[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.
''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.
பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.
அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!
இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.]
o அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.
o அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.
o அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.
o அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.
இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான ‘அல் அஹ்ஸாப்‘ – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.
இதோ அந்த திருவசனம்;
”நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்;
நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;
இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்;
உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்;
பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்;
தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;
நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்;
தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;
அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -
ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.” (33:35)
இதில் ஒன்பதாவதாக ”தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.
திருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.
ஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, ”யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்” என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.
ஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது ”எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது” என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.
இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.