கும் உணர்வுகளை பகிர்ந்து  கொள்ள வழி தெரியாமல் மனிதர்கள் தவிக்கிறார்கள் இது ஒருபுறம் இருக்கும்  கொடுமை.
    இன்னொரு புறம் உழைக்க வலு  இருக்கிறது,  நல்ல திறமை இருக்கிறது,  அனைத்தையும் நிர்வாகம் செய்யும்  அறிவுயிருக்கிறது ஆனால் அதை வெளிகாட்ட முடியாத அதில் சிக்கலில்  மாட்டிக் கொண்டு தவிக்கும் நிலை வருகிறது.  திறமை இல்லாதவன் எல்லாம் உயர  உயர பறக்க திறமையான நாம் அதல  பாதாளத்தில் கிடக்கிறோமே என்ற சுய பச்சாதாபம்  ஆட்டி படைக்கிறது.
    உச்சந்தலையில் உட்கார்ந்து  கொண்டு விண்வின்னென்று தெறிக்கும் பித்தத்தை எதை சாப்பிட்டாவது நீக்கி  கொள்ள துடிக்கும் இரு தரப்பு மக்களும் தப்பிக்க வழியறியாது தவிக்கும் போது  வார்த்தைகளில் செப்பிடுவித்தை காட்டும் இந்த மாதிரி நபர்களின் பின்னால்  போய் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.
    தன்னம்பிக்கை இல்லாத  மனிதர்கள் தான் யாராவது வழிகாட்டி கிடைக்கமாட்டார்களா என்று தேடி அலைந்து  சாமியார்களின் காலடியில் வீழ்வதாக பல பகுத்தறிவு வாதிகள் பேசுகிறார்கள் இது  உண்மை போல் தெரியும்.  ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது அந்த கருத்தில்  குறை இருப்பது தெளிவாக புரியும்.  ஒரு குழந்தை சிறந்த மனிதனாக வளர  வேண்டுமென்றால் தாயோ, தகப்பனோ அதற்கு வழிகாட்ட வேண்டும்.  தொழில் மற்றும்  வியாபாரத்தில் ஒருவன் சிறக்க வேண்டுமென்றால் நல்ல அனுபவசாலிகளின்  வழிகாட்டுதல் வேண்டும்.  இவ்வளவு ஏன்  குடும்பம் நடத்த  கூட பெரியவர்  துணை  வேண்டும்.  நிலைமை இப்படி இருக்கும் போது ஆன்மிக வாழ்க்கைக்கு ஒரு  வழிகாட்டி நிச்சயம் தேவை.
    வழிகாட்டிகளை தேர்த்தெடுப்பதில் நமக்குள்ள குறைபாடுகள் தான் போலிசாமியார்களை அதிகரிக்க செய்கிறது.  ஆணி செருப்பு போட்டவனை அரிவாளின்  மேல் நின்று குறி சொல்பவனை, வெறும் மேடை பிரசாங்கிகளை  வழிகாட்டிகளாக  ஏற்பது மக்களின் அறியாமையே ஆகும்.   வெண்டைக்காயை ஒடித்து பார்ந்து  வாங்குபவன் வாழைக்காயை தட்டி பார்த்து வாங்குபவன் தங்கத்தை கூட உரசி  பார்த்து வாங்குபவன் தன்னை  ஆளும் அரசியல்வாதியை எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தாமல்  தேர்ந்தெடுக்கிறான் என்று சொல்வது உண்டு.  அரசியல்வாதி கூட ஐந்து வருடங்கள்  தான் நம்மை ஆட்சி செய்கிறான்.  ஒழங்காக இல்லை என்றால் வாலை நறுக்கி உட்கார  வைத்துவிடலாம் ஆனால் ஆன்மிக குரு அப்படி அல்ல.  நமது உயர்விலும்,  தாழ்விலும், வாழ்விலும் சாவிலும் நம்மோடு வருபவர் அவர்.  அவரை நம்பி நமது  இரு புற வாழ்வை ஒப்படைக்கிறோம்.  அவர் தக்கவரா தகாதவரா என்பதை யோசிக்க  வேண்டாமா?
     எங்கிருந்து யோசிக்க  நல்லவனும் காவி கட்டுகிறான்.  கெட்டவனும் காவி கட்டுகிறான்.  கடவுள் பெயரை  இரண்டு பேரும் சொல்லுகிறார்கள் இருவரும் துன்பத்தை போக்கி இன்பத்தை  தருவதுதாக வாக்குறுதி அளிக்கிறார்கள்.  இருவர் கண்களிலும் கருணை மழை  பொழிகிறது.   எது அசல், எது நகல் என்று பிரித்து பார்க்க முடியவில்லை.   நகலை நகல் என்று ஒதுக்கினால் தப்பில்லை ஒரு வேளை நமது அறியாமையினால் அசலை  நகல் என்று ஒதுக்கி பாவத்தை சம்பாதித்து விடுவமோ?  எதற்கு வம்பு  இருவருக்குமே வணக்கத்தை போட்டு வைப்போம்.  அல்லது  பேசாமல் ஒதுங்கி  விடுவோம்.  என்று நம்மில் பலர் நினைப்பதினால் தான் போலிகளுக்கு தைரியம்  வருகிறது.
     ராமகிருஷ்ண பரமஹம்சர்  தெய்வீக தன்மையில் யாருக்கும் சந்தேகம் கிடையாது.  ஆனால் அவரை பரமஹம்சர் என்று ஏற்றுக்கொள்ள எத்தனை  சோதனைகளை நடத்தியது தெரியுமாறு அறிஞர் உலகம்.  பரமஹம்சருக்கான இலக்கணப்படி  அவர் உருவம் அமைந்துள்ளதா?  யோகம் பயிற்சி செய்தற்கான அடையாளங்கள் அவரிடம்  உள்ளதா என்றெல்லாம் ஆயிரம் பரிசோதனைகள் செய்த பிறகு தான் கதாதர்  ராமகிருஷ்ணர்  பரமஹம்சர் ஆனார்.ஆனால் இன்று பிடரி வரை முடி  வளர்த்து கொண்டால் தோள்பட்டை தெரியும் வண்ணம் ஆடை அணிந்து கொண்டால், நுனி  நாக்கில் ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் சுலபமாக பரமஹம்சர் ஆகிவிடலாம்.   இது எதை காட்டுகிறது என்றால் நமது ஜனங்களுக்கு வரலாற்று ஞானத்தை போதித்த  அரசு புவியியல் மற்றும் வானியியல் ஞானத்தை சொல்லி கொடுத்த அரசு  மதசார்பின்மை என்ற போலி மயக்கத்தில் ஆன்மிக ஞானத்தை போதிக்க மறுத்ததே  ஆகும்.  ஒரு முஸ்லீமுக்கு தன்  மதத்தை பற்றி தெரியும்  அளவிற்கு  ஒரு கிறிஸ்தவனுக்கு  மத அறிவு உள்ள அளவு  இந்துகளுக்கும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருந்தால் நடிப்பு  ஞானிகள் மேடையேறுவதற்கு முன்பே கல்லால் அடிக்கப்பட்டிருப்பார்கள்.
    நோய் வந்து பாயில் கிடக்கும் ஒருவனுக்கு நோயின் தன்மை அறிந்து மருந்து கொடுப்பவன் தான் மனிதன்.  நோயாளியின் விருப்பப்படி மருந்து கொடுப்பவன் மருத்துவன் வடிவில் இருக்கும் கொலையாளி
 நவீன ஞானிகள் பலரும் கொலையாளிகள் போலவே இருக்கிறார்கள்.  எதை சொன்னால் மக்கள் சந்தோஷப்படுவார்களோ எதை சுட்டிக் காட்டினால் மக்களுக்கு ஆனந்தம் பீறிட்டு எழுமோ அதைதான் தங்களது முக்கிய உபதேசமாக கொண்டிருக்கிறார்கள்
தங்களது உபதேசத்தால் யாருக்காவது  நன்மை ஏற்படுகிறதா?  ஊரு உலகத்திற்கு கொஞ்சமாவது பிரயோஜனம் உண்டா? என்பதை  பற்றியெல்லாம் தற்கால ஞானிகள் கவலைப்படுவதே இல்லை.  கூட்டம் கூடுகிறதா?   வசூல் வேட்டை நல்லமுறை நடக்கிறதா?  தங்களது ஆசிரம கட்டிடங்கள் வானளாவ  உயருகிறதா?  அதுபோதும் இவர்களுக்கு.  
பட்டினத்தார் குருடனும் குருடனும் குருட்டு ஆட்டம் ஆடி குழிவிழுந்தாரடி என்று சொல்வார்.  காமத்தை வெல்லாதவன் அதை வெல்வதற்கு வழி சொல்கிறேன் என்று கிளம்பினால் அதை எவனாவது நம்பினால் சர்வ நிச்சயமாக பாதாளத்தில் விழ வேண்டியது தான்
   நடிகையுடன் தான்  தனித்திருந்ததை ஆன்மிக பரிசோதனைக்காக என்கிறார் நித்தியானந்தா,  பரிசோதனை  செய்து பார்க்க வேண்டியது எல்லாம், பயிற்சி எடுக்க வேண்டியது எல்லாம்.   சன்னியாச கோலம் கொள்வதற்கு முன்னால் தான் கொண்ட பிறகு செய்வது எல்லாம்  கட்டிய காவிக்கும், நம்பிய மனிதருக்கும் செய்கின்ற துரோகமாகும்.  
ஒரு வாதத்திற்காக இந்த பரிசோதனையை  நியாயம் என்றே வைத்துக் கொள்வோம்.  முதலில் அவர் ஒரு மணி நேரம்  தண்ணிருக்கடியில் மூச்சை அடக்கி உட்கார்ந்து பரிசோதனை செய்திருக்க  வேண்டும்.  எரிகின்ற நெருப்பிற்குள் தியானம் செய்து பயிற்சி செய்திருக்க  வேண்டும்.  அதன் பிறகு காம பரிசோதனையை குறைந்த பட்சம் தனது  பக்தர்களுக்காவது சொல்லிவிட்டு செய்திருப்பாரேயானால் அவரை நம்புகின்ற  ஆத்மாக்களாவது   மன்னித்திருக்கும் பாவம் கதவை திறந்தால் காற்று வரும்  என்று தெரிந்தவர் கதவை  மூடினால் புயலே வரும் என்பதை மறந்தே போய்விட்டார்.
      வாழ்ந்தவர்களுக்கும், வாழ்கிறவர்களுக்கு வாழ போகிறவர்களுக்கும் வாழ்க்கை  என்பது போராட்டம் என்பது தெளிவாக தெரியும்.  உலக வரலாற்றை அல்ல நம்  பாட்டன், பாட்டி வாழ்ந்த முறையையே ஒரு முறை பின்னோக்கி பார்த்தால் வாழ்க்கை  போராட்டத்தின் தன்மை எத்தகையது என்பது நன்றாக தெரிந்து விடும்.  ஆனால்  ரவிசங்கர் என்ற மகாயோகி சொல்கிறார் வாழ்க்கை போர்க்களமல்ல, ஒரு கலை என்று,  அதுவும் ஒவியம் வரைவது போல், சங்கீதம் பாடுவது போல் கடினமான கலை  இல்லையாம்.  வீட்டின் முற்றத்தில் சானம் தெளிப்பது போல சுலபமான ஒரு  கலையாம்.  இவ்வளவு சுலபமானதற்காக எதற்கு நீ வருந்துகிறாய்,  என்னோடு வா,   அந்த கலையை கற்பிக்கிறேன் என்கிறார்.
    குறி தவறிய ஒரு துப்பாக்கி  குண்டு அவர் பக்கத்தில் வந்து விழுந்தவுடனேயே அவர் எவ்வளவு சுலபமான கலையை  கற்பித்து வருகிறார் என்று மிக எளிமையாக விளங்கிவிட்டது.   சுட்டவன் யாரென்று  தெரியாது.  எதற்காக சுட்டான் என்று தெரியாது.  அதற்குள்ளாகவே அவர்  சொன்னார் அது எனக்கு வைக்கப்பட்ட குறிதான் என்னை கொல்ல நடந்த சதிதான் என்ற  அடித்து சொன்ன ரவிசங்கர் மறுவினாடியே வாதத்தின் அடுத்தகட்டத்துக்கு  போய்விட்டார் நான் அவனை மன்னித்து விட்டேன் என்று கருணைமொழி உதிர்த்தார்.    சுட்டது ஆனா? பெண்ணா?  குறி தனக்கா?  பக்கத்தில் உள்ளவருக்கா?   உண்மையில் அது கொலை முயற்சி தானா?  என்பதை ஆராய்வதற்கெல்லாம் அவர் வீணாக  நேரம் ஒதுக்கவில்லை.  சுட்டவனே வலிய வந்து தெருநாய்களுக்காக வைத்த குறி  தப்பி விட்டது என்று சொல்லிய பிறகு தனது வாதம் சாரமற்று போய்விட்டதே  என்றெல்லாம் அவர் அலட்டியும் கொள்ளவில்லை.  உண்மையை தெரியாமலே அவசரப்பட்டு  உளறுவது தான் வாழம் கலையின் தத்துவமோ  என்னவோ? நமது அறிவுக்கு அது ஒரு  நாளும் எட்டாது என்று நினைக்கிறேன்.
     வனாந்திரத்தில் குகைகளில் புல்வெளிகளில் ஆசிரம் அமைத்து ஆன்மிக பணி  செய்ததெல்லாம் அந்த காலம்.  அப்போது இருந்த முனிவர்களுக்கு மக்கள் சேவை  என்பது  பாரமரர்களுக்கு அறிவை கொடுப்பதும், முக்திக்கான வழியை காட்டுவதும்  தான்
 மற்ற வேலைகளை அரசர்களும், அரசாங்கமும்  கவனித்து கொண்டது.  இன்றைய அரசர்களுக்கு கட்சி தலைமைக்கு வணக்கம் போடவும்  சொந்த குடும்ப சண்டைகளை தீர்க்கவும் நேரம் சரியாக இருப்பதினால் மக்கள்  பிரச்சனையை கவனிக்க முடிவதில்லை,  
    அதனால் சுவாமி விவேகானந்தர்  சொன்னதுபோல் பசித்தவனுக்கு வேதம் படித்து காட்டாமல் சாதம் வடித்து கொடுக்க  வேண்டிய கடமை துறவிகளுக்கும் உண்டு.   சாதம் வடிக்க அரிசி இலவசமாக  கிடைக்குமா  என்ன?  அதற்கு பணம் வேண்டும்;.  அதற்காக சந்நியாசிகள் காணிக்கை  பெறலாம் நன்கொடை வாங்கலாம் அதில் தவறில்லை,   வாங்கிய நன்கொடையை  மக்களுக்கு கொடுக்காமல் தாங்களே கமலன்டத்திற்குள் பதுக்குவது தான்  கொடுமைகளின் துவக்கமாக அமைந்து விடுகிறது 
    பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவது  தியான கூடங்கள் அமைப்பது சந்நியாசத்தின் நோக்கமல்ல,  கல்வி  கிடைக்காதவர்க்கு கல்வியும் மருந்து தேவைப்படுவர்க்கு மருந்தும், விளக்கு  இல்லாத ஊருக்கு விளக்கும் கொடுக்க வேண்டியது தான் இன்றைய காலத்தின்  கட்டாயமாக இருக்கிறது  சமூக சேவகர்கள் என்று கூறிக் கொள்ளும் சாமியர்களின்  பலர் கூட நூறு
ரூபாய் சேவை செய்வதற்க்கு ஆயிரம் ரூபாய்க்கு விழா எடுக்கிறார்கள்.  இதனால் வாங்கும் நன்கொடைகள் விமர்சனத்திற்கு உட்பட்டுவிடுகிறது.
மக்கள் பணி செய்வதற்கு பணம்  அவசியம் தேவை.  சேவையை பொறுத்து தேவைப்படுகிற பணத்தின் அளவு பல ஆயிரம்  கோடிகளாக கூட இருக்கலாம். ஒரு ரூபாய் ஆனாலும் ஒரு கோடி ரூபாய் ஆனாலும் அந்த  பணத்திற்கு அதிகாரியாக சொந்தகார்ராக பகிர்ந்தளிப்பவராக சந்நியாசி  இருக்கலாமே தவிர அவைகளால் பயனடைபவராக ஒரு போதும் அவர்கள் இருக்க கூடாது,   அப்படி இருந்தால் அதற்கான கூலியை கொடுத்தேயாக வேண்டும். 
சில சமூக அமைப்புகள் உயிரோடு  உள்ளவர்களை குருவாக ஏற்க கூடாது என்று சொல்கின்றன    நித்தியானந்தாவை தெய்வமாக  கொண்டாடியவர்கள் அவர் மீது பழி வந்ததும் வெளியில் நடமாட கூட முடியாத  அளவிற்கு கூனிக் கூறுகி போனதை பார்க்கும் போது நமக்கும் இது சரியானது போல  தான் தோன்றும்,  ஆனால் உண்மையில் இது சரியான கருத்தே அல்ல.  குரு மூலமாக  கற்று கொள்ளும் வித்தைக்கும் குருட்டான போக்கில் கற்றுக்கொள்ளும்  வித்தைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
    வாழ்ந்து முடித்தவர்களை  காரணகுருவாக ஏற்றுக் கொண்டு,  வாழ்ந்து கொண்டிருப்பவர்களை காரிய குருவாக  ஏற்றுக்கொண்டு ஆன்மிக பயணத்தை செய்தால் தான் அதன் லட்சியம் நிறைவேறும்,    புத்தர் வாழ்ந்த காலத்திலும், ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த காலத்திலும்  அவர்களை குருவாக ஏற்று கொள்ள சமுதாயம் மறுத்திருக்குமேயானால் அதன்  பாதிப்புகள் மோசமாக இருந்திருக்கும்.  
   அதனால் வாழம் ஞானிகளை  வழிகாட்டிகளாக ஏற்று கொள்வதில் தவறில்லை.  அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை  நுழைந்து பார்க்க முடியாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் அவர்களின் சொந்த  தேவைகளையாவது எளிமையாக கொண்டிருக்கிறார்களா?  என்பதை பார்க்க வேண்டும்.   வெள்ளிதட்டில் தங்ககரண்டியில் ஒரு துறவி சாப்பிடுகிறான் என்றால் தன்னை  சுற்றி பணக்காரர்களை மட்டுமே சுலபமாக அண்ட விடுகிறான் என்றால் கொடுக்கும்  போது இன்முகமும், கொடுக்காத போது பாராமுகமும் கொள்கிறான் என்றால் அவர்  துறவில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதை மிக எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
    பிர்லா மாளிகையில் மகாத்மா காந்தி  தங்கியிருந்தார்.   அவர் சுட்டு விரலை காட்டினால் போதும் காந்தியின் காலடி  தங்க அபிஷேகத்தால் குளிர்ந்து போயிருக்கும், ஆனால் காந்தி அங்கேயும் தனது  கிழிந்த வேட்டியை தான் படுக்கையாக விரித்திருந்தார்.  வெறுங்கையை தலைக்கு  கொடுத்து படுத்தார்.   காந்தியை போல வாழ முடியுமா?  என்றுயெல்லாம் கேட்க  கூடாது.
     காந்தி குடும்பஸ்தர், அவரை  விட எளிமையாக வாழ வேண்டியதே துறவிகளின் கடமையாகும் வெறும் தேங்காய்  மட்டையில் உட்கார்ந்து காலம் முழவதுமே வெறும் காலில் நடந்தவர் தான் காஞ்சி  பெரியவர்.  அவரை பார்த்த நாம் அவரை போல் எளிமையாக இருப்பவர்களை  விட்டுவிட்டு ஆடம்பரத்தை தேடும் போது தான் போலி விதைகள் மரமாகிறது.
    சந்நியாசிகளும் மனிதர்கள் தான் மனித  உடலுக்கு இயற்கையாக உள்ள உபாதைகள் அவர்களுக்கும் உண்டு தான்.  இருந்தாலும்  அந்த உணர்வுகளை கடக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது அடக்க தெரிந்திருக்க  வேண்டும்.  இரண்டு முடியாவிட்டால் சந்நியாச கோலத்தை கலைந்து விட்டு  சம்சாரியாகி விட வேண்டும்.  அதற்கு தைரியமில்லாதவர்கள் என்னை பொறுத்தவரை  வாழ தகுதியில்லாதவர்கள்.  
    ஒரு துறவியின் மேல் பொய்  குற்றசாட்டுகளை சாட்டி சிறையிலடைப்பதும் தண்டைனை கொடுப்பதும் வரலாற்றுக்கு  புதியது அல்ல சேக்கிழாரும், பட்டினாத்தாரும், வைகுண்ட சாமியும் அரசாங்க  பார்வையில் குற்றவாளிகள் தான் ஆனால் ஆண்டவன் பார்வையில் முழுமையான  சுத்தவாதிகள் அதற்கு காரணம் அவர்களின் ஆத்மா சுத்தமானது.  சுத்தமான ஆத்மா  சூரியனுக்கு சமமானதாகும்,  சூரியனை சிங்க கூட்டம் கூட மறைக்க முடியாது.









