சலங்கை சத்தம் மற்றும் மல்லிகை வாசத்துக்கும் பேய்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியாது. ஆனால் இவற்றை கன்னிப்பேய்களோடு முடிச்சு போடுவது காலகாலமாக நம் மக்களின் வழக்கம். இவற்றை நேரடியாக உணர்ந்தவர்கள் சொல்வதை கேட்டால் நம்பாமல் இருக்க முடியுமா? ஆளரவமற்ற சாலையில் திடீரென்று கேட்கும் கொலுசு சத்தம்... மயங்க வைக்கும் மல்லிகை வாசம்... இவற்றுக்கு உச்சமாய் கொடூர மரணங்கள்.... ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் விஷயங்கள் இவைதான். அவர்களின் அனுபவங்கள் கேட்பதற்கு திகிலாகவே உள்ளன.
ராமநாதபுரம் கடலோர நகரங்களில் முக்கியமானது கீழக்கரை. சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக துணை மின் நிலையம் இருக்கிறது. இந்த பகுதியில் சற்று வளைந்து செல்லும் சாலையில்தான் மர்மம் இருப்பதாக பயத்தில் உறைந்திருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். ‘சலங்கை சத்தம், மல்லிகை மணம் வீசுவது ஒருபுறமிருக்க, அந்த சாலையில் ஏற்படும் விபத்துகளால் நிகழும் கொடூர மரணங்களும், திடீரென்று காதை கிழிக்கும் அளவுக்கு கேட்கும் இரைச்சலும் எங்களை கலங்கடிக்க வைக்கிறது’ என்று சொல்லும் கீழக்கரை வாசிகளின் பேச்சில் அச்சம் சிறிதும் குறையவில்லை.
ஒன்று, இரண்டல்ல.. அந்த சாலையின் குறிப்பிட்ட பகுதியில் கடந்த 2 ஆண்டு களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை ஐம்பதை கடந்து விட்டதாம். இதில் அந்த இடத்திலேயே துடிதுடிக்க, ரத்த வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என்கிறார்கள் ஊர் மக்கள். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது கொலுசு சத்தம் தெள்ளத் தெளிவாய் கேட்கிறது, மயக்க வைக்கும் மல்லிகை வாசம் மூக்கை துளைக்கிறது. சில சமயங்களில் காதை கிழிக்கும் இரைச்சல் கேட்கிறது என்று ஆளாளுக்கு தங்கள் அனுபவங்களை அடுக்குவதால் ஊரே அரண்டு போய் கிடக்கிறது. இது கன்னிப்பேயின் வேலை தான் என ஊர் பெரியவர் ஒருவர் கூறியதால் பயம் மேலும் பற்றிக் கொண்டிருக்கிறது கீழக்கரையை.
கன்னிப்பேய் பயத்தில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சாலையில் செல்லும்போது கையில் தாயத்து கட்டாமல் போவதில்லை. இதுபற்றி ஊர்க்காரர் ஒருவர் கூறும்போது, ‘அந்த இடத்துல விபத்தாகி சாவின் விளிம்பு வரை போயிட்டு வந்தவங்க பலர் இருக்காங்க. என்னென்னவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் விபத்தும், ரத்த காவும் குறையல. அதோடு பேயிரைச்சல் கேட்கிறதாவும், மல்லியை மணம் வீசுவதாவும் நிறைய பேர் சொல்றாங்க. இதுவெல்லாம் கன்னிப்பேயோட வேலைதான். இருட்டிட்டுனா நாங்க யாரும் அந்த பக்கம் போவதே கிடையாது.
அப்படியே போனாலும் தாயத்தோட தான் போவோம்’ என்றார். இன்னொருவர் கூறும்போது, ‘ஒரு நாள் நான் அந்த ரோட்டுல போகும்போது காதை கிழிக்கிற சத்தம் திடீர்னு கேட்டுச்சு. இங்கிருந்து பரமக்குடி வரைக்கும் கேட்குற அளவுக்கு பயங்கர சத்தமா இருந்துச்சு’ என்றார் அச்சம் விலகாமல். இன்னும் சிலர் இதை மறுத்தாலும், பலர் தாயத்துடனே சாலையை கடக்கிறார்கள்.