பண்டிகைக்(பெருநாள்)கால சலுகை அறிவிப்புகள்



மனிதனின் ஆயுள் மிகக் குறுகிய ஆயுள். ஈருலக வெற்றிக்கு இந்த அற்ப ஆயுள் முழுவதும் இறைவனுக்குச் சிரம் குப்புற விழுந்து வணங்கியே கிடந்தாலும் அவனது அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லிமாளாது. இருப்பினும் எல்லாம் அறிந்தவனல்லவா இறைவன்? அதனால் சகாயங்களும் சிறப்பு அறிவிப்புகளும் ஏகப்பட்டது வழங்கியுள்ளான். ஒப்பற்ற உன்னதம்
அவை.
கைச்சேதம் யாதெனில் - 25 சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கும் அணிகலன்களில் நாம் கொள்ளும் மகிழ்வும் பெருமையும் இந்த அறிவிப்புகளில் நம்மில் பெரும்பாலானவருக்குக் கண்ணில் படுவதே இல்லை. அதனால் நமக்கான சிறப்புச் சலுகைகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசரமோ, அக்கறையோ நமக்கு இருப்பதில்லை.

ஓர் அறிவிப்பை மட்டும் இங்கு எடுத்துக் கொண்டு சற்றுக் கூர்ந்து பார்ப்போம். விசேஷ அறிவிப்பின் பலன் புரிய வரலாம்.

நாளும் கிழமையும் மாதங்களும் எப்பொழுதும்போல் வந்துபோய்க்கொண்டிருந்தாலும் சில நாட்களை, சில கிழமைகளை, சில மாதங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாக்கி அதில் நமக்குச் சலுகைகளும் அளித்துவிடுகிறான் அவன் - அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா. குர்ஆனில் 89-ஆவது சூரா அல்-ஃபஜ்ரு. அதன் இரண்டாவது வசனத்தில் “பத்து இரவுகளின் மீது சத்தியமாக!” என்று இறைவன் செய்திகள் சில கூறுகிறான். சத்தியமிடும் அளவிற்குப் பெருமைவாய்ந்த அந்தப் பத்து நாட்களும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வியாக்கியானம்.

எல்லா நாட்களையும் படைத்த அந்த இறைவனே ஆணையிட்டுக் கூறும் அந்தப் பத்து நாட்களின் சிறப்பைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறியவையும் ஹதீதுகளில் இடம் பெற்றுள்ளன. ஓர் அறிவிப்பில், “(துல்ஹஜ்ஜின் முதல்) பத்து நாட்களில் செய்யும் நல்லறங்கள் (அவற்றை அடுத்து வரும்) அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் செய்யும் நல்லறங்களைவிடச் சிறந்தவை” என்று நபி (ஸல்) கூறினார்கள். “அறப்போரைக் காட்டிலுமா?” என்று நபித் தோழர்கள் வினவினர். “ஆம், அறப்போரைக் காட்டிலும்“ என்று கூறிவிட்டு, “ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர” என்று நபி (ஸல்) சேர்த்துச் சொன்னார்கள் – புகாரீ 969.

இங்குச் சற்றுக் கூடுதல் கவனம் தேவை. இறைவனுக்கான வழிபாட்டில், அர்ப்பணிப்பில் கடினமானது, உயிரை வாளில் ஏந்தி, களம் புகும் அறப்போர். அத்தகைய போருக்கு இணையாய் ஒப்பிட்டுச் சொல்லப்படும் அளவிற்கு இந்தப் பத்து நாட்களில் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் நல்லறங்கள் விதந்து பேசப்படுகின்றன என்பது செய்தியின் கரு. அவ்வளவு உயர்வு எனில், பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்குமோ? என நினைத்தால்... ‘அச்சம் தவிர்ப்பீர்!’.

இயலுமான, எளிதான, நற்காரியங்கள் – அவற்றைச் செய்தல் போதுமானது. தேவையெல்லாம் இவை இறைவனுக்கு என்ற மனவுறுதியும் கருமமே கண்ணான செயல்பாடும் மட்டுமே.

ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லாதவர்கள் துல்ஹஜ்ஜின் பெருநாள் வரைக்கும், அதாவது 1-9 நாள்கள் நோன்பிருக்கலாம். குறிப்பாக ஹஜ்ஜுடைய அரஃபா நாளில் நோன்பிருந்தால் கிடைக்கக்கூடிய சிறப்பு வெகுமதி பற்றி நபிகள் நாயகம் அறிவித்த செய்தி ஹதீதில் பதிவாகியுள்ளது.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி - முஸ்லிம், திர்மிதி).

அது மட்டுமின்றி, அரஃபா நாளின்போது, நோன்பிருந்துகொண்டு ஒருமித்த மனத்தோடு, படைத்தவனை நினைத்து, பிரார்த்தனை புரிவதற்கான பலன் என்னவாயிருக்கும்? என்பதையும் ஹதீது விவரிக்கின்றது.

“அல்லாஹ், தன் அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைவிட வேறு எந்த நாளிலும் அவன் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் இறைவனே பூமியின் வானுக்கு இறங்கி வந்து 'என் அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? (அவர்கள் கேட்பதைக் கொடுப்பேன்)' என வானவர்களிடம் பெருமையோடு கூறுவான்” என நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

ஆச்சா?

அடுத்து மிகமிக எளிய கூற்றுகளால் எண்ணிலடங்கா நன்மைகளையும் இந்தப் பத்து நாட்களில் பெற்றுக் கொள்ளும் சலுகை அறிவிப்பை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நாட்களுள் இந்த (துல்ஹஜ்) பத்து நாட்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நாட்களில் அதிகமதிகமாக 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்னும் தஹ்லீலையும் 'அல்லாஹு அக்பர்' என்னும் தக்பீரையும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்னும் தஹ்மீதையும் கூறிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். -அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், (தப்ரானீ).

இவை மட்டுமன்றி உபரித் தொழுகை, தான தர்மம், இன்னபிற நற்செயல்கள் அனைத்தும் பல மடங்குகளாகச் சிறப்புச் சலுகை பெறுகின்றன. இந்தப் பத்து நாட்களும் பைசா செலவில்லாமல் மூட்டை கணக்கில் இறைந்து கிடக்கும் வெகுமதிகளை அளவற்று அள்ளி எடுத்துக்கொள்ளலாம் எனும்போது, இன்னும் என்ன? பணம் இருந்து, பயணத்துக்குரிய சௌகரியங்களும் படைத்தவர்களுக்கு ஹஜ் கடமை. இதர மக்களுக்கு அவரவர் இருக்குமிடத்திலேயே வாய்ப்புகள், வெகுமதிகள்.

“துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் ஆற்றப்படும் நல்லறங்களுக்குத் தனிச் சிறப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய தலையாய வணக்கங்கள் அனைத்தும் அந்நாட்களில் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதுதான் எனத் தோன்றுகிறது. மற்ற தினங்களில் இவ்வாறு அமைவதில்லை” என்பதாக இமாம் இப்னு ஹஜர் அஸ்லானீ (ரஹ்) தமது நூலான ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஒன்பது நாட்களின் மற்ற நல்லறங்களோடு பத்தாம் நாளில், (ஓரளவு வசதியுள்ளவர்களால்) கொடுக்கப்படும் உயிர்ப்பலியான குர்பானியும் சேர்ந்து கொள்ள, எண்ண முடியாத சலுகைகள் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.

கண்ணுக்குப் புலப்படும் ஜட வஸ்துகள், அதன் பலா பலன் போலன்றி இவை, இவற்றின் சிறப்புகள் உள்ளார்ந்து உணரப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால் நவநாகரீக உலகில் நம் மனங்களை அலைக்கழிக்கும் கவனக் கலைப்பு சமாச்சாரங்கள் எக்கச்சக்கம். அதைப் புறந்தள்ளிவிட்டால் போதும். மேலும் உறங்கும் முன்போ, தனிமையிலோ அமைதியாக அமர்ந்து கொண்டு, இறைவனும் அவன் தூதரும் அறிவித்துள்ள இந்தச் சிறப்பு சலுகையை மனக் கண்ணில் வலமும் இடமும் ஓடவிட்டுக் கொண்டால், பட்டென இதன் சத்தியம் மனதில் ஆழப்பதியும்.

பிறகு? உள்ளார்ந்த செயல்பாடுகள் எளிய சாத்தியம்.

இதோ! துவங்கப்போகின்றன இந்தப் புனித மாதத்தின் சுப தினங்கள். விசேஷ சலுகைக்குத் தயாராகுங்கள். அள்ளிக் கொள்ளுங்கள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...