தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்...!




இன்றும் தென் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி செய்யும் ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீது பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி தான் 

ஆய்வு முடிவு: பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத் ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D.

பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவேதழைக்கத் தொடங்கி விட்டது.

தமிழகக் கடற்கரை நெடுகிலும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகியதையும் ‘துஹ்ஃபதுல் முஜாஹிதீன்’ என்ற அரபு மொழி நூலில் அதன் ஆசிரியர் ஷேக் ஜியாவுதீன் என்பவர் பறைசாற்றுகிறார். பழவேற்காடு, கோவளம், பரங்கிப் பேட்டை, தொண்டி, பெரிய பட்டணம், பௌத்திர மாணிக்கப் பட்டணம், காயல்பட்டிணம், கோட்டாறு, குளச்சல் போன்ற நகரங்களில் முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நிலைபெற்று விட்டன.

தமிழகத்தில் முதல் பள்ளி வாசல் கி.பி. 738 -ஆம் ஆண்டு ஹாஜி. அப்துல்லா இப்னு அன்வர் என்பவரால் கட்டப்பட்டது. அப் பள்ளிவாசல் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. ‘கல்லுப் பள்ளி’ என்று இன்றளவும் அது அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் அரசாட்சி ஏற்படுத்திய வகையில் முகமதுபின் காசிம், சிந்து – முல்தான் பகுதிகளில் கி.பி. 712-இல் அராபியர் ஆட்சி ஏற்படுத்தியதையும், முகமது கோரியின் முயற்சிகளின் பயனாக கி.பி. 1260-இல் அடிமை வம்ச ஆட்சிகுத்புதீன் ஐபக் தலைமையில் ஏற்பட்டதையும், தென்னகத்தில் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதையும், மாபர் எனப்படும் மதுரை சுல்தானியத்தைப்பற்றியும் வரலாறு பகர்கிறது. ஆனால், வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்யும் போது வெளிப்படும் உண்மையென்னவென்றால், தமிழகத்தில் முதன் முதலில் அராபியர் ஆட்சி ஏற்படுத்திய முஸ்லிம் மன்னர், சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ்வே ஆவார்.

சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலி) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்.

இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார்.மார்க்கப் பணி சிறப்புடன் செய்யதமது நெருங்கிய நண்பர்களுடனும்,உறவினர்களுடனும்ஆலோசனை நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின்உதவியை நாடினர்.

‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும்,பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும்சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.

முதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகியபகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றிகண்டார்.

பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட நெல்லைப்பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம்(வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன்நெல்லையைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.

அப்போரில் திருப்பாண்டியன்தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம்புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர்.வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.

இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார்.இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ளஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார்.மதினா மாநகரின்ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப் பட்டது.இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின்எடுத்துக் காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.ஆண்டு தோறும் நடைபெறும் ‘உருஸ்’ நிகழ்ச்சியில் முஸ்லிம்களோடு இந்துக்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்பதைப் பார்க்கலாம். அவர்‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார். ‘அன்னாரது அரசாட்சி பற்றிய வரலாறில்லாமல் பாண்டியன் வரலாறு இருளாகவே உள்ளது. என்று ம.இராச சேகர தங்கமணி (பாண்டிய வரலாறு, 1978, ப. 432) வருந்துவது நியாயமன்றோ? இதுபோல் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவார்களாக.... 

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...