அமைச்சர் பட்டியல்: தி.மு.க., - அ.தி.மு.க., தீவிரம்



தமிழக தேர்தல் களத்தில், மிக பரபரப்பான நாட்களாக, மே 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் அமைய போகின்றன. இதில், மே 13ம் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவு, அடுத்த ஆட்சியை அமைக்க போவது யார் என்பதை வெளிப்படுத்தும். அதற்கு அடுத்த நாளில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், யாருக்கு யார் ஆதரவு அளிக்கப் போகின்றனர், தனி மெஜாரிட்டி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா, வெளியிலிருந்து ஆதரவா என்றெல்லாம் பல்வேறு பரபரப்பான காட்சிகள் அரங்கேறப் போகின்றன. இந்த மூன்று நாள் பரபரப்பு, குழப்பத்தை தவிர்க்க, இப்போதே முன்னேற்பாடுகளில், இரு திராவிடக் கட்சிகளும் இறங்கியுள்ளன.

திராவிட முன்னேற்ற கழகம்: சட்டபை தேர்தலில் தி.மு.க., 119 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டதால், தனி மெஜாரிட்டி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தான், ஆட்சியமைக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளதால், இப்போதே கூட்டணி கட்சிகளுடன், தி.மு.க., தலைமை பேச்சை துவக்கியுள்ளது. தேர்தல் முடிவுகளில், தி.மு.க., கூட்டணி, 130 தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை தி.மு.க.,விற்கு உள்ளது. ஏற்கனவே, கூட்டணி ஆட்சி கோஷத்தை முன்னிறுத்தி இருக்கும் காங்கிரஸ், இம்முறை அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த பெரிய கட்சியான பா.ம.க.,வை பொறுத்தவரை, தி.மு.க.,விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்நிலை, தேர்தல் முடிவுக்கு பின் தொடருமா என்பது கேள்விக்குறி. வி.சி., - கொ.மு.க., போன்ற கட்சிகளுக்கும், கூட்டணி ஆட்சியில் பங்கு பெற ஆசையுள்ளது. இவர்களிடம் பேச்சை துவங்கியுள்ள தி.மு.க., 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற விகிதத்தில் ஒதுக்கீடு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாம்! ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது; பா.ம.க., தரப்பில் மவுனம் தொடர்கிறது. "கூட்டணி ஆட்சியில் பங்கேற்பதா, இல்லையா என்பதை, இப்போது முடிவு செய்யாவிட்டால் பரவாயில்லை. தி.மு.க.,விற்கே எங்கள் கட்சி ஆதரவு தருகிறது என்ற கடிதத்தை இப்போதே கொடுத்து விடுங்கள்' என, தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்தால், ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களில், யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், "சிட்டிங்' அமைச்சர்களில், எத்தனை பேர் மீண்டும் பதவிகளை பிடிப்பர் என்ற விவாதமும் தூள் பறக்கிறது. டி.ஆர்.பாலு, வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி, திருநெல்வேலி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரின் வாரிசுகளும், அமைச்சர் பதவியை கைப்பற்றும் ஆசையில் உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்: ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம் என்பதில், அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில், கூட்டணி ஆட்சி என்ற பேச்சே இதுவரை எழவில்லை. அத்துடன், பிரதான கூட்டணி கட்சியான தே.மு.தி.க., ஆரம்ப கட்டத்திலேயே, "கூட்டணி ஆட்சியில் பங்கேற்பதில்லை' என்பதை தெளிவுபடுத்தி, ஒதுங்கி கொண்டதும் இதற்கு காரணம். தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., எதிர்பார்ப்பது போன்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக்காக தாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கை இருந்தாலும், கணிப்பையும் மீறி, தனிப்பெரும்பான்மைக்கு சில தொகுதிகள் குறைவாக தங்கள் கட்சிக்கு கிடைத்தால் என்ன செய்வது என்ற யோசனையும், அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஆட்சி அமைக்க தேவையான, 118 தொகுதிகளில், 10 முதல், 15 தொகுதிகளையே கூட்டணியிடம் எதிர்பார்க்க வேண்டியிருக்கும். அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை பயன்படுத்திக் கொள்ளவே, அ.தி.மு.க., விரும்புகிறது. தற்போது கோட நாட்டில், ஜெயலலிதா ஓய்வில் உள்ளார். தேர்தல் முடிவுக்கு மூன்று நாட்கள் முன், அதாவது, மே 10ம் தேதி தான், சென்னை திரும்பவுள்ளார். அப்படி திரும்பும் போது, அமைச்சர்கள் பட்டியல், அதிகாரிகள் பட்டியல் போன்றவற்றை தயார் செய்து திரும்பவுள்ளார் என்கிறது அ.தி.மு.க., வட்டாரம். "சீனியர், ஜூனியர், ஜாதிக்காரர் என்ற பிரிவினை எல்லாம் இங்கு இல்லை. "அம்மா' மனதில் இடம் பிடித்தவர்களுக்கு, அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும்' என்கிறார், கொங்கு மண்டல, "மாஜி' அமைச்சர் ஒருவர்; பார்க்கலாம்!


முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...