காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து இந்திய மாணவர்கள் சாதனை!


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை இந்தியாவில் உள்ள தமிழக கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு, அதிக விலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த காரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவன் மதன்குமார் கூறியதாவது: நானும், என்னுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் என் சக நண்பர்கள் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம்.
இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபாடு தான். மாசுபாட்டை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக காற்றில் இயங்கும் காரை மிகக் குறைந்த விலையில் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தொடங்கினோம். இதற்கு கல்லூரி பேராசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரூ.35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு காரை வடிவமைத்தோம். இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய டேங்க் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று இன்ஜினை இயக்கும்.
வழக்கமான கார்களைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகை வராது. எனவே சுற்றுச்சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது காரை நிறுத்தி காரின் டேங்கில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம். இவ்வாறு மதன்குமார் கூறினார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...