யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, "சரக்கு' விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது.
அந்த, "சாதனை' வரலாறு இது: தமிழகத்தில் தற்போது மொத்தம், 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு, 29 கடைகள். இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (பொதுவாக "குடிமகன்'களால், "ஹாட்' என அழைக்கப்படுவது), பீர்களும் விற்கப்படுகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மது விற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு பெருந்துணையாக இருப்பது, "டாஸ்மாக்' மூலம் கிடைக்கும் வருவாய் தான். நலத்திட்டங்கள் குறைவற நிறைவேற்றப்பட வேண்டும் என்பதனாலோ என்னவோ, ஆண்டுதோறும் விற்பனையும் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.
கடந்த, 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 13 ஆயிரத்து, 853 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010 - 11ம் ஆண்டில் இந்த விற்பனை, 16 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதன் மூலம், ஓராண்டில் சரக்கு விற்பனை, 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ஐ.எம்.எப்.எல்., விற்பனை, 4 கோடியே 8 லட்சம் பெட்டிகளில் இருந்து, 4 கோடியே 78 லட்சம் பெட்டிகளை எட்டியுள்ளது. இது 17 சதவீதம் அதிகம். பீர் விற்பனை 2 கோடியே 42 லட்சம் பெட்டிகளில் இருந்து, 2 கோடியே 70 லட்சம் பெட்டி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது, 11 சதவீதம் உயர்வு. அதற்குள் அயர்ந்துவிட வேண்டாம். இன்னும் சில, "கிக்'கான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.
"கேஸ்' எனப்படும் ஒரு பெட்டி சரக்கை, 40 பேர் குடிக்கலாம். அந்த வகையில், 2009-10ல், சராசரியாக ஒரு நாளைக்கு, 63 லட்சம் பேர் குடித்தனர்; ஆம்! ஒரு நாளைக்கு, 2010-11ல், அதே ஒரு நாளைக்கு குடித்தவர்களின் எண்ணிக்கை, 75 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதாவது, இன்றைய தேதியில், ஒரு மணி நேரத்துக்கு, 3 லட்சத்து 12 ஆயிரத்து, 500 பேர் குடிக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும், 5,208 பேர் குடிக்கின்றனர். இது, 24 மணி நேரத்துக்கான சராசரி தான். "மப்'பில் மல்லாந்து விட்ட நேரம், கடை மூடியிருக்கும் நேரத்தைக் கழித்தால், "குடிமகன்'களின் அடர்த்தி இன்னமும் அதிகரிக்கும். அப்புறமென்ன? சியர்ஸ்!