தமிழக வரலாற்றில் பணம் அதிகம் விளையாடிய தேர்தல்




   தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் புகுந்து விளையாடியுள்ளது என, அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர். அதனால், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என கருதப்படுகிறது
.

தமிழக தேர்தல் களத்தில் பணப் புழக்கத்தை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தியது. இதன் விளைவாக, இதுவரை 34 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. அத்துடன், 13 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பிடிபட்டுள்ளன. இதில், 5.18 கோடி ரூபாய் பணம், உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதால், உரியவர்களிடம் திருப்பி தரப்பட்டது.தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, பல்லாயிரக்கணக்கான புகார்கள் வந்ததில், 61 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்த புகார்களில் அதிகபட்சமாக, அனுமதியின்றி சுவர் விளம்பரம் உள்ளிட்ட கட்சி விளம்பரங்கள் செய்தது தொடர்பாக வந்த புகார்கள் மட்டுமே, 55 ஆயிரத்திற்கு மேற்பட்டவை.உரிய அனுமதியின்றி வாகனங்கள் இயக்கியதாக, 2,850 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக, 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஓட்டளிக்க பணம், பரிசுப் பொருட்களை பெற்றாலோ, கொடுத்தாலோ, ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. முறைகேடுகள் நடந்தால், தேர்தல் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது.இப்படி தேர்தல் கமிஷன் அறிவித்த அறிவிப்புகள், நடவடிக்கைகள் என அத்தனையையும் மீறி, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், பிரதான கூட்டணிகளான தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளின் சார்பில், பண வினியோகம் பலமாக நடந்துள்ளது.ஒரு சில இடங்களில், பலம் வாய்ந்த சுயேச்சை, பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களும் பணத்தை வாரி இறைத்துள்ளனர். இதனால், தமிழக தேர்தல் களத்தில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்பதை எளிதில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது.மாநகர் பகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் ஓட்டுக்கு 250 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நள்ளிரவு நேரங்களிலேயே அதிகளவு பண வினியோகம் நடந்துள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில், பகலிலேயே பண வினியோகம் ரகசியமாக நடந்துள்ளது. ஒரு சில கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே, பணத்தை நம்பாமல், மக்களை நம்பி போட்டியில் இறங்கியுள்ளனர்.பண வினியோகம் தொடர்பாக, பல இடங்களில், அரசியல் கட்சியினருக்கு இடையே கடும் மோதலும் நடைபெற்றுள்ளது. பல இடங்களில் பொதுமக்களே ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தவர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பணம் வினியோகம் தொடர்பாக நடந்த மோதலில், உடுமலைப்பேட்டையில் அ.தி. மு.க., வேட்பாளர் சண்முகவேலுவின் மண்டை உடைந்தது.தேர்தல் மோதல்களில் பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க., கிளை செயலர் கொலை செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தில் தே.மு.தி.க., அலுவலகம் கொளுத்தப்பட்டது. தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட்ட மதுரை கலெக்டர் சகாயத்திற்கு எதிராக அவருக்கு கீழே பணிபுரிந்த அதிகாரிகளே தூண்டி விடப்பட்டனர். ஆளும் கட்சியினர் அவருக்கு எதிரான புகார்களை தேர்தல் கமிஷனுக்கு தட்டிவிட்டபடி இருந்தனர்.

மொத்தத்தில் இந்த தேர்தலில், தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், முக்கிய வேட்பாளர்கள், பிரச்னைக்குரிய பகுதிகளில் போட்டியிடும் இடங்களில் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகள் சிலர் விலை போய் விட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. இந்த தேர்தலில் வாக்காளர் போட்டோவுடன் கூடிய ஓட்டுச்சாவடி சீட்டு, மாற்று திறனாளிகளுக்கு தனி வரிசை, நமது ஓட்டை வேறு யாரேனும் போட்டிருந்தாலும் ஓட்டு போடும் உரிமை, "49 ஓ' முழுமையான அமலாக்கம், தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்தல் போன்றவை இந்த தேர்தலின் சிறப்பம்சங்களாக திகழ்கின்றன.இத்தனையையும் தாண்டி, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும், கள்ள ஓட்டு விழக் கூடாது, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்பதே உண்மையான ஜனநாயகவாதிகளின் பிரார்த்தனையாக இருந்தது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...