
ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. ம.தி.மு.க., பொது செயலர் வைகோ பேசியதாவது:-
ம.தி.மு.க., புது எழுச்சியோடு புத்துயிர் பெற்று எழும். ம.தி.மு.க., போர்க்குதிரை போன்றது. இதில் மற்றவர்கள் ஏறி சவாரி செய்ய முடியாது. மார்ச் 8ம் தேதியே அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க.,வை வெளியேற்ற திட்டமிட்டு விட்டதால் தான், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு 41, 15, 10 என, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 160 தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களையும் அறிவித்தனர். கம்யூனிஸ்ட்கள் மத்தியில் நான்கு சுற்று பேசிய பின், நம்மிடம் இரண்டு சுற்று பேச்சு வார்த்தை மட்டும்தான் நடந்தது. கடைசியாக எட்டு தொகுதி கொடுப்பதாக கூறினர். அப்புறம் ஏழு தொகுதி என்றனர். செங்கோட்டையன் வீட்டில் பேச்சுவார்த்தை என்றனர். அங்கு நமது குழுவினர் சென்றால், வீட்டில் அவர் இல்லை. பன்னீர்செல்வம் வீட்டில் என்று அழைத்துச் சென்றனர். நமது குழுவினர் எதற்காக வந்தனர் என்றே அவருக்கு தெரியவில்லை. கடைசியாக எட்டு தொகுதி என்றனர். எட்டுத் தொகுதியை ஏற்று கூட்டணியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டால் என்ன செய்வதென்று எண்ணி, ஏழு தொகுதிதான் என்றனர். பிடரியைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக கூட்டணியில் இருந்து வெளியேற்றினர். அ.தி.மு.க. தலைமையின் நடவடிக்கை அ.தி.மு.க. தொண்டர்களையே வேதனைபட செய்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடத்தை பிடித்து ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்தேன். ஆனால் எந்த இடத்திலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார் என்று கூறவில்லை.
கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றதும் சிலர், மூன்றாவது அணி' என்றனர், உருவ பொம்மை எரித்தனர். தனிக்கூட்டம் நடத்தினர். ஆனால், ம.தி.மு.க., கட்டுப்பாடான இயக்கம். உங்கள் கூட்டணியில் வலுவாகத்தானே இருந்தோம். கண்களை விற்று சித்திரம் வாங்க முடியுமா? தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று சக்தியாக உருவாவோம். நாம் எடுத்த முடிவு, மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை தேடிக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க.வையோ, தி.மு.க.வையோ விமர்சிக்க வேண்டாம்.
ம.தி.மு.க. உண்மையான ஜனநாயக கட்சி. இதன் நடவடிக்கைள் திறந்த புத்தகம். கலைஞர் என்னை மலை உச்சியில் இருந்து தூக்கி வீசியபோது என்னை மடிகளில் தாங்கி வைத்து பொதுச்செயலாளர் என்ற பதவியை கொடுத்தவர்கள் நீங்கள். உங்கள் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். இந்த முடிவின் மூலம் கட்சியின் உணர்வு மட்டுமின்றி மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்று இருக்கிறோம்.
அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற்றியது தமிழக மக்கள் நம்மைபற்றி அலசிபார்க்க, ஆராய்ந்து பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், நம் மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் கட்சியில் இணைப்போம். அண்ணா கண்ட கனவை நிறைவேற்ற, தமிழர்களின் உரிமையை காக்க, தமிழ் ஈழ மக்களின் உரிமையை மீட்க தொடர்ந்து பாடுபடுவோம்.
2012 மாற்றத்திற்கான வியூகங்களை வகுத்து இருக்கிறேன். வியூகங்களை வெளியில் கூறாமல் விவேகமாக நடந்து வெற்றி பெறுவோம். இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் தேர்தலை புறக்கணிக்கவில்லை. இந்த தேர்தலில் நாம் போட்டியிடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு தற்போது திரும்புகிறது. நாம் முதலிடத்துக்கு வருவோம். நம் பலத்தை, சக்தியை அதிகரித்து விட்டு, பின் போட்டி களத்தில் இறங்குவோம். திராவிட கட்சியில் புதிய பரிணாமம் உதயமாகி விட்டது. இவ்வாறு வைகோ பேசினார்.