இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கும் "தனித்திறன்'

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கும் "தனித்திறன்'
இன்றைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு தமிழகத்தில் தொழில் துவங்கி வருகின்றன. இதற்கு, மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு சாதகமான அம்சங்களே காரணம். இதில், திறமையான மனித வளமும் ஒன்று.



மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் கல்வி தரத்தில் மிகச் சிறந்து விளங்குகின்றன. பொறியியல் சார்ந்த கல்வி இங்கு தாராளமாக கிடைக்கிறது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள் என்ற அளவில் மாநிலம் முழுவதும், ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பொறியியல், கலை, அறிவியல் என பல பாடங்களில், பட்டம், பட்டயப் படிப்புக்களை முடித்து வெளி வருகின்றனர். இன்றைய நிலையில், தமிழகத்தில், படித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 65 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தொழில் நிறுவனங்கள் தகுதியுள்ள இளைஞர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என்று அரசிடம் முறையிட்டுள்ளன. இதனால், முகாம்கள் மூலம் தகுதியான இளைஞர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டது. இதை தொடர்ந்து, 50 கோடி ரூபாய் செலவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் படித்த, திறமையான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு திறமையான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தனியார் நிறுவனங்கள் முறையிடுவதில் உண்மை இருக்கிறது. ஏனெனில், படித்து முடித்து வேலை தேடி வெளியே வரும் பல மாணவ, மாணவியர் தனித்திறன் மிக்கவர்களாக இல்லை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர்கள், தங்களின் தனித் திறனை வளர்த்து கொள்ளாமல் விட்டுவிடுவதால், வேலை தேடி செல்லும் போது அங்கு நடக்கும் பல்வேறு நேர்காணல்களில் தோல்வியடைந்து விடுகின்றனர்.


இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா கூறுகையில், "தமிழகத்தில் படித்து வேலைக்கு பதிவு செய்துள்ள நிலையில் 65 லட்சம் பேர் இருந்தும், தகுதியுள்ள இளைஞர்கள் கிடைக்கவில்லை என, தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்' என்றார். எனவே, பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற வேண்டியது தற்போது அவசியமாகிறது. இச்சூழ்நிலையில், "திறமை வாய்ந்த மாணவர்களை கொண்டே இந்தியா பெரும் பொருளாதார வல்லரசாக மாறும்' என, டாக்டர் அப்துல்காலம் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். "ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலை தரும்; படைப்பாற்றல் நல்ல எண்ணங்களை வளர்க்கும்; நல்ல எண்ணங்களில் இருந்து அறிவு பிறக்கும்; அறிவு உயர நம் வளம் பெருகும்; நம் வளம் பெருக நாடு உயரும்' என்று டாக்டர் அப்துல்கலாம் குறிப்பிட்டுள்ளதில், படைப்பாற்றல் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர், வெற்றிகரமாக படிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புக்களை செய்து, படைப்பாற்றலுடன் இருந்தால் மட்டுமே, அவர்கள் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பது டாக்டர் அப்துல்கலாமின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்நிலையில், தகுதி வாய்ந்த இளைஞர்களை எப்படி உருவாக்குவது, தற்போதுள்ள தகுதியான இளைஞர்கள் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி என்பது தான் தற்போது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.


இது குறித்து பல்வேறு கல்வியாளர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் இதோ:


டாக்டர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., போலீஸ் கமிஷனர், கோவை: தனித்திறன் தகுதியை மாணவர்கள் தாங்களே தான் வளர்த்து கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்களுக்கு மொழியே பெரும் தடையாக உள்ளது. எனவே, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவற்றில் மொழிப் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்து, பொது அறிவை வளர்க்க வேண்டியது முக்கியம். இதற்கு, தினசரி பத்திரிகைகளை படிக்கலாம். நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். மொத்தத்தில், படிக்கும் பழகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித் திறன் பயிற்சி என்பது டிகிரி, டிப்ளமா பெற்ற மாணவர்களுக்கு மிக அவசியம். இந்த காலகட்டத்தில், தனித்திறனை வளர்க்கும் பயிற்சியை ஏராளமான நிறுவனங்கள் தருகின்றன. இவற்றில் சிறந்ததை தேர்வு செய்து, படித்த இளைஞர்கள் அங்கு பயிற்சி பெற வேண்டும். இன்றைய நிலையில், நம் நாட்டில் அனைத்து தொழில் துறைகளிலும் இளைஞர்களின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. ஒரு டூவிலர் மெக்கானிக்காக இருக்கட்டும்; ஏசி மெக்கானிக்காக இருக்கட்டும்; எலக்ட்ரீசியனாக இருக்கட்டும் அனைவரிடமுமே தொழில் திறன் குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில், தரமான தொழில் திறன் அவசியமாகிறது. பெரும்பாலான படித்த இளைஞர்கள், தங்கள் திறனை வளர்த்து கொண்டு, தனித் திறமையோடு திகழ வேண்டும் என்று நினைப்பதில்லை. படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களே அதிகமாக காணப்படுகின்றனர். இது மாற வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தனித்திறனை வளர்த்து கொள்ளும் பயிற்சியும், அதற்கான முயற்சியும் அவசியம்.


ஒவ்வொரு இளைஞரும் வாழும் கலை குறித்து அறிந்து, அதற்கான பயிற்சியை பெற வேண்டும். எழுத்திலும், பேச்சிலும், செயலிலும் திறனை வளர்த்து கொண்டால், அவர்களை வேலை தானாக தேடி வரும். தமிழகத்தை பொறுத்தவரையில், படித்த இளைஞர்கள் அதிகம் இருந்தாலும், தொழில் சார்ந்த பயிற்சி அவர்களிடம் இல்லை. நாம் படித்து விட்டோம்; நல்ல சம்பளத்தில், கவுரவமான வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இது மாற வேண்டும். சிறிய வேலை என்றாலும் அதை சிறப்பாக செய்து பழக வேண்டும். டயர் கழற்றி மாற்ற வேண்டியது தான் வேலை என்றாலும் கூட, சங்கடப்படாமல் அதை செய்து, அதில் நிபுணத்துவம் பெற வேண்டும். படித்த இளைஞர்கள், தாங்கள் படித்ததற்கு தொடர்புடைய வேலை தரும் சிறிய நிறுவனங்களில் கூட, குறைவான சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். ஏன், ஆறு மாதத்திற்கு சம்பளமே இல்லை என்றாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றால், அந்த வேலை குறித்த பயிற்சி கிடைக்கும். இதன் மூலம், அந்த இளைஞர்கள் தன்னை தகுதியாக்கி கொள்ள முடியும். இதை கடைப்பிடிக்கும் ஒரு படித்த இளைஞர், தான் படித்த துறையில் முறையான பயிற்சி பெற்று, அதில் நிபுணத்துவம் (மாஸ்டர்) பெற்றவராகி விடுகிறார். இதை தொடர்ந்து, அந்த இளைஞருக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்பு தேடி வரும். கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற கனவும் நிறைவேறும். மேலும், இப்படி பெறப்படும் பயிற்சியின் மூலம் தாமாகவே தொழில் துவங்கும் தன்னம்பிக்கையும், வாய்ப்பும் படித்த இளைஞர்களுக்கு கிடைக்கும்.


டாக்டர் மன்னர் ஜவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை: பொறியியல் பாடங்களை பொறுத்தவரையில் ஐ.டி.ஐ., டிப்ளமா, பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ., முடித்தவர்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். டிப்ளமா படித்தவர்கள், மேற்பார்வையாளர்களாக பணியாற்றுகின்றனர். பி.இ., மற்றும் பி.டெக்., படித்தவர்கள் மேலாண்மை பணியும், உயர்கல்வி படிப்பவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இவர்களில், பி.இ., மற்றும் பி.டெக்., படித்தவர்களுக்கு தான் தனித்திறன் பயிற்சி தேவைப்படுகிறது. இவர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள் விரும்புகின்றன. எனவே, பி.இ., - பி.டெக்., படித்த இளைஞர்களுக்கு "சாப்ட் ஸ்கில்' எனப்படும் பயிற்சி அவசியமாகிறது. தகவல் தொடர்பு, தலைமை ஏற்கும் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன் என பல பயிற்சிகள் இதன் மூலம் கிடைக்கும்.


பட்டம் பெறும் மாணவர்களுக்கு இப்பயிற்சிகளை மத்திய, மாநில அரசுகளே தருகின்றன. 50 மணி நேரம், 100 மணி நேரம் என்ற அளவில் இந்த பயிற்சி தரப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், "எல்காட்' நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சி தரப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கடந்த ஒரு வருடத்தில் 68 குழுவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,800 பொறியியல் பட்டதாரிகள் தனித்திறன் பயிற்சியை பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, திறமை வாய்ந்த இளைஞர்கள் ஏராளமான அளவில் கிடைப்பர். பல்கலைக் கழகத்தில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் இந்த பயிற்சியை பெற்ற மாணவர்களை தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் அழைத்து, வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இப்பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பாக பணிபுரிவதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளும் தனித்திறன் பயிற்சியை தந்து வருகின்றன. இதற்காக, தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, தனித்திறன் கொண்ட சிறந்த இளைஞர்களை பெற்ற மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் வாய்ப்பு அதிகம்.


டாக்டர் பி.கன்னியப்பன், (முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்) துணைவேந்தர், பி.எஸ்.அப்துல்ரகுமான் பல்கலைக்கழகம்: பொறியியல் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்காக பல வெளிநாடுகளில் "பினிஷிங் ஸ்கூல்'கள் செயல்படுகின்றன. இதன் மூலம், தனித்திறன் பயிற்சிகளை மாணவர்கள் பெற்று, கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் வேலைவாய்ப்பு பெற முடிகிறது. இதேபோல், தமிழகத்தின் ஒவ்வொரு பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் "பினிஷிங் ஸ்கூல்'கள் போல, மாணவர்களை திறமைமிக்கவர்களாக மெருகூட்டும் அமைப்புக்கள் அவசியம். பி.இ., - பி.டெக்., மாணவர்கள், தனித்திறன் பெற வேண்டும் என்றால் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பாடத்திட்டங்களை உருவாக்கும் போது, பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அக்குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். இதன் மூலம், தொழில் நிறுவனங்களின் மனிதவள தேவையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப மாணவர்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்க முடியும். பொதுவாக, மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனைகளில் நேரடி பயிற்சி பெறுகின்றனர். இதனால், அவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் போது திறமைமிக்க மருத்துவர்களாக பணியாற்ற முடிகிறது. இதே முறை பொறியியல் கல்வியிலும் பின்பற்றப்பட வேண்டும். பொறியியல் கல்வியை பொறுத்தவரையில், "புராஜக்ட்' என்பது தற்போது ஏட்டளவிலேயே உள்ளது. இதனால், மாணவர்கள் தாங்கள் படித்ததை செயல்முறையில் திறம்பட செய்து பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதை தவிர்க்க, ஒவ்வொரு கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் தொழில் நிறுவனங்களின் அமைப்புக்களை இடம் பெற செய்ய வேண்டும். அதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திலேயே, படிக்கும் காலத்திலேயே, தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் திறனை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், பட்டப்படிப்பு கற்கும் மாணவர்கள், ஒரு செமஸ்டரை தொழில் நிறுவனங்களில் கழிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலமும், மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் திறனை பெற முடியும்.


டாக்டர் ராமசுப்ரமணியம் (தாளாளர், நடேசன் வித்யாசாலா மெட்ரிக் பள்ளி, மண்ணிவாக்கம்): வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தும், திறமையான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தனியார் நிறுவனங்கள் கூறுவது உண்மை தான். பல முன்னணி நிறுவனங்கள் நேர்முக தேர்வின் போது தகுதியிருந்தும், அடிப்படை அறிவு இல்லாத நபர்களை தேர்வு செய்துவிட்டு, அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க தனியாக செலவு செய்து கொண்டிருக்கின்றன. இன்றைய இளைஞர்கள் படிப்பு, தேர்வு, மதிப்பெண் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துவதை போல, தனித்திறன், தகவல் தொடர்பு, மொழித்திறன், உலக அறிவு ஆகியவற்றை வளர்த்து கொள்ள முன்னுரிமை காட்டுவதில்லை என்பதை இது காட்டுகிறது. படித்து வாங்கிய பட்டத்தை மட்டும் வைத்து கொண்டு, எங்கும் வேலைக்கு செல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் முடித்து வெளியேறும் மாணவர்களில் 25 சதவீதம் பேரும், கலை மற்றும் அறிவியல் பிரிவில் 10 சதவீதம் பேரும் மட்டுமே பணிபுரிய தகுதியானவர்களாக உள்ளனர். தற்போது பல தனியார் கல்வி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப திறன், அடிப்படை திறன் வளர்க்க வகுப்புகள் நடத்துகின்றன. இந்த திறன்களை இளைஞர்கள், பள்ளி மாணவர்களாக இருக்கும்போதே வளர்த்து கொள்ள வேண்டும். இதற்கு பள்ளிகளில் உருவாக்கும் திறன், கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்துவது; மாணவர்களை அந்த நிகழ்ச்சிகளில் மனம்விட்டு பேச செய்வது; திட்டங்களை பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது என, திறன் வளர்க்கும் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.


இந்த பயிற்சி கல்லூரிகளிலும் தொடரும் போது, படிப்பை முடித்துவிட்டு பணிக்கு வரும் போது, இளைஞர்கள் 100 சதவீதம் முழு திறனுடன் இருப்பர். இது மட்டுமல்லாமல், உலக அறிவை வளர்த்து கொள்ள பத்திரிகைகள் படிக்க வேண்டும். தினசரி நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலம் அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டும். டிக்ஷனரியில் உள்ளதை போல 65 லட்சம் வார்த்தைகளை தெரிந்து கொண்டால் தான் ஆங்கிலம் பேச முடியும் என்பது கிடையாது. வெறும் 1,500 வார்த்தைகள் தெரிந்து கொண்டால் கூட ஆங்கிலம் பேச முடியும். இதை எளிமையாக கற்றுக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் துறையில் தனி திறமை பெற வேண்டும் என்ற ஆர்வம், எண்ணம், கடின முயற்சி இளைஞர்களிடம் நிச்சயம் வேண்டும்.


டாக்டர் விஜயன், முதல்வர், சீயோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்: திறமையான இளைஞர்களை பள்ளிகள் அளவிலேயே உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்யும் போது, பட்டம் பெற்ற சான்றிதழ்களையோ, மதிப்பெண்களையோ பார்ப்பதை காட்டிலும், பள்ளி கல்வியில் எடுத்த மதிப்பெண்களை பார்க்கின்றனர். அடுத்த கட்டமாக, தேர்வுக்கு வரும் நபர்களை இயற்கையான அறிவுடன் புரிந்து படித்தவரா, மனப்பாடம் செய்து படித்தவரா என்று சோதிக்கின்றனர். எனவே, மூளை வளர்ச்சியடையும் பருவமான ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறன் பயிற்சிகளை அளிக்க வேண்டும். பாடங்களை அப்படியே போதிக்காமல், மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் வகையில் பாடம் நடத்தும் திட்டத்தை மாற்ற வேண்டும். கேள்வித்தாள் முறைகளிலும் மாற்றம் தேவை. பள்ளி கல்வியின் போது அடிப்படை அறிவுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெறும் வகையில் சமீபத்தில் ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத்திட்டங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் அமையும்.


இதை தவிர பள்ளி அளவில் மாணவர்களுக்கு விரைந்து முடிவெடுக்கும் திறனையும், ஒரு விஷயத்திற்கு தலைமையேற்கும் திறன், மொழித்திறன், பேச்சு திறன் ஆகியவற்றை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் பயத்தை போக்க வேண்டும். பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல், மருத்துவம் என்று சென்று கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை ஆராய்ச்சி பக்கம் திருப்ப வேண்டும். அத்துறையில் அவர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இளைஞர்களின் தனித்திறன் மற்றும் ஆற்றலை அதிகரிக்க முடியும். இவ்வாறு கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தனித்திறன் என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு நபர் பல வகையான திறமைகளை வெளிப்படுத்துவதையே தனித்திறன் என்று கூறுகின்றனர். தலைமையேற்கும் திறன், தகவல் தொடர்பு, மொழி, எழுத்து, பேச்சு திறன், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், விரைந்து முடிவெடுக்கும் திறன், மேலாண்மை திறன், ஒரு விஷயத்திற்கு மற்றவர்களை கவரும் வகையில் பதில் அளிக்கும் திறன், கம்பீரம், நல்ல உடற்கூறு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தன்னகத்தே கொண்ட ஒருவர் தனித்திறன் கொண்டவர் என்று அடையாளம் காணப்படுகிறார்

--
Regards
حسن محمد

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...