தினசரி குவாட்டர், பிரியாணி உபசரிப்புடன், வீடு திரும்பும் போது தலைக்கு 200 ரூபாய் வழங்கப்படும்.
தேர்தல் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு தினசரி குவாட்டர், பிரியாணி உபசரிப்புடன், வீடு திரும்பும் போது தலைக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என கட்சியினர் அறிவித்து, பிரசாரத்திற்காக ஆட்களை திரட்டி வருகின்றனர்.
தேர்தல் வந்து விட்டாலே, பிரியாணிக்கும், குவாட்டருக்கும் பஞ்சமிருக்காது. தொண்டர்கள் மட்டுமல்லாமல், பிரசாரத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கும் இதே உபசரிப்பு தான். இதனால், தேர்தல் சமயத்தில் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் வேலைக்கு செல்லாமல், பிரசாரத்திற்கு செல்ல ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில், பிரியாணி உள்ளிட்ட உபசரிப்புகள், "கவனிப்புகள்' நடைபெறுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பிரியாணி கடைகள், மதுபான கடைகள் மீது கண்காணிப்பு வைத்திருக்கும் தேர்தல் கமிஷன், வாகனங்களில் பணம் கொண்டு செல்வதைத் தவிர்க்க, தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளது. இதனால், வழக்கமாக தேர்தல் கால உபசரிப்புகள் இந்த தேர்தலில் கிடைக்காதோ என்று தொண்டர்கள் ஏங்கித் தவித்தனர். அவர்கள் ஏக்கத்தை தீர்த்தும் வைத்து, புண்ணியம் கட்டிக் கொண்டது கட்சிகள்.,
போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரத்திற்கு ஆள் பிடிக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். ரகசியமாக தொண்டர் படையினரை களமிறக்கி, "பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு மதியம் பிரியாணி, மாலையில் குவாட்டர் சரக்கு, வீடு திரும்பும் போது 200 ரூபாய் வழங்கப்படும்' எனக் கூறி ஆட்களை கவர்ந்து வருகின்றனர். வேலையே செய்யாமல், பிரியாணி, மாலையில் சரக்கு, 200 ரூபாய் என கவனிப்பு கிடைப்பதால், தொண்டர்களும், கூலி வேலைக்கு செல்பவர்களும் ஆர்வமாக, "தேர்தல் பிரசார வேலை'யில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசியல் கட்சியினரின் விருந்து :
தேர்தல் கமிஷன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, அரசியல் கட்சியினர் தொண்டர்களை குஷிப்படுத்த, அசைவ விருந்துகளை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கட்சியினர் ஆங்காங்கே அசைவ விருந்துகள் நடத்தி வருகின்றனர். தமிழகத்துக்கு தேவையான ஆடுகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மார்ச் 1 முதல் தேர்தல் கமிஷனின் கிடுக்கிப் பிடி சோதனை காரணமாக, அங்கிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும், ஆடுகளின் வரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய இடங்களில் இருந்து வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும் கறிக்கோழிகளுக்கு முறையான ஆவணங்களை கோழிப்பண்ணையாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இந்த ஆவணங்களை சிறிய நிறுவனங்களால் சமர்ப்பிக்க இயலவில்லை. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மெட்டலா, சேலம் மாவட்டம் மேச்சேரி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கரூர் ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படும், நாட்டுக் கோழியின் விற்பனையும் பாதித்துள்ளது. கட்சியினர் பல இடங்களில் வியாபாரிகளிடம் இருந்து, மொத்தமாக இவற்றை வாங்கிச் சென்று விடுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் பிராய்லர் கறிக்கோழி கிலோ, 110 ரூபாய்க்கு விற்றது, 140 ரூபாய்க்கு விற்கிறது. நாட்டுக் கோழி உயிருடன் கிலோ, 170 ரூபாய்க்கு விற்றது, 190 ரூபாய்க்கும் தனிக்கறி கிலோ, 230 ரூபாய்க்கும் விற்றது, 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டுக்கறி கிலோ, 300 ரூபாய்க்கு விற்றது, ஏரியாவுக்கு ஏற்ப, 320 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை அதிகரிப்பால் மீன்களின் விலையும் ரகம் வாரியாக, 10 முதல் 110 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு, அரசியல் கட்சியினரின் திடீர் விருந்து உபசரிப்பு தான் காரணம் என, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.