மறுக்கப்படும் நீதி: நிராசையில் ரிஸ்வானின் குடும்பம்

புதுடெல்லி,மார்ச்.2:கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆசிரியர் ரிஸ்வானுர் ரஹ்மான் கொல்லப்பட்டதுத் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
கடந்த 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி டம்டம் ரெயில் தண்டவாளத்தில் ரிஸ்வானுர் ரஹ்மான் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

பிரபல தொழிலதிபர் அசோக் டோடியின் மகளான பிரியங்காவை ரிஸ்வான் காதலித்து திருமணம் செய்து ஒரு மாதம் கழித்து கொல்லப்பட்டுள்ளார்.
ரிஸ்வானின் மரணம் கொலை எனக்கூறி பிரியங்காவின் தந்தை அசோக் டோடி, அவரது சகோதரர் ப்ரதீப், சகோதரியின் கணவர் அனில் சரோசி மற்றும் அன்றைய போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் இவர்களுக்கெதிராக கொலைவழக்கு பதிவுச்செய்ய உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச்செய்து நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், மேற்கண்ட நபர்கள் மீது ஐ.பி.சி 306-வது பிரிவின்படி ரிஸ்வானுர் ரஹ்மானை தற்கொலைக்கு தூண்டியதுத் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொள்ள தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற உத்தரவை உறுதிச்செய்தது உச்சநீதிமன்றம்.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது ஐ.பி.சி 302(கொலை), 120 பி(சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின் படி வழக்குப்பதிவுச் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கெதிராக சி.பி.ஐயும், அசோக் டோடியும் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்துக்கொண்டு புதிய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டுமெனவும் கூறியது. ஆனால், சி.பி.ஐக்காக வாதாடிய சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஏற்கனவே சி.பி.ஐ விரிவாக விசாரணை நடத்திவிட்டதால் புதியதாக விசாரணை நடத்ததேவையில்லை எனவும், அசோக் டோடியும், அவரது உறவினர்களும் ரிஸ்வானை தற்கொலைக்கு தூண்டிய முடிவுக்கு சி.பி.ஐ வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரிஸ்வானுர் ரஹ்மானின் மரணத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துச்செய்த உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து ரிஸ்வானின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இத்தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர். ரிஸ்வான் தற்கொலைச் செய்திருப்பார் என்பதை நாங்கள் நம்பவில்லை. அவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார் என ரிஸ்வானின் சகோதரர் ருக்பானுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தனது மகன் கொல்லப்பட்டு மூன்றரை வருடங்கள் கழிந்துவிட்டன எனவும், இதுவரை நீதிக் கிடைக்கவில்லை எனவும் ரிஸ்வானின் தாயார் கிஷ்வர் ஜஹான் தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...