பெண் என்றால் கேவலமா?




‘(நபியே!) உம்மிடம் மாதவிடாய் பற்றி அவர்கள் கேட்கின்றனர்.

‘அது ஓர் தொல்லையாகும். மாதவிடாயின் போது பெண்களிடமிருந்து (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை (உடலுறவுக்காக) அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் திருந்துவோரை விரும்புகிறான், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்’ என்று (நபியே!) கூறுவீராக’. (அல்குர்ஆன் 2:222)



ஆண் பெண் இருபாலரிடையே உடற்கூறு ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான வேறுபாடாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைக் குறிப்பிடலாம்.



மாதவிடாய் வெளிப்படும் போது தான், சிறுமி என்ற நிலையிலிருந்து பெண் என்ற நிலையை ஒருத்தி அடைகிறாள். பெண்மையின் மற்றொரு சிறப்பம்சமான தாய்மை ஏற்படுவதற்கான தகுதியையும் மாதவிடாய் தான் தீர்மானிக்கிறது.



உடற்கூறு ரீதியான இந்த வேறுபாட்டைக் காரணம் காட்டி உலகில் உள்ள எல்லா மதத்தினரும் பெண்களை மிகவும் இழிவாக நடத்துகின்றனர். பெண்கள் கூட இத்தகைய இழிவை ஏற்றுக் கொள்கின்றனர்.



மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் புழக்கடையில் ஒதுக்கப்படுகின்றனர். அந்த நாட்களில் பயன்படுத்தப் படுவதற்கென்று பாத்திரங்கள் கூட தனியாக வைத்துக் கொள்கின்றனர்.



அவர்களைத் தொடுவதும் கூட தீட்டாகக் கருதப்படுகின்றது. அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் உண்பதும் பருகுவதும் கிடையாது.



அப்பெண்களை அவர்களின் அழகை அனுபவிக்கின்ற கணவர்கள் கூட பெண்களை இந்த நாட்களில் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.



இயல்பிலேயே பெண்கள் மட்டரகமானவர்கள் என்று சித்தரிப்பது தான் இவர்களது நோக்கமாகும்.

இந்த நிலைமை 20 ஆம் நூற்றாண்டில் கூட முழுமையாக மாறவில்லை. சில குடும்பங்களில் அந்த நிலை மாறியுள்ளது என்றாலும் இத்தனை நூற்றாண்டுகள் இதற்குத் தேவைப்பட்டுள்ளது.



1400 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் எவ்வித உரிமையும் வழங்கப்படாமல் வெறும் போகப் பொருட்களாக மட்டுமே கருதப்பட்டு வந்த காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதலை இஸ்லாம் ஏற்படுத்தியது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் யூத சமுதாயத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவார்கள். உண்ணும் போதும் பருகும் போதும் தம்முடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான். இவ்வசனம் அருளப்பட்ட பின் உடலுறவு தவிர மற்ற அனைத்தையும் செய்யுங்கள்! வீடுகளில் அவர்ளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அபூதாவூது



விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்ற காலத்தில் கூட சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்ற ஒரு மாற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அன்றைக்கே செய்து காட்டியுள்ளனர்.



மாதவிடாய் என்பது கடவுனின் சாபத்தின் அடையாளம் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடு என்ற மூடநம்பிக்கை நிலவிய அன்றைய காலத்தில் அந்தப் புரட்சியை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.



நபிகள் நாயகத்தின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது அவர்கள் படுக்கையிலிருந்து ஒதுங்கினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தம்மோடு ஒரே போர்வையில் உம்மு ஸலமா (ரலி) அவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். அதை உம்மு ஸலமா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். (புகாரி)



எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என் மீது சாய்ந்து கொண்டதுண்டு என அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)



பள்ளிவாசலில் நபி (ஸல்) (இஃதிகாப்) தங்கியிருக்கும் போது எனது வீட்டுக்குள் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் அவர்களின் தலையைக் கழுவி விடுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)



பள்ளியில் இருந்த விரிப்பை கைநீட்டி எடுத்துத் தருமாறு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டனர் எனக்கு மாதவிடாய் என்று நான் கூறினேன். மாதவிடாய் உன் கையில இல்லையே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்



மாதவிடாய் நேரத்தில் தம்மனைவி கடித்த இறைச்சியை அதே இடத்தில் கடித்து நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டுள்ளனர். (நூல்: முஸ்லிம்)



பள்ளிவாசலில் தங்கக் கூடாது! தொழக்கூடாது! நோன்பு நோற்கக் கூடாது. கஃபா ஆலயத்தில் தவாபு செய்யக் கூடாது என்பதைத் தவிர மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் ஏனைய பெண்கள் போல் நடந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.



இருபதாம் நூற்றாண்டில் கூட துணிவாகச் சொல்ல முடியாத முழுமையாக நடை முறைப்படுத்த முடியாத ஒரு புரட்சிகரமான கருத்தை அன்றைக்கு நபி (ஸல்) அவர்கள் சர்வ சாதாரணமாக விளக்கி விட்டார்கள்.



உலகத்தைப் பற்றியோ சமுதாய பழக்கவழக்கங்கள் பற்றியோ அவர்கள் கவலைப்பட வில்லை.

இயற்கையான ஒரு உபாதையின் காரணமாகப் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்படும் கொடுமையை மட்டுமே அவர்கள் கவனத்தில் கொண்டார்கள்.



எந்த உரிமைக்காக இன்றுவரை பெண்கள் போராட வேண்டியுள்ளதோ – போராடியும் பெற முடியவில்லையோ அத்தகைய உரிமைகளை எவ்விதப் போராட்டமும் இன்றி நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு வழங்கி விட்டனர்.



பெண்ணுரிமைக்குப் போராடுவோர் அவர்கள் கேட்கின்ற உரிமைகள் பலவற்றை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளதை உணரட்டும்! முஸ்லிம் பெண்களும் தங்களுக்குக் கிடைத்துள்ள அந்த கண்ணியத்தைப் புரிந்து கொள்ளட்டும்.
 —

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...