நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட நபித்தோழர் !
1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: “ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!”