Fwd: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..!



முக்கியக் குறிப்புகள்:

* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.

* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும் தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.

* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றிக் கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும்.

* புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான அனைத்து வழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- அவள் விகடன்
 

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...