அம்மி,உரல்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை – கலைஞரின் தாராள தேர்தல் அறிக்கை

DMK therthl arikkai
சென்னை:கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தை கவரும் வகையில் சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம், சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை ஆகியன அடங்கும்.
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
நோயா?  கவலையேப்பட வேண்டாம்!  டாக்டர் வீடு தேடி வருவார்!
மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.
வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக 30 கிலோ அரிசியும் இலவசம்.
பரம ஏழைகளுக்கு ரேசன் கடைகளில் மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும்.
இலவச டயாலிசிஸ் சிகிச்சை:
சிறுநீரக பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை, அரசுப் பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களில் இருந்து 4 மாதங்களாக அதிகரிக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியம்:
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் ரூ. 2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
மாணவர்கள் பெற்ற கல்விக் கடனுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்.
சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோவைக்கு விரைவாக செல்லலாம்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க நடவடிக்கை, சென்னையிலிருந்து மதுரை, கோவைக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை என்பது உள்பட ஏராளமான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் மேலும் பல திட்டங்கள் பின்வருமாறு:
- ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வுகள் எப்போதும் வேண்டாம் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
- நதி நீர் இணைப்பை தொடர்ந்து வலியுறுத்துவோம். முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
- செம்மொழியாம் தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
- உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களில் நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்.
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாடுபடுவோம்
- மத்திய தேர்வாணைய தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் எழுத நடவடிக்கை எடுப்போம்.
- ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.
- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தோறும் வேளாண் உற்பத்திச் சாதனங்கள் நியாயமான வாடகையில் விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு.
- இலவச மின்சாரத் திட்டத்தை தென்னை வளர்ப்பு உள்ளிட்ட தோட்டக்கலை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்துவோம்
- நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை மூலம் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
- படித்த இளைஞர்களுக்காக மாவட்டந்தோறும் சிறப்புத் திறன் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
- வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு உடை, உணவு, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு, வருமானத்திற்கும் வழி காணக் கூடிய பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒருங்கிணைத்து அவர்களின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்படும்
- டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காளாண் வளர்ப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்துவோம்.
- சொட்டு நீர்ப்பாசனத்துக்காக, விவசாயிகளுக்கு தற்போது அளிக்கப்படும் 65 சதவீத மானியம் சிறு குறு விவசாயிகளுக்கு 90 சதவீதமாக உயர்த்தப்படும்.
- சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.
- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போல, மீன்பிடியின் போது பாதிப்புக்குள்ளாகும் ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தி மீனவர் நலனைப் பாதுகாப்போம்.
- விசைப் படகுகளுக்கு மாதந்தோறம் வழங்கப்படும் 1500 லிட்டர் டீசல் மானியம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு 300 லிட்டர் மானியம் என்பதை முறையே, 2000 லிட்டர் டீசல், 500 லிட்டர் டீசலாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.
- கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்போம்.
- சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை போல திருச்சியிலும், மதுரையிலும் மன நல மருத்துவமனைகள் அமைப்போம்.
- தாம்பரம் போல மதுரையில் காச நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
- பச்சிளம் குழந்தகளைத் தாக்கும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கு மாநில அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
- மாவட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையங்களை அமைப்போம்.
- மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்போம்.
- பச்சிளம் குழந்தகளைத் தாக்கும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கு மாநில அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
- மாவட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையங்களை அமைப்போம்.
- மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்போம்.
- வட்டார மருத்துவமனைகளில் எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.
- வரும் முன் காப்போம் திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு விரிவுபடுத்துவோம்.
- கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்துவதோடு, சாலை விபத்துகளுக்கும் இந்தத் திட்டத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வோம்.
- அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 சீருடை வழங்கப்படும்.
- பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டங்களே கிடையாது என்ற நோக்கத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்கள் அமைப்போம்.
- அரசுக் கல்லூரிகளிலும், தொழில்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு, முதலாவது ஆண்டிலேயே இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.
- மாணவர்கள் பெற்ற கல்விக் கடனுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்
- மாவட்டந்தோறும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்படும்.
- பின் தங்கிய மாவட்டங்களில் சிறு குறு தொழிலகள் தொடங்க ஊக்கத்திட்டம் தொடங்கப்படும்.
- மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மதுரை, கோவைக்கு அதி விரைவு தொடர் வண்டி – புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுப்போம்.
- மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.
- முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ஓய்வூதியம் ரூ. 500 என்பதிலிருந்து ரூ.750 ஆக அதிகரிக்கப்படும்.
- மினி பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை.
- நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ரூ.600 ஆக அதிகரிக்கப்படும்.
- 60 வயதைத் தாண்டிய நெசவாளர்களுக்கு ஓய்வூதியம்.
- கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.
- சாயக்கழிவுகளால் ஏற்படும் பிரச்சினைக்கு இயற்கை முறையை கையாண்டு தீர்வு காண முயற்சிப்போம்.
- தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம்.
- சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு.
- இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை.
- தனியார் நிறுவனங்களில் ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர நடவடிக்கை.
- மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை மாற்றும் வகையில் நவீன இயந்திரங்களை அறிமுகப்படுத்துவோம்.
- திருநங்கையர்களுக்கு தனியாக சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.
- வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை.
- கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போது வழங்கப்படும், உதவி மானியம் ரூ. 75 ஆயிரம் என்பதிலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.
- அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்.
- குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
- சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்.
- சென்னை உள்பட பெரிய நகரங்களில் புதிய ஏரிகளை உருவாக்கி குடிநீர் ஆதாரங்களை அதிகரிப்போம்.
- சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பிற மாநகராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்துவோம்.
- கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும்.
- திருக்கோவில் காலி நிலங்களை பாதுகாக்க, வருவாயைப் பெருக்கும் வகையில், நிலவங்கி ஒன்று நிறுவப்படும்.
- அரசு சான்றிதழ்களை ஒரே இடத்தில் பெற பொதுமக்கள் சேவை மையம் தொடங்கப்படும்.
- அரசுப் பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களாக உள்ளது என்பதை 4 மாதங்களாக அதிகரிப்போம்.
- ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.
- இலவச எரிவாயு அடுப்புத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
- இலவச டிவி திட்டம் தொடரும்.
- ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ. 25,000 என்பது 30,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- கர்ப்பிணிப் பெணக்ளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.6000 என்பதிலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்துவோம்.
- பெண்களுக்கு இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும். பெண்கள் எதைக் கோருகிறார்களோ அதைப் பொறுத்து கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.
இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...