தமிழகம் முழுவதும் வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இல்லை. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் 2,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் தினமும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு மூலம் 1,600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு பகுதியில் குறித்த நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். ஆனால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எந்த இடத்திலும் வழக்கமான அளவான மூன்று மணி நேரம் மின்வெட்டு செய்யப்படவில்லை. அரை மணி நேரம் வரையிலே மின்வெட்டு செய்யப்பட்டது. சென்னையில் மின்வெட்டு இல்லை.
என்ன காரணம்? கோடை மழை பெய்து வருவதே மின்வெட்டு செய்யப் படாததற்குக் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "கோடை மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவுக்கு மின்மோட்டார்களை பயன் படுத்தவில்லை. இதன்மூலம், 700 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மின்சாரம், வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இல்லை' என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடருமா? மின்வெட்டு இல்லாத நிலை தமிழகத்தில் தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் கோடை மழை தொடர வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை நீடிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மின்வெட்டு இல்லாத நிலை மேலும் சில நாட்களுக்கு மாநிலத்தில் நீடிக்கும் எனத் தெரிகிறது.