குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா...???


 
இல்லை...

அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது தான் திருக்குர்ஆன்.

இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.

திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.



இந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.


இக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும், அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த அருளப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.


இறுதித்தூதராக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

“இந்தக் குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்து அறிவிக்கிறது”.
(அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).

3:138. “இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது“.

38:87. ”இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை”.

இந்த குர்ஆனுடைய போதனைகள் நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானது தான்.


தனக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை இறைக்கட்டளைப்படி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உலகுக்கு எடுத்தியம்பியதாலேயே திருக்குர்ஆன் வார்த்தெடுக்க விரும்பும் நேரான வாழ்க்கைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்த முஸ்லிம் சமுதாயம் அமையப்பெற்றது. அவ்வாறு திருக்குர்ஆன் வழிகாட்டுதல்படி ஒரு சமுதாயம் அமைப்பெற்ற பிறகு, அதனை அதனால் உருவான சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.


இறைவனை இவ்வுலகின் படைப்பாளனாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் இருக்கின்றதே தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.


திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள், அதனை கொண்டு வந்த தூதரின் சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவதற்காக அத்தூதருக்கு அருளப்பட்டது. எனவே அவ்வேதங்கள் அத்தனி சமுதாயத்திற்கு மட்டும் உரியது என்ற வாதத்தில் உண்மையுண்டு. ஆனால் அதே நேரம் திருக்குர்ஆன் தனியொரு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த அருளப்பட்டதல்ல.


மொத்த உலகமும்.. படைத்தவனை மறந்து, கண்டதையெல்லாம் வணங்கி, தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரம், அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, இறைவனின்பால் மொத்த உலகையும் அழைக்க அருளப்பட்டதே, இறுதி வேதமான இத்திருக்குர்ஆன் ஆகும்.


எனவே இது தனியொரு சமுதாயம் உரிமை கொண்டாடும் வேதமல்ல. மாறாக அகிலாத்தாருக்கெல்லாம் வழிகாட்டியாக – நல்லுபதேசமாக – அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டதேயாகும்.


"இறைவன் அனைத்தையும் மிக நுட்பமாக அறிந்தவன்".

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...