மார்க்சியவாதியின் பார்வையில் குர்ஆன்


என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர், CPI(M)

உழைக்கும் மக்கள் சார்ந்த மனித நேயம், உறுதியான சமூக நல நோக்கு கொண்ட ஒரு கருத்துக் கருவூலம் குர்ஆன்.

ஆனால், சாதாரண மக்கள் குர்ஆன் போதிக்கும் கருத்துக்களை உள்வாங்கிடவில்லை.

அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படாதது மட்டுமல்லாது, தவறான புரிதல்கள் பலவும் நிலவுகின்றன.

மார்க்சியப் பார்வையில் குர்ஆனை பயில்கிற போது, மார்க்சியவாதிகளும், இஸ்லாமிய நம்பிக்கை கொண்டோரும் இணைந்து பணியாற்றும் பொதுவான பாதைகள் புலப்படுகின்றன.

♦ மார்க்சிஸ்ட்கள் போன்றே, பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை குர்ஆன் போற்றுகின்றது.

♦ பல்வேறு மத நம்பிக்கை கொண்டோர் இணைந்து வாழ்ந்திடவும், மதச்சார்பின்மை நெறி வளரவும், குர்ஆன் போதனைகள் வழிகாட்டுகின்றன.

♦ சமூக சமத்துவ குறிக்கோள் கொண்டதாக குர்ஆனின் சமூகப்பார்வை அமைந்துள்ளது.

இதுபோன்ற குர்ஆன் கருத்துக்களில் மார்க்சியமும் உடன்படுகிறது. 

மத நல்லிணக்கம் கொண்ட மதச்சார்பற்ற, சமத்துவ சமுதாயம் மார்க்சியத்திற்கும், குர்ஆனிற்கும் உள்ள பொதுவான இலட்சியப் பார்வையாக திகழ்கிறது.

இஸ்லாம், மாற்று மதத்தினரை எதிரிகளாகப் பார்க்கும் மதம் என்றும், அது சகிப்புத்தன்மை இல்லாதது என்றும், பொய்யான பிரச்சாரம் நீண்ட காலமாக நம் நாட்டில் நடந்து வருகிறது. 

அது உண்மையல்ல. வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் மதிப்பும், மரியாதையும் செலுத்துகிற போதனைகள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. 

மாற்று மதத்தைப் பின்பற்றுபவரிடம் ஒரு இஸ்லாமியச் சகோதரர் கீழ்க்கண்டவாது சொல்ல வேண்டுமென குர்ஆன் அறிவுறுத்துகிறது.

“எங்களுக்கு போதிக்கப்பட்டதை நாங்கள் நம்புகிறோம்; உங்களுக்கு போதிக்கப்பட்டதை நீங்கள் நம்புகிறீர்கள்; உங்களது கடவுளும், எங்களது கடவுளும் ஒன்றே; அவருக்கு நாம் பணிகிறோம்.”

மற்றொரு இடத்தில்,

“உங்களுக்கு உங்கள் மதம்: எங்களுக்கு எங்கள் மதம்” என கூறப்படுகிறது. பல மதங்கள் உள்ள பன்முக சமூகத்தை குர்ஆன் ஆதரிக்கிறது.

எனவே, சமய வேறுபாடுகளைக் கடந்த மக்கள் ஒற்றுமை குர்ஆனின் அடிநாதமாகத் திகழ்கிறது. 

மத நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட மத நம்பிக்கை கொண்டோருக்கு சமமாக பாவித்து, அவர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தும் பாங்கினை குர்ஆனில் காண முடிகின்றது.

இஸ்லாம் வன்முறையை போதிக்கும் மதம் என்ற பிரச்சாரம் காலம் காலமாக செய்யப்பட்டு வருகின்றது. 

இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்டுகளும் ஆளாகியிருக்கின்றனர்.

மார்க்சியம் வன்முறையைத் தூண்டும் தத்துவமாக அவ்வப்போது சித்தரிக்கப்படுகிறது.

இஸ்லாம், மக்களிடையே அமைதியை நிலைநாட்ட விரும்புகிற மார்க்கம் என்பதற்கான ஆதாரங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. 

ஒரு முஸ்லீமின் அன்றாட வாழ்க்கையின் நடத்தை விதியாக அமைதியும், சமாதானமும் இருக்க வேண்டுமென குர்ஆன் வலியுறுத்துகிறது. அவரது உள்ளத்தின் ஆழத்தில் அமைதி குடிகொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், ஒரு சமூகத்தில் சமூகநீதி மறுக்கப்பட்டு, பெருவாரியான மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகும்போது, அத்தகைய அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்ற கருத்தும் குர்ஆனில் உள்ளது. 

இந்தக் கருத்தினை நியான உணர்வு கொண்ட யாரும் மறுக்க முடியாது. 

சமூகத்தில் அநீதி நிகழும் போது கண்டும் காணாமல் இருப்பது, அநாகரிகமானது. 

குர்ஆனில் இதைப்பற்றிக் குறிப்பிடும்போது, கீழ்க்கண்ட பொருள் பொதிந்த வாசகம் உள்ளது.

“அல்லாவைப் போன்று போராட வேண்டும்; ஆனால் ஆதிக்க வெறி கூடாது. ஆதிக்க வெறியர்களை அல்லா நேசிப்பதில்லை.”

சுயநலத்துக்காகவும், குறிப்பிட்ட மக்களை ஒடுக்குவதற்காகவும் போரிடுவதை குர்ஆன் விரும்பவில்லை. 

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும், அவர்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் போராடுவதை குர்ஆன் வாழ்த்தி வரவேற்கின்றது.

உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி, ஒடுக்கப்பட்டு வரும் உழைப்பாளி மக்களை நாட்டை ஆளும் உன்னத நிலைக்கு உயர்த்திட மார்க்சியமும் போராடி வருகிறது.

அந்த வகையில் மார்க்சியமும், குர்ஆன் போதனையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. 

அதனால் ஒடுக்கும் வர்க்கங்களும், பிற்போக்குவாதிகளும், மார்க்சியத்தையும், இஸ்லாம் மதத்தையும் வன்முறை தத்துவங்கள் எனத் தூற்றுகின்றனர். 

உண்மையில், சமூகப் பெரும்பான்மை மக்களான, ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கங்களுக்காகப் போராடுவதை வாழ்க்கை நெறியாகக் கொண்டவை, மார்க்சியமும், இஸ்லாமும்.

குர்ஆன் அமைக்க விரும்பும் சமூகம் எப்படிப்பட்டது?

இஸ்லாமிய ஆய்வுகளில் ஆழ்ந்த புலமை கொண்ட தேர்ந்த அறிஞர்கள் குர்ஆனின் இலட்சிய சமூகத்தை கீழ்க்கண்டவாறு வரையறுக்கின்றனர்.

“சமூக நீதியும், சமூக சமத்துவமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் அடிப்படை நோக்கம்”.

♦ இத்தகு சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை; குறிப்பிட்ட சிலரது கைகளில் செல்வம் குவியும் நிலை இல்லை;

♦ எஜமானர்களும், அடிமைகளும் என்ற பேதம் இல்லை;

♦ சிந்தனைக்கும், சொல்லுக்கும் முழு சுதந்திரம் நிலவிடும்;

♦ மனித கௌரவம் மறுக்கப்படாது ;

♦ மத, இன, மரபு மற்றும் தேச எல்லைகள் காரணமாக மக்கள் ஒற்றுமை பாதித்திடும் நிலை ஏற்படாது;

♦ பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும அநீதி நிகழ்ந்திடாது.

♦ எல்லா மனிதர்களும் தலைநிமிர்ந்து நடக்கும் நிலை உருவாகும்”.

இத்தகு உயரிய சமூக இலட்சியமும, கம்யூனிச இலட்சியமும் ஒன்றாகவே காட்சியளிக்கிறது. 

மாமேதை கார்ல் மார்க்ஸ் உழைப்பாளி மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டமே, கம்யூனிச இலட்சியம் ஈடேற வழிவகுக்கும் என்றார். 

இஸ்லாமும், குர்ஆனும் முன்வைக்கும் சமூகப்பார்வையை ஏற்றுக் கொண்டு, உழைப்பாளி மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிற, போராடுகிற, ஒவ்வொரு இஸ்லாமிய அன்பரும் ஒரு கம்யூனிஸ்டே!

இஸ்லாமிய இறை மார்க்கத்தில், ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அக்கறை உணர்வு முக்கிய இடம் பெற்றுள்ளது.

குர்ஆனில் இதற்கென்று ஒரு தனி அத்தியாயம் உள்ளது. இதில் உள்ள பல வரிகள் பிரார்த்தனைகளின் போது உச்சரிக்கப்படுகின்றன. 

ஏழைகள் மீதான கருணை இல்லாதவர்களின் பிரார்த்தனையை இறைவன் ஏற்பதில்லை என்று கூட அழுத்தமாக சொல்லப்படுகிறது. 

சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக, வறுமை ஒழிப்பதற்காக, ஒவ்வொரு இஸ்லாமிய அன்பரும் உளப்பூர்வமாக செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது

இந்த உயரிய கருத்து, குர்ஆனில் நம்பிக்கை கொண்டோரும, மார்க்சியவாதிகளும் கரம் கோர்த்து செயல்பட வழிவகை செய்கின்றது.

* குர்ஆன் காட்டும் சமூக நல நெறிகளைப் போற்றுவோம்!

* உழைக்கும் மக்களின் விடியலுக்காக ஒன்று சேர்வோம்!
-- 

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...