இலவச விமானப்பயணம் சிந்தனைக்கு.. சிறப்புச் சலுகை!
இது ஒரு வித்தியாசமான பயணம்! நாம் இந்த உலகை விட்டும் மறுஉலகிற்குப் பயணம் செல்வது,ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் போவது போல் தான்! அந்த பயணத்தைப் பற்றிய விவரங்களை உல்லாசப் பயண விளம்பரப் புத்தகங்களில் (Brochures) காண முடியாது. ஆனால், அவற்றைப்புற்றிய முழுத்தகவல்களை புனிதக் குர்ஆனிலும் ஹதீஸ் நூல்களிலும் மட்டுமே காண முடியும். நமது விமானம் ஏர் இந்தியா, கல்ஃப் ஏர், ஸவூதியா ஏர்் லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், அமெரிக்கன் ஏர் லைன்ஸ் போன்றவை அல்ல. அது "ஓர் ஏர் ஜனாஸா" வாகும். அதில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட லக்கேஜ் அளவு 23 கிலோ அல்ல. நமது அமல்கள் எவ்வளவு கனமாக இருந்தாலும் தாராளமாக எடுத்துச்செல்லலாம். அதிகப்படியான சாமானங்களுக்கு நீங்கள் "எக்ஸஸ் லக்கேஜ்" அதிகக் கட்டணம் கட்டவேண்டியதில்லை. அதை விசேச சலுகை முறையில் (Free யாக) எடுத்துச்செல்லலாம்.அது உங்ளைப் படைத்த நாயனின் பெஸ்ட் காம்பிளிமென்ட்! அன்பளிப்பு! உங்கள் பயண ஆடை கோட்டு சூட்டு அல்ல! பேன்டு ஷர்ட் அல்ல! வேட்டி ஜுப்பா அல்ல! வெட்டப்பட்ட சாதாரண வெள்ளைக் காட்டன் கஃபன் துணிகள்! உங்கள் நறுமணப் பொருட்கள் சேன்னல், பேகோ சேபனி, ஸஃபிரே அல்ல! கற்பூரமும் சாதாரண அத்தர் திரவியமும் தான்! நமது பாஸ்போர்ட்-அனுமதிச்சீட்டு-இந்திய- பாகிஸ்தான், அமெரிக்க-பிரிட்டிஷ் பாஸ்போர்ட் அல்ல. எல்லோருக்கும் அல்-இஸ்லாம் பாஸ்போர்ட் தான்! நமது விசா கால அளவு 6 மாதங்ளோ,எக்ஸிட் விசாவோ அல்ல. "லாயிலாஹ இல்லல்லாஹு" மூல மந்திரம் தான் விசா! உபசரிப்பதற்கு அழகழகான விமானப் பணிப்பெண்கள் அங்கே கிடையாது! "மலக்குல் மவ்த்" போன்ற வானவர்கள் தான் காத்திருப்பார்கள். விமானத்திற்குள் முதல் வகுப்போ,பொருளாதார வகுப்போ கிடையாது. நறுமணம் கமழும் பசுமைத்தரையாகவோ, துர்வாடைவீசும் சாக்கிடங்காகவோ இருக்கும். நம் பயணம் போய் சேருமிடம் ஹீத்ரூ டெர்மினலோ,ஜித்தா இன்டெர்நேஷனல் டெர்மினலோ சென்னை சர்வதேச டெர்மினலோ அல்ல! பாதாளப் புதைகுழி தான் நமது டெர்மினல்! நாம் காத்திருக்கும்ம் அறை (Waiting Room) அழகிய கம்பளியால்(Carpet)விரிக்கப்பட்ட குளுகுளு ஏ.சி அறையல்ல! 6 அடி ஆழமுள்ள கப்ரு மட்டுமே! சோதனை அதிகாரிகள் (Immigration officers) லஞ்சம் கொடுத்து எளிதில் வெளியேற விடும் அரசு அதிகாரிகளல்ல! கண்டிப்பான முன்கர் நக்கீர் அமரர்கள்! இவர்களின் கடும் சோதனைகளிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. எவரும் தப்பித்ததும் கிடையாது. அவர்கள் நீங்கள் போகுமிடம் செல்லத்தகுதி பெற்றவர்களா என்பதை மட்டுமே கவனிப்பார்கள். அங்கே டிடக்டர்கள் (Detectors) கிடையாது. அங்குள்ள ட்ரான்ஸிட் விமானத்தளம் (Transit Airport) அல்-பர்ஸக் ஆகும்.நம் பயணத்தின் இறுதி எல்லை(Final Destination) அருவிகள் ஒலித்தோடும் ஒய்யாரமான சுவர்க்கப் பூங்காவாக இருக்கும். அல்லது அணைக்கவே முடியாத கொளுந்து விட்டெரியும் நரக நெருப்புக் கிடங்காக இருக்கும். இந்தப்பயணத்திற்கு கட்டணம் செலுத்த (Ticket Fare) வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம்!! கையை விரித்துக்கொண்டே செல்லலாம். வங்கியிலிருந்து உங்கள் சேமிப்புப் பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை! இந்த விமானத்தை யாரும்(Hijack)கடத்த டியாது. அங்கே தீவிரவாதிகளின் பயம் இல்லை. விமானத்திற்குள் உணவும் பரிமாறப்படுவதில்லை. அலர்ஜியான உணவுவகைகளா? ஹலால் உணவா? என்ற பீதியும் இல்லை. விமானம் காலதாமதமாகுமோ என்ற அச்சமில்லை.இந்த விமானம் எப்போதும்(Punctual) குறித்த நேரத்தில் தான் புறப்படும் ! வந்து சேருவதும் புறப்படுவதும் குறித்த வேளையில்தான்! அதில் எந்த மாறுதலும் இருந்ததாக வரலாறே கிடையாது. கம்பியூட்டரைஸ்ட்! (Computerised) விமானத்திற்குள் வழமையான பொழுது போக்கு நிகழ்ச்சி (Entertainment Programme) எதுவும் இருக்காது. அதை அனுபவிக்கும் புலன்களை நீங்கள் இழந்திருப்பதே காரணமாகும். இதற்கு டிக்கட் பதிவு (Ticket Reservation) செய்யவேண்டிய அவசியமும் இருக்காது. ஏனெனில் தாயின் கருவறையில் சிசுவாக இருக்கும்போதே பயணச்சீட்டு பதிவு செய்து ரீ கான்ஃபார்மும்(Reconfirm) செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக உங்களின் அருகே யார் இருக்கப்போகிறார்கள் என்ற கவலையும் வேண்டாம். நீங்கள் தன்னந்தனியாக சொகுசாக பயணம் செய்யும் ஒரே ஒரு இருக்கையை கொண்ட சீட்டு (Seat) தான் உங்களுடையது. முடிந்தவரை உங்கள் அமல்களுக்கேற்றவாறு நீங்கள் அதை அனுபவிக்கலாம்! அங்கே ஆபத்துகள் காத்திருக்கும்! ஆனால், எச்சரிக்கை (Warning) பலகை எதுவும் இருக்காது. அவற்றை சமாளித்துக்கொள்ள இங்கேயே தயாராகி விடுங்கள் ! உதவுவதற்கு யாரும் வரமாட்டார்கள்! பெற்ற தாயோ உற்ற மனைவியோ உரிமைமிக்க பிள்ளைகளோ யாரும் அங்கே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்விடம் (பாவமற்ற)தூய உள்ளத்துடன் வருவதைத்தவிர செல்வமோ, மக்களோ பயன் தராது. (அல்-குர்ஆன் 26: 89) இப்போது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் நீங்கள் தப்பிக்க முடியாத மறுமை விமானப்யணம். (Air travel to the next world) பயணம் போன பிறகு ஒவ்வொருவரும் ஓட்டமெடுக்கும் நாள்! (ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக்கொள்ள)அந்த நாளில் மனிதன் தனது சகோதரன், தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் யாவரையும் விட்டு ஓடுவான். (அல்-குர்ஆன்-80:34,35,36) "நல் அமல் இன்றி கப்ருக்குள் செல்பவன் கப்பலின்றி கடலில் பயணம் செய்பவனைப் போன்றவன்" என்ற அபூபக்ர்(ரலி)அவர்களின் மணிவாசகமும், "கடந்த காலம் கடந்து விட்டது. வருங்காலம் சந்தேகம் நிறைந்தது. எனவே இருக்கும் காலத்தில் செயலாற்றிக்கொள்!" என்ற அலி(ரலி) அவர்களின் பொன்மொழியும் நம் நினைவிற்கொள்வோமாக!