தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்


திருச்சி, மார்ச் 24: பெண்களுக்கு இலவச மின் விசிறி (ஃபேன்), மிக்சி, கிரைண்டர் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2, அனைத்துக் கல்லூரிகள், பல்தொழில் பட்டயக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இலவச மடிக் கணினி, 3 லட்சம் பேருக்கு இலவச பசுமை வீடுகள் போன்றவை வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருச்சியில் ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்டார்.  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:  மடி கணினி: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக மடி கணினி (லேப்டாப்) வழங்கப்படும். மேலும், அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்தொழில் பட்டயக் கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடி கணினி வழங்கப்படும்.  இலவச பசுமை வீடுகள்: வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு 300 சதுரஅடியில் ரூ.1.80 லட்சத்தில் இலவச நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும், இத் திட்டத்திலேயே 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ரூ.ஒரு லட்சம் மானியத்துடன் வீடுகள் கட்டித் தரப்படும். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன் வாங்கி அல்லல்படும் கடனாளிகளின் பிரச்னை களையப்படும்.  ஃபேன், மிக்சி, கிரைண்டர்: பெண்களுக்கு ஒரு மின் விசிறி (ஃபேன்), ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருள்களும் இலவசமாக வழங்கப்படும்.  இலவச பஸ் பாஸ்: 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், அரசுப் பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்குச் சென்று வர இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.  ஆதரவற்றோர் தங்கும் விடுதிகள்: ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் தலைமையிடத்திலும் முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். அங்கு 3 வேளை உணவு வழங்கப்படும். புத்தக நிலையம், தியான மண்டபம் அமைக்கப்படும்.  20 கிலோ இலவச அரிசி: அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். விலைவாசியைக் குறைக்க ஆன்லைன் வர்த்தகதாரர்கள், பதுக்கல்காரர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  விவசாய உற்பத்தி, லாபத்தைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் விவசாய விளை பொருள்களுக்கு குறைந்த ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.  தங்கத் தாலி: திருமண உதவித் திட்டத்தில் இப்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கத் தாலி இலவசமாக வழங்கப்படும். இளநிலைப் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கத் தாலி இலவசமாக வழங்கப்படும்.  உதவித் தொகை உயர்த்தப்படும்: முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மற்ற உதவித் தொகைகள் அனைத்தும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.  நடமாடும் மருத்துவமனை: குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.  தடையில்லா மின்சாரம்: வீடு, தொழில், விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்படும். 2013-ம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டம் வகுக்கப்படும். 2012-ம் ஆண்டுக்குள் 151 நகராட்சி, மாநகராட்சிகளில் கழிவுகளைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 64 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.  தமிழ் ஆட்சி மொழி: தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்ய திருக்குறள் உள்ளிட்ட அனைத்து இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகள், உலக மொழிகளில் மொழி மாற்றம் செய்து, அவை இணையத்தில் இடம் பெறச் செய்யப்படும்.  தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.  அரசு ஊழியர் கோரிக்கைகள்: அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்துக் குறைபாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும். அரசு ஊழியர்கள் இப்போது அனுபவித்து வரும் அனைத்துச் சலுகைகளும் தொடரும். அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்படும். தனியார் நிறுவனங்களில் ஒதுக்கீடு, வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.  காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: தமிழகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் புதிய பணியிடங்களும் ஏற்படுத்தப்படும். மருத்துவக் கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படமாட்டாது.  கேபிள் டி.வி. அரசுடைமை: தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும். அனைவருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்பு, அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.  மோனோ ரயில் திட்டம்: சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூரில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.  சட்டம்-ஒழுங்கு: தயவுதாட்சண்யம் இன்றி சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அனைத்துக் காவல் நிலையங்களும் மின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படும்.  ஆடு, மாடுகள்: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.  6 ஆயிரம் கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.  பல்வேறு படைகள்: பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க "மாணவர் சிறப்புப் பாதுகாப்புப் படை' அமைக்கப்படும்.  மின் திருட்டைத் தடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.  வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்புக் கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு "சிறப்பு சுய பாதுகாப்புப் படைகள்' அமைக்கப்படும். மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.  

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...