எங்கே போய் முடியும், இந்த மின்வெட்டு? தேர்தலுக்கு பின் பொதுமக்கள் தூக்கமிழப்பு


கோவை: மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்பது யாரும் அறிய முடியாத மர்மமாகிவிட்டது. பகல், இரவு பாகுபாடின்றி அறிவிக்கப்படாத நேரங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு வரை காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை, பகுதி வாரியாக 2 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தது. அதன்பின் மின் தடையை மூன்று மணி நேரமாக அதிகரித்து, தற்போது நான்கு மணி நேரமாக எகிறிவிட்டது. தேர்தலுக்கு முன்பு வரை இரவில் மின்தடை ஏற்பட்டதில்லை. மின்வெட்டு ஏற்பட்டால் தூக்கமிழக்கும் மக்கள் மத்தியில் அரசு மீதான அதிருப்தி அதிகரித்துவிடும் என்ற முன்னெச்சரிக்கையுடன் மின் வாரியம் செயல்பட்டது. தற்போது நிலைமை மாறி, இரவிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. தூக்கம் இழக்கும் மக்கள் காலையில் எழும்போதே புலம்பத் துவங்கிவிட்டனர். வேலைக்கு கிளம்பும் பெண்கள் சட்னி அரைப்பது முதல் அரக்க பறக்க பணிக்கு கிளம்புவது வரை அனைத்துக்கும் மின்சாரத்தை நம்பியுள்ளனர். காலையில் மின்வெட்டு ஏற்படும் போது சமையலறை வேலைகள் முடங்கி அவதிக்கு உள்ளாகின்றனர்.
அதேபோன்று, மின்வெட்டால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இயந்திரம் இயங்க துவங்கியதும், “மின் தடை ஏற்படாமல் இயங்க வேண்டும்’ என தொழிலாளர்கள் வேண்டிக்கொள்ளாத குறையாக திடீர், திடீரென மின் தடை ஏற்படுகிறது. இதனால், எந்த நிமிடத்திலும் மின்சப்ளை நின்று விடும் என்ற பதை பதைப்புடன் பணியாற்றுகின்றனர். மின்சாரம் தடைபட்டு விட்டால் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு, சந்தை நெருக்கடிகள் என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தொழிற்சாலைகள் மாலை 6.00 முதல் 10.00 மணி வரை இயங்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இத்துடன் பகலில் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக மின்சப்ளை தடைபடுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இயந்திரங்கள் வெகு விரைவில் இயக்க திறனை இழந்து பழுதடைந்து விடுகின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைவு ஏற்படுவதால் பொருட்களின் விலை கூடிவிடும் வாய்ப்பும் உள்ளது.
முழுக்க, முழுக்க மின்சாரத்தை நம்பியுள்ள மிகச்சிறு வர்த்தகர்களும் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடன், கடனுக்கான வட்டி, வாடகை கடையாக இருப்பின் அதற்கான வாடகை, குடும்பச் செலவுக்கான தொகை போன்றவற்றை ஒவ்வொரு மாதமும் சம்பாதிப்பது பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டாலும், தற்போது மோட்டார் பம்ப் செட்டுகளை இயக்க மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே முழுமையாக மோட்டார் பம்ப் செட்டுகளை இயக்கி தண்ணீர் பாய்ச்ச முடியும் என்ற கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இருமுனை மின்சாரமும் கூட விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை.
மின்வெட்டால், கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விவசாய உற்பத்தி குறைவால் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விளை பொருட்களின் விலை விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கட்டுபடியாகும் விலையாக இருந்தாலும், மின்வெட்டால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. மக்காச்சோளம், பருத்தி, கடலை உள்ளிட்டவற்றின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இவற்றின் விற்பனை விலை பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும். விரைவில் விவசாய விளை பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காண திட்டமிடாமல், தேர்தலின் போது போட்டி, போட்டு இலவசங்களை அள்ளி வீசியுள்ளன அரசியல்கட்சிகள். எனினும், இவற்றை எதிர்த்து யாரும் வாய்திறக்கவில்லை. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வை எந்த கட்சிக்கும் இல்லை என்பதே தொழில்துறையினர் கருத்தாக உள்ளது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...