இவ்வுலகில் நிச்சயமாக நடக்கும் என எந்த ஒரு நிகழ்வையும் உறுதியாகக் கூற இயலாத நிலையில், ஒரே ஒரு நிகழ்வை நடந்தே தீரும் என அறுதியிட்டுக் கூறலாம். அது நாம் ஒவ்வொருவரும் ஒருநாள் மரணித்தே தீருவோம் என்பதாகும். ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகள் குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்தக் கட்டுரை ஒருவர் இறந்தவுடன் அவருக்குச் செய்யவேண்டிய கடமைகள் குறித்த சிறு நினைவூட்டலே. முதலாவதாக இறந்தவர் ஏதேனும் கடன் வைத்திருந்து அதனைத் திருப்பிச் செலுத்த இயலாது மரணித்து விட்டாரா எனப் பார்க்க வேண்டும். "இஸ்லாமிய வழியில் அறப்போரில் உயிர்நீத்தோரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன, அவரது கடனைத் தவிர" என்பது நபிமொழி. அவனது கடனுக்கு பிறர் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றால் இத்துணைப் பெரிய தியாகம் செய்தும் அதன் பலனை அனுபவிக்க முடியாத பரிதாபமான சூழ்நிலை உருவாகி விடும். "கடனுடன் மரணித்தோருக்கு அவரது கடன் அடைக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத்தொழுகை நடத்த மாட்டார்கள்" என்பது ஆதாரப் பூர்வமான செய்தியாகும். 'நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவர் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டுமா என்று நபி(ஸல்) கேட்டர்கள். 'ஆம்" என்று பதிலளிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) தாம் ஜனாஸா தொழுகையை நடத்தாமல் ' உங்கள் சகோதரருக்கு தொழவையுங்கள்" என்று கூறி நகர்ந்து விட்டார்கள் என்ற செய்தி பல நபித் தோழர்கள் வழியாக பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசாங்கம் இருந்து அங்கு இறைவனின் கலீஃபா (இறைவனின் ஆட்சியாளர்) ஆட்சி புரிந்தால் அவருக்குக் கீழ் இருக்கும் முஸ்லிம் குடி மகன் கடன் பட்டு விட்டு அடைக்க முடியாமல் இறந்தால் அதை அடைக்கும் பொறுப்பை அந்த ஆட்சியாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் கடனுக்காக சொல்லப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து உணரலாம். ''இறை நம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாக இருப்பின்) அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக் கொண்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) புகாரி - 2397 எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்கள். (2387) அதேபோல், செல்வந்தர்களின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் 'ஜகாத்" (ஏழைவரி) நிதியைக் கடனுக்காகச் (கடன் காரர்களின் கடனை அடைக்கச்) செலவிட வேண்டும் என்பதை இறைவன் இவ்வாறு கூறுகிறான். நிச்சயமாக ஜகாத் என்பது பரம ஏழைகளுக்கும் - ஏழைகளுக்கும் - கடன்பட்டுள்ளவர்களுக்கும்...... உரியதாகும். (அல் - குர்ஆன் 9:60)
நம் செல்வத்தின் மீது வந்து விழும் கடன் சுமையான ஜகாத்தை (ஏழைவரியை) நாம் ஆண்டுதோறும் பிரித்தெடுக்க வேண்டும். உரியவர்களுக்கு அதை கொடுத்தாக வேண்டும். இல்லையெனில் செல்வந்தர்களாக இருந்தும் மரணத்திற்குப் பிறகு கடனாளிகளாக இறைவனை சந்திக்கும் நிலை ஏற்படும். (இவற்றிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்) இரண்டாவதாக இறந்தவர் ஏதேனும் வஸிய்யத் (மரண சாசனம்) செய்து மரணித்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். தமது சொத்தில் ஒரு குறிப்பிட்டப் பகுதியை ஏதேனும் அறவழியில் செலவிட நிபந்தனை ஏதேனும் விதித்துச் சென்றிருந்தால் அதனைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். ஆனாலும் இதன் அளவு அவர் விட்டுச் சென்ற மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். மூன்றாவதாக, கடன்களில் மிகப் பெரிய கடன், அல்லாஹ்வுக்கு வைத்துச் செல்லும் கடன். அதாவது ஒருவர் ஹஜ் அவர் மீது கடமையாகிய நிலையில், ஹஜ் செய்யும் நிய்யத் வைத்து மரணித்திருப்பாராயின், அவரது வாரிசுகள் இந்த ஹஜ்ஜை நிறைவேற்றுவதும் முக்கியமானதாகும். "அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்". அவை:
1. நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
2. பயனளிக்கக் கூடிய அறிவு
3. தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளைகள்
ஆதாரம் : முஸ்லிம் (3:1631), அபூதாவூத் (3:2880), ஸூனன் அத்திர்மிதி (3:1376), ஸூனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316)
மரணம் பற்றிய அச்சம் நம் மனதில் ஓங்கும் போது நாம் நல்ல மனிதர்களாக வாழ முற்பட்டு விடுவோம். இறைவனை அதிகம் நினைவு கூர்ந்து பாவங்களுக்கு அவனிடம் மன்னிப்புக் கேட்போம். மனக் குழப்பங்கள் - பயம் - ஆகியவற்றிலிருந்து விடுபட நபி(ஸல்) கற்றுக் கொடுத்த பிரார்த்தனை: "(இறைவா) மறைவானவற்றின் மீதும் படைப்பினங்களின் மீதும் உனக்குள்ள ஆற்றலைக் கொண்டு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். வாழ்வு எனக்குச் சிறந்தது என்று நீ அறியும் காலம் வரை என்னை வாழ வைப்பாயாக. மரணம் எனக்குச் சிறந்தது என்று நீ அறியும் போது என்னை மரணிக்கச் செய்வாயாக! இறைவா! மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு நான் அஞ்சி வாழுமாறு செய்வாயாக! சாந்தமான நிலையிலும் கோபமான நிலையிலும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தைக் கொடுப்பாயாக! வசதியின் போதும் வறுமையின் போதும் நடுநிலை தவறா நிலையை உன்னிடம் கேட்கிறேன். முடிவுறா அருள் பாக்கியத்தையும் - கண்குளிர்ச்சியையும் உன்னிடம் யாசிக்கிறேன்! உன் தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் நிலையை உன்னிடம் வேண்டுகிறேன். மரணத்திற்கு பிறகுள்ள திருப்தியான வாழ்க்கையையும் உன்னிடம் வேண்டுகிறேன். உன் திருமுகத்தைக் காணும் இன்பத்தையும் உன்னைச் சந்திப்பதின் ஆர்வத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! ஈமான் எனும் இறை விசுவாசத்தின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! துன்பங்களும் - தொல்லைகளும் எங்களை அண்டாமல் பார்த்துக் கொள்வாயாக" என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். (அஹ்மத் - நஸயி) என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். (அஹ்மத் - நஸயி) மேலே குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றியாளர்களாக மாற வல்ல அல்லாஹ் அருள் செய்வானாக.
--
--
Regards
Hasan mohamed.J
Hasan mohamed.J