புதுடெல்லி,செப்.30:45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எல்லா இந்தியர்களின் முக்கிய விபரங்களை அடக்கி தயாராகிக் கொண்டிருக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை(multi-purpose national ID) ஆபத்தானதும், பொருளற்றதும், தவறாக பயன்படுத்தும் வாய்ப்பை உருவாக்குவதுமாகும் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்டவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டுமென கோரியுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளால் ஏற்கனவே கைவிடப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியா இவ்வளவு அவசரம் காண்பிப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த அறிக்கையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 17 பிரபல பிரமுகர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

தேசத்தின் குடிமக்களின் அந்தரங்க விஷயங்களில் அத்துமீறுவதும், அதன்மூலம் அவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய விபரங்களை சேகரிப்பதற்கு முன்பு பாராளுமன்ற அனுமதியை பெறவோ, பொதுமக்களிடத்தில் விவாதிக்கவோ செய்யவில்லை.

பொதுவிநியோக முறை, தேசிய தொழில் உறுதி திட்டம் உள்ளிட்டவைகளின் சுமூகமான செயல்பாட்டிற்கு இத்திட்டம் உதவும் என மத்திய அரசு கூறினாலும், அது எவ்வாறு என விவரிக்கவில்லை. விபரங்களை கையாளுவது யார்? அவை தவறான நபர்களிடம் சென்று அடையாமலிருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவைக் குறித்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை அதாரிட்டி மசோதா தெளிவாக்கவில்லை.

குடிமக்களின் அந்தரங்க விஷயங்களில் அத்துமீறுகிறது, அதிக செலவை ஏற்படுத்துகிறது என்ற காரணங்களால் வெளிநாடுகள் இத்திட்டத்தை நிராகரித்துவிட்டன.

30 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவும், ஆறுகோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இங்கிலாந்தும், இரண்டு கோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஆஸ்திரேலியாவும் நிராகரித்த திட்டத்தைத்தான் 100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா செயல்படுத்தப் போகிறது என பிரமுகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அடையாள அட்டையைக் குறித்து பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்களை கவனத்தில் கொண்டு திட்டத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். இதன் அரசியல் சட்ட அந்தஸ்து குறித்து ஆய்வுச்செய்ய வல்லுநர்களைக் கொண்ட கமிட்டியை நியமிக்க வேண்டும். இவ்வாறு 17 பிரமுகர்கள் கையெழுத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வி.ஆர்.கிருஷ்ணய்யர், வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர், வழக்கறிஞர் கண்ணபிரான், நீதிபதி ஏ.பி.ஷா, சமூக சேவகர் கவிதா ஸ்ரீவஸ்தவா, ஷப்னம் ஹாஷ்மி, அருணா ராய் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...