நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவிய ஆகியன தி.மு.க.வை எதிர்க்கட்சி வரிசைக்கும் கீழே குப்புறத் தள்ளிப் போட்டிருக்கின்றன. பாவம் ஒரு பக்கம்; பழியொரு பக்கம் என்பதுபோல் தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளால் அக்கட்சியோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளும் வெறும் தோல்வியை மீறி, பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. குறிப்பாக, முஸ்லிம் லீக் மூன்று இடங்களில் போட்டியிட்டு முட்டை வாங்கிக் கொண்டது. ஈழ ஆதரவுக் கட்சிகளான பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் படுதோல்வியைச் சந்தித்து, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. சிக்கனமாக, அவ்வப்போது அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருந்த புதிய தமிழகம் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு, இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் வென்றுள்ளது. கட்சி துவங்கிச் செயல்படத் தொடங்கிய 5 ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்து, 41 இடங்களை அ.இ.அ.தி.க.விடமிருந்து பெற்று, 29 இடங்களில் (70.731%) வென்று. பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது தே.மு.தி.க. தேர்தல் ஆணைய விதிகளின்படி தே.மு.தி.க.வுக்கு அங்கீகாரமும் தனிச்சின்னமும் ஒதுக்கப்படவுள்ளன. மக்களுக்குக் கடந்த ஆட்சியின் மீதிருந்த கடுஞ்சினத்தின் காரணமாக எதிர்மறை வாக்குகளால் பயனடைந்தது அ.இ.அ.தி.மு.க என்றால், பெரும்பயனை அறுவடை செய்த கட்சி தே.மு.தி.க. என்பது பொருத்தமாக இருக்கும். அட்டூழியங்கள் பெருகிப் போனால் மக்கள் வாக்குகளால் தண்டிப்பார்கள் என்பதற்கு நடந்து முடிந்த தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு. 'அசைக்க முடியாது' என்ற நினைப்போடு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸை, 1967இல் மக்கள் அதிரடியாகத் தூக்கி வீசினர். அடுக்குமொழிப் பேச்சாளர்கள்; திரைப்பட வசீகர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர்; மு.க.வின் காகிதப்பூ நாடகம்; அவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சொந்தக் காசைச் செலவழித்துக் கூட்டங்கள் போட்ட அடிமட்டத் தொண்டர்கள் என அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸுக்கு எதிரான பல்முனை வியூகங்களோடு 1967 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது, அவற்றை அண்ணாவுக்கே நம்பமுடியவில்லை! இந்திய அளவில் புகழின் உச்சியில் இருந்த பெருந்தலைவர் காமராசர், பேருக்காக எதிர்த்து நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசன் என்ற மாணவர் ஒருவரால் தோற்கடிக்கப்பட்டார். காரணங்கள் சிலவோ பலவோ, தலையாயது அன்றும் இன்றும் ஒன்று மட்டுமே - விலைவாசி! நடந்து முடிந்த தேர்தலில் களப்பணி என்பதைக் கருத்தில் கொண்டால் இன்றைய முதல்வர் ஜெயலலிதா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்றே சொல்லலாம். கடந்த ஐந்தாண்டுகளாக அவர் சென்னையில் இருந்ததைவிட கொடநாட்டு பங்களாவில் தங்கி 'ஓய்வு' எடுத்ததே அதிகம். நாடு முழுதும் செய்தியாகிப்போன ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலைக்கூட தமது தேர்தல் பிரச்சாரத்தில் உரிய வகையில் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம், ஊழல் என்பது நமது நாட்டு மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது என்ற துணிச்சல். "ஆத்துத் தண்ணி, ஐயா குடிச்சா என்ன? அம்மா குடிச்சா என்ன?" என்ற மனோநிலைக்கு நம் மக்கள் வந்து வெகுகாலமாகிவிட்டது. கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொதுவுடமையாகிப்போன ஊழலில், ஒவ்வொரு காசும் தன்னுடையது எனும் உண்மையை மக்கள் உணர்வதேயில்லை. அரசியல்வாதிகள் ஊழல் செய்து கொழிப்பதால்தான் விலைவாசி தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. ஏறிய விலைவாசி குறைந்தது என்ற வரலாறும் இல்லை. என்றாலும் தேர்தலின்போது அரசியல்வாதிகள் தெரிந்து கொண்டே பொய் சொல்வார்கள், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம்" என்று. முதல்வர் பதவி ஏற்றிருக்கும் ஜெயலலிதா முன்னோக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன. அவற்றில் கவனம் செலுத்தாமல் பழிவாங்கும் போக்கில் பாடநூல்களில் இடம்பெற்றிருக்கும் மு.க.வின் கவிதைகளக் களையெடுப்பதில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும்போது, "இவர் திருந்தவே மாட்டார்" என்னும் முடிவுக்கு வருவதற்கு மக்களைத் தள்ளுகிறார் ஜெயலலிதா. இவருடைய முந்தைய ஆட்சியில்தான், "இந்தச் சட்டமன்றக் கட்டடம் கோணலாக இருக்கிறது; நவீன வசதியுடன் புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டவேண்டும்" என்று கூறினார். அதற்காக ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கும் திட்டம் வைத்திருந்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த மு.க., நானூற்றி ஐம்பது கோடி "ஆத்துத் தண்ணி"யான தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஜெ. திட்டமிட்ட நவீன வசதிகளோடு கூடிய சட்டமன்றத்துக்காகப் புத்தம்புது கட்டடம் கட்டத் தொடங்கினார். "ஆத்துத் தண்ணி" இப்போது ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. ஏதோ மு.க.வின் சொந்தப் பணத்தில் கட்டிய கட்டடம் என்ற தோரணையில், "அந்தக் கட்டடத்துக்கு நான் போகமாட்டேன்" என்று அடம் பிடிப்பது, இத்தனைக்குப் பின்னும் ஜெ.யின் அரசியல் பக்குவமற்ற தன்மையைத் தெற்றெனக் காட்டுகிறது.
தமது பதவியேற்பின்போது முஸ்லிம்களுக்கான முதல் எச்சரிக்கையாக, நரவேட்டை மோடியை அழைத்து வந்து மேடையில் வைத்துப் பூச்சாண்டி காட்ட நினைக்கும் ஜெ, தமக்கு வாக்களித்தவர்களுள் தமிழக முஸ்லிம்களும் அடக்கம்; தமது கூட்டணியில் ம.ம.க. எனும் முஸ்லிம் அரசியல் கட்சியும் அடக்கம் என்பதையெல்லாம் ஆட்சிக் கட்டில் ஏறிய கையோடு மறந்து, மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளமாக இனம் காட்டுகின்றார்.
போன்ற தமிழக முஸ்லிம்கள் இன்னும் மறக்காதவை உண்டு என்பதை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவுக்கு இங்கு நினைவூட்டுகிறோம். தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் 'தன்னிலை மறந்தவர்களாக'வே இன்னும் இருந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது! "சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்" என்று உரத்து முழங்கிக் கொண்டே, அத்தகைய பிரதிநிதுத்துவம் வந்துவிடாமலிருப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் ஆராய்ந்து செயல்படுத்தும் தமிழக முஸ்லிம் அமைப்புகள், தாங்களே தொலைத்த தம் 'கயிறை'த் தேடி எடுத்துக் கொள்ள முன்வரவேண்டும். "போட்டியிடும் எல்லா இடங்களிலும் தோற்கடிப்போம்" எனும் 'அரசியல் பக்குவத்தை' முஸ்லிம் விரோத சக்திகளிடம் காட்ட வேண்டும். முஸ்லிம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை மலக்குகள் கொண்டு வந்து நம் கையில் தரமாட்டார்கள். அவற்றை ஒன்றிணைந்து செயல்படுவது ஒன்றின் மூலமே பெறமுடியும். இது எல்லாருக்கும் தெரிந்த எளிய உண்மைதான். இதை முஸ்லிம்கள் தங்கள் தலைவர்களுக்கு நினைவூட்டி, செயலில் கொண்டுவந்துவிட வேண்டும் - கூடவே, கீழ்க்காணும் இறைவசனத்தையும்: "... தம்மைத் தாமே மாற்றிக் கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் மாற்றியமைப்பதில்லை ..." அல்-குர்ஆன் 13:11. |