மது தீமைகளின் தாய்
தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா?
தள்ளாடி நடக்க வேண்டுமா?
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்று பாடினான் மகாகவி. ஆனால் இன்றோ "செந்தமிழ் நாடெனும் போதினிலே எங்கும் சாராயம் ஓடுது வீதியிலே" என மாற்றி வாசிக்கும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள் நிரம்பி வழிகின்றது. மது வீட்டுக்கும் நஷ்டம், நாட்டிற்கும் நஷ்டம், அரசுக்கு மட்டும் கொள்ளை இலாபம்?
போதை ஏற ஏற தடுமாறுகிறது இளைஞனின் நேரான பாதை. அப்பாவி மனைவிமார்களின் கண்ணீர் துளிகளால் அரசு மதுக்கடையின் கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகிறது. மதுக்கடை வாசல்களில் வீசுகிறது மரணத்தின் வாசம். சிறந்த குடிமகன்களை உருவாக்க வேண்டிய அரசாங்கம் சீரழிந்த குடிகாரர்களை உருவாக்கி வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசத்திற்கே முன்மாதிரியாக இருந்த தமிழகம், இன்று மது விற்பனையில் தேசத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது என்பது எவ்வளவு வெட்கக் கேடானது.
"மது தீமைகளின் தாய்" என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். மது விற்பனை அதிகரிக்க அதிகரிக்க கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக தீமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மது விற்பனையில் அரசாங்கத்தின் வருமானம் வேண்டுமானால் உயரலாம், ஆனால் காற்றில் பறப்பதோ தேசத்தின் மானம். தேசத்தின் பல இடங்களிலும் "விலைமதிப்பற்ற மனித உயிர்களை மது குடித்துக் கொண்டிருக்கிறது".
இந்த சூழ்நிலையில், மதுவிற்கு எதிராக அணி திரள வேண்டியது மனித நேய மிக்கவர்களின் அவசியமான பணியாகும். தீமைகளின் ஆணிவேரான மதுவை வெட்டி சாய்ப்பதற்கு நல்லவர்கள் ஓர் அணியில் திரள வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் லாட்டரியை அரசு தடை செய்ததைப் போன்று பொதுமக்களை போதை எனும் படுகுழியில் தள்ளும் மது விற்பனையையும் அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும். நாளைய தலைமுறை தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா? தள்ளாடி நடக்க வேண்டுமா?
சரியான முடிவெடுப்போம்.
மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தில் நம் கரங்களை ஒன்றிணைப்போம்.
மது எதிர்ப்புப் பிரச்சார இயக்கம் :
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்
--
Regards
Hasan mohamed
www.themessage.tk
--
Regards
Hasan mohamed
www.themessage.tk