இஸ்லாத்தில் சிறந்தது:
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.
இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து ஸலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236
1. இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.
2. ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்முக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றும் ஸலாம் கூறுதலாகும்.
3. ஒரு சகோதரரை சிரித்த முகத்துடன் சந்திப்பதும். நற்காரியங்களில் உள்ளதாகும்.
4. முஸாஃபஹா என்பது ஒருவரைச் சந்திக்கும்போது அவருடைய வலது கரம் பற்றுவதாகும். ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும். இரு கரம் பற்றிக் குலுக்குவது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
5. இருவர் சந்திக்கும் போது முதல் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்குரியவராவார்.
6. நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு ஸலாம் கூறுவதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
7. சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் கூறவேண்டும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும். பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறலாம்.
8. ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
9. ”அஸ்ஸலாமு அலைக்க” என்று கூறுவது கூடாது., இது இறந்தவர்களுக்குரியதாகும்.
10. வார்த்தைகள் இல்லாமல் ஒருவரைச் சந்திக்கும் போது முன்கைகளாலும் தலையைத் தாழ்த்தியும் சைக்கினையின் மூலமும் ஸலாம் கூறக்கூடாது. இது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரம் ஆகும்.
11. தூரத்தில் உள்ளவர்களுக்கு ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று வார்த்தைகளைக் கூறி கைகளை அசைத்து ஸலாம் கூறலாம்.
12. ஒருவருக்கு ஸலாம் கூறும் பொழுது அவருக்கு மற்றொரு முறை ஸலாம் கூறலாம். இவ்வாறு மூன்று முறை கூறிக்கொள்ளலாம்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.