ஒரே ஒரு இறைவன்

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும். இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல் இறவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம். இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது. இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன். இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்? துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்! இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும். ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும். உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். திருக்குர்ஆன் 4:1 எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், பெªத்தர், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.


--

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...