ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி...
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி. இதனால், கடைசி நேரக் காத்திருப்பையும் தவிர்க்கலாம்.
வரிசைக்கு மரியாதை
வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசை யில் நில்லுங்கள். மாற்றுத்திறனாளி களுக்கும் கைக்குழந்தையைச் சுமந்து இருக்கும் பெண்களுக்கும் வாக்கு அளிப்பதில் முன்னுரிமை அளிப்பார்கள். முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள். தேவையற்ற சச்சரவு களைத் தவிர்க்க இது உதவும்.
'நீங்கள் யார்?’ - பதற்றம் இன்றிப் பதில் அளியுங்கள்
ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனு மதிப்பார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த வுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா; அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் சொல்வார். இதன் மூலம், தேர்தல் முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்துகொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.
ஒரு துளி மை - கௌரவச் சின்னம்
நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு, வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.
வாக்களிக்க அனுமதி
நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத் தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.
இது வரலாற்றுத் தருணம்
ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் இடத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். இந்த தேசத்தை வழிநடத்தும் தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கு நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.
யாருக்கு ஓட்டு... சொன்னால் குற்றம்
நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக் குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது!
உங்களுக்கு ஓட்டு இருக்கிறதா - எப்படித் தெரியும்?
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் ஓட்டு இருக்கும். மார்ச் 16-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கும்கூட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு, தேர்தல்ஆணையம் அடையாள அட்டைகளை அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே அடையாளச் சீட்டுகளை வீடுகள்தோறும் விநியோகிக்கிறது. அடையாளச் சீட்டு உங்களைத் தேடி வந்தால், ஓட்டு இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால், வாக்குச்சாவடிக்குப் போய் உறுதிசெய்துகொள்ளுங்கள்!
'49 ஓ’ போடுவது எப்படி?
நீங்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை என்றால், உங்கள் அதிருப்தியைப் பதிவுசெய்யச் சட்டம் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஓட்டு அளிக்க விரும்பவில்லை எனில், உடனே அதை வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர் உங்க ளிடம் இருந்து வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொண்டு, 'இவர் ஓட்டளிக்க விரும்பவில்லை’ என்று தனியே ஒரு பதிவேட்டில் குறித்துக்கொள்வார். அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இப்போது நீங்கள் '49 ஓ’ போட்டுவிட்டீர்கள்!
பட்டியலில் பெயர் இருக்கிறது; அடையாள அட்டை இல்லை - என்ன செய்யலாம்?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.
பட்டியலில் பெயர் இருக்கிறது; ஆனால், உங்கள் படம் இல்லை - என்ன செய்யலாம்?
சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் மீது சந்தேகப்பட்டால், என்ன செய்வது?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் நீங்கள் வாக்களிப்பது 'சவாலுக்குரிய ஓட்டு’!
உங்கள் பெயரில் ஏற்கெனவே மற்றொருவர் வாக்களித்து இருந்தால், என்ன செய்வது?
முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!
உங்களுக்கு யாராவது பணம் கொடுக்க முற் பட்டால், மிரட்டி ஓட்டு கேட்டால், வாக்களிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், யாரிடம் முறையிடுவது?
காவல் துறையினரிடம் முறையிடலாம். தலைமைத் தேர்தல் அலுவலர், தொகுதி அளவில், வாக்குப் பதிவு அலுவலர்... வட்ட அளவில், துணைத் தேர்தல் அலுவலர்... தொகுதி அளவில், தேர்தல் அலுவலர்.., மாவட்ட அளவில், மாவட்டத் தேர்தல் அலுவலர்... மாநில அளவில், தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நீங்கள் அணுகலாம்!