இராக் போரில் இலட்சம் பேர் படுகொலை
ராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுத்திருந்த காலத்தில், சரியான காரணமின்றி ஒரு லட்சம் இராக்கியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலமான 2004 முதல் 2009 வரை இப்படுகொலைகள் அரங்கேறியுள்ளன என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜாலியன் அசான்ஜ் தெரிவிக்கிறார்.
இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் உள்ளன. இவர்களில் 80 விழுக்காட்டினர் சிவிலியன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய அசான்ஜ், இந்த ஆவணங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானேங்க் கடுமையான குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
'அல்காயிதா' அமைப்புக்கு உதவியதாகவும் எதிரிக்குத் துணைபோனதாகவும் அவ்வீரர்மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அரசின் செயலை, சர்வதேச அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதாக அசான்ஜ் கண்டித்தார்.
ஒரே ஆண்டில் 26 ஆயிரம் பாலியல் குற்றங்கள்
மெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவப் படை வீரர்கள் மத்தியில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 26 ஆயிரம் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளனவாம்! இது, முந்தைய ஆண்டில் நடந்த குற்றங்களைவிட 37 விழுக்காடு அதிகமாகும். இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 70 பாலியல் குற்றங்கள் அமெரிக்க ராணுவப் படையினரால் நடந்தேறியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.
இவற்றை அமெரிக்க அதிபரும் பாதுகாப்பு அமைச்சரும் வன்மையாகக் கண்டித்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
துருக்கி விமானங்களில் புதிய நடைமுறைகள்
ருக்கி ஏர்லைன்ஸ் விமானங்களில் இஸ்லாமிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி விமானப் பணிப்பெண்கள் உதட்டுச் சாயம் பூசுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மதசசார்பற்ற சக்திகள் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான், இஸ்லாமிய நடைமுறைகளை ஓசையின்றி கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
உஸ்மானிய டர்கி தொப்பி (டர்பூஷ்), நீளமான சீருடை அணிவது, மது வகைகளுக்குத் தடை, இறுதியாகச் சிவப்பு உதட்டுச் சாயத்திற்குத் தடை ஆகியவற்றை துருக்கி ஏர்லைன்ஸ் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இது பாரம்பரிய உஸ்மானிய நடைமுறைக்குத் திரும்புகின்ற நல்ல தொடக்கமாகும் என்று நிறுவனம் வர்ணித்துள்ளது.
கர்ளாவி ஒரு ஜிஹாதி -
சியோனிஸ்டு ஏடு வர்ணனை
க்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் இன்றைய இஸ்லாமியப் பேரறிஞர்களில் ஒருவர்; சர்வதேச உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர். அண்மையில் பாலஸ்தீனத்தின் ஃகஸ்ஸா பகுதிக்கு கர்ளாவி 60 உலமாக்களுடன் வருகை புரிந்தார். இதை, சியோனிஸ்டு எபிரேய ஏடு ஒன்று, "ஆபத்தானது; அவர் ஒரு ஜிஹாதிய ஷைகு'' என்று வர்ணித்தது.
கர்ளாவியின் மார்க்கத் தீர்ப்புகள் இஸ்ரேலுக்கு எதிரானவை; இஸ்ரேல்மீதான போரைத் தூண்டுபவை. அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் அவருடைய ஃபத்வாக்கள் பின்பற்றப்படுகின்றன. அவரது வருகை மார்க்க மோதல்களையும் சர்வதேச அளவில் பாதிப்பையும் உருவாக்கும் என்று அந்த ஏட்டில் யூதர் ஒருவர் எழுதியுள்ளார்.
அப்துல் மலிக் பின் மர்வான்
காலத்து பொற்காசு ஏலம்
இலாஹ இல்லல்லாஹ்; வஹ்தஹு லா ஷரீக்கலஹு என்ற கலிமா அரபி மொழியில் பொறிக்கப்பட்ட முதலாவது தங்க நாணயம் ஒன்று அண்மையில் ஏலத்திற்கு வந்தது. உமய்யா கலீஃபாக்களில் ஐந்தாமவரான அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் கி.பி. 690இல் டமாஸ்கஸில் தயாரிக்கப்பட்ட அந்தப் பொற்காசு 'தீனார் 77' என்று அழைக்கப்படுகிறது.
அபூர்வமான வேலைப்பாடுகளுடன் கூடிய இப்பெற்காசு லண்டனில் மே மாதம் பகிரங்க ஏலத்திற்கு வந்தது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட இந்தச் சிறிய பொற்காசு 4.25 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க நாணயமாகும். அதில், கூஃபா அரபி எழுத்து வடிவத்தில் ஒரு பக்கத்தில் 'குல் ஹுவல்லாஹு' அத்தியாயம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் 'கலிமா' காணப்படுகிறது. ஹிஜ்ரீ 77ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதற்கு அடையாளமாகவே 'தீனார் 77' என்று அதில் குறிப்பிடப்படுகிறது.
எகிப்தில் மது இல்லாத சுற்றுலா விடுதி
கிப்து நாட்டில் செங்கடற்கரையில் மது இல்லா முதலாவது சுற்றுலா விடுதி திறக்கப்பட்டுள்ளது. அல்ஃகர்தகா நகரில் தொடங்கப்பட்டுள்ள இவ்விடுதியில், போதைக்கு இடமில்லை. மற்றெல்லா வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும்.
இந்தச் சுற்றுலா விடுதியில் 134 அறைகளும் 35 பகுதிகளும் உள்ளன. நீச்சல் குளமும் உண்டு. கடைசி மாடி பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கான நீச்சல் குளம், அரங்கம், பெண் காவலர்கள் போன்ற ஏற்பாடுகள் உள்ளன.
விடுதியின் திறப்பு விழா நிகழ்வுகள், மது கண்ணாடிக் கிண்ணங்கள் உடைப்பைக் கொண்டு துவங்கின.
ஸ்வீடன் நாட்டில் பாங்கொலி
வீடன் நாட்டில் வெடியா பள்ளிவாசலில் முதல்முறையாக பாங்கொலி வெளியே கேட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் நகரில் ஒலித்த தொழுகை அழைப்பு முஸ்லிம்களை பரவசப்படுத்தியது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குத் தெற்கே வெடியா நகரம் உள்ளது.
இந்தப் பள்ளிவாசலில் சுமார் ஏழாயிரம்பேர் தொழுதுவருகிறார்கள். இதுவரை சப்தமிட்டு பாங்கு சொல்வதற்குத் தடை இருந்தது. ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் இப்போதுதான் அனுமதி வழங்கியுள்ளனர்.
சுவீடன் நாட்டில் சுமார் 200 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் சில பள்ளிவாசல்களில் மட்டுமே பாங்கு மேடை உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் தாற்காலிகக் கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன.
பிரிட்டனில் சரிந்துவரும் கிறித்தவம்
ய்லி டெலிகிராஃப் ஏடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது:
பிரிட்டனில் கிறித்தவ மதம் முன்எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்துவருகிறது; அபாயகரமான அளவில் நசிந்துவருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பத்துப்பேரில் ஒருவர் முஸ்லிமாக உள்ளார்.
2011ஆம் ஆண்டு புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் ஏடு, கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட குடியேற்றம் கிறித்தவத்தின் சரிவுக்கு உதவியுள்ளது; அதேநேரத்தில், இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வுகள் குறிப்பாக இளைஞர்களிடையே பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்து ஸ்காட்லாண்டு, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டும் கிறித்தவர்களின் எண்ணிக்கை 4.1 மில்லியன், அதாவது 10 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், இப்பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது.
(அல்முஜ்தமா)